கைவிடும் நிலையில் இருந்த பைக் கம்பெனிக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் டிவிஎஸ்! 2027க்குள் இரு பைக்குகள் அறிமுகம்
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்திற்கு சொந்தமான பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் பிராண்டான நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் (Norton Motorcycles), தற்போது டிவிஎஸ் மூலம் புத்துயிர் பெற்று வருகிறது. இதன் மூலமாக, இந்த ஆண்டு இந்தியாவில் நார்டன் பிராண்ட் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், டிவிஎஸ் நிறுவனம் நார்டன் மேன்க்ஸ் ஆர் வி4 (Norton Manx R V4) சூப்பர் பைக்கிற்கான காப்புரிமையை இந்தியாவில் பெற்றுள்ளது.
நார்டன் மேன்க்ஸ் ஆர் வி4 பைக்கிற்கு டிவிஎஸ் காப்புரிமை
இந்த மோட்டார்சைக்கிள் நார்டன் நிறுவனத்தின் முதன்மை மாடலாக அமைய உள்ளதுடன், மிகவும் சக்திவாய்ந்த வி4 (V4) என்ஜினைக் கொண்டிருக்கும். இந்த அதிநவீன நார்டன் பைக் முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற EICMA 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் (Norton Atlas Adventure) போன்ற பிற நார்டன் பைக்குகளுடன், இந்த மோட்டார்சைக்கிளும் அறிமுகப்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை இதுக் காட்டுகிறது.

நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் பைக்குகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும். ஆனால் மேன்க்ஸ் ஆர் வி4 சூப்பர்பைக் ஆனது இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. EICMA 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட போது குறிப்பிடப்பட்ட விபரங்களின்படி, புதிய மேன்க்ஸ் ஆர் சூப்பர்பைக் 1200சிசி வி4 என்ஜின் மூலம் இயங்கும்.
இது அதிகப்பட்சமாக 206 எச்பி ஆற்றலையும், 130 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. நார்டன் மேன்க்ஸ் ஆர் பைக்கில் DRL-களுடன் கூடிய முழு எல்இடி விளக்கு அமைப்பு உள்ளது. ஒற்றை பக்க ஸ்விங்கார்ம் கொண்ட அலுமினியம் மோனோகோக் பிரேமில் இந்த பைக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் கார்பன் ஃபைபர் சக்கரங்களுடன் செமி-ஆக்டிவ் மர்ஸோசி (Marzocchi) சஸ்பென்ஷன் உள்ளது.

பாதுகாப்பிற்கு இந்த பைக்கில் பிரெம்போ (Brembo) பிரேக்குகள், கார்னரிங் ஏபிஎஸ் (ABS), என்ஜின் பிரேக் கண்ட்ரோல், ஸ்லிப் கண்ட்ரோல் மற்றும் வீலிங் கண்ட்ரோல் ஆகியவை உள்ளன. மேலும், இந்த மோட்டார்சைக்கிளில் ஸ்மார்ட்போன் இணைப்புடன் கூடிய 8-இன்ச் TFT கன்சோல் திரை, ரைடு மோட்கள், சாவியில்லாமல் பைக்கை ஸ்டார்ட் செய்யும் வசதி, மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இரு வழிகளில் செயல்படும் குயிக் ஷிஃப்டர் போன்ற பல நவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் பைக்குகள்
இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் மற்றொரு நார்டன் மோட்டார்சைக்கிள் அட்லஸ் ADV ஆகும். இது ஸ்டாண்டர்ட் மற்றும் ஜிடி (GT) பதிப்புகளாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அட்லஸ் அட்வென்ச்சர் பைக் 585சிசி, 270-டிகிரி கிராங்க், இரட்டை-சிலிண்டர் என்ஜினைப் பயன்படுத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிள் டிவிஎஸ் மோட்டாரின் ஓசூர் ஆலையில் தயாரிக்கப்பட்டு உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும்.
இது இந்தியாவில் பலமுறை சோதனையின் போது காணப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிள் நடுத்தர எடை கொண்ட இந்தியாவின் அட்வென்ச்சர் பைக்குகள் பிரிவில் போட்டியிடும். இது இரட்டை புரொஜெக்டர் LED ஹெட்லேம்ப்கள், DRL-கள் மற்றும் கார்னரிங் விளக்குகளுடன் கூடிய வலிமையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. வசதியான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக இதில் சரிசெய்யக்கூடிய லீவர்கள், ஃபுட்பெக்குகள் மற்றும் விண்ட்ஸ்கிரீன் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரண்டு நார்டன் பைக்குகளும் இந்த ஆண்டு உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மேன்க்ஸ் ஆர் வி4 பைக்கில் நேக்கட் வெர்சனும் வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படும். டிவிஎஸ் நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிள்களை நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள பிரத்யேக ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் டிரையம்ப் (Triumph), டுகாட்டி (Ducati), கேடிஎம் (KTM) மற்றும் ஏப்ரிலியா (Aprilia) போன்ற பிரீமியம் பைக் பிராண்ட்களுக்கு முக்கிய போட்டியாளராக மாறும்.


Click it and Unblock the Notifications









