டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக் கூட இப்போ இந்த விலையில் கிடைக்குறது இல்ல! கம்பெனிக்கு எப்படி கட்டுப்படி ஆகும்?
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனையில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் டிவிஎஸ் நிறுவனத்தின் கவனம் BaaS (Battery-as-a-Service) எனப்படும் பேட்டரியை சேவையாக வழங்குவதன் பக்கமும் திரும்பியுள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் BaaS ஆப்ஷனை பெற்றுள்ளது. அது என்ன டிவிஎஸ் ஸ்கூட்டர், இதன்படி அதனை எந்த விலையில் வாங்கலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
BaaS இந்த வார்த்தையை சமீப காலமாக அடிக்கடி கேள்விப்பட்டு வருகிறோம். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதில் BaaS-இன் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. ஏனெனில், எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளில் ஒன்று, பெட்ரோல்/ டீசலை நிரப்புவது போல் அவற்றை விரைவாக சார்ஜ் செய்ய முடிவதில்லை என்பதாகும்.

இந்த குறையை களையெடுக்கும் விதமாகவே BaaS கொண்டுவரப்பட்டது. இதன்படி, எலெக்ட்ரிக் வாகனத்திற்கான பேட்டரியை வாகன உரிமையாளர் சொந்தம் கொண்டாட முடியாது. மாறாக அதனை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ தான் எடுக்க முடியும். குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது குறிப்பிட்ட சார்ஜ் அளவிற்கு பயன்படுத்திய பின்னர் அதே மையத்தில் பேட்டரி உடன் கட்டணத்தை செலுத்தி சார்ஜ் நிரம்பிய பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பேட்டரி சுழற்சி முறையை பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கையில் எடுத்திருக்கும் நிலையில், இதே பாணியை இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனமான டிவிஎஸ் மோட்டாரும் பின்பற்ற ஆரம்பித்துள்ளது. இதன்படி, டிவிஎஸ் நிறுவனம் தனது விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான ஆர்பிட்டர் வி1 (Orbiter V1)-ஐ BaaS ஆப்ஷனில் அறிமுகம் செய்துள்ளது.

ஆர்பிட்டர் வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் BaaS ஆப்ஷனில் 1.8kWh பேட்டரி உடன் கிடைக்கும். BaaS ஆப்ஷனில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் விலை ரூ.49,999 மட்டுமே ஆகும். மத்திய அரசாங்கத்தின் பிரதமர் இ-டிரைவ் (PM e-Drive) திட்டத்தின்படி மானியம் கழிய, இந்த விலை ஆகும். இந்த மானியம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
டிவிஎஸ் ஆர்பிட்டர் வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை BaaS ஆப்ஷன் இல்லாமலும் வாங்கலாம். அப்போது பேட்டரியும் கிடைப்பதால், ஸ்கூட்டரின் விலை ரூ.84,500 ஆகும். ஆர்பிட்டர் வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 1.8kWh பேட்டரி ஆப்ஷனில் மட்டுமே BaaS ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இல்லாமல், 3.1kWh பேட்டரி ஆப்ஷனிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது.
அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்படும் டிவிஎஸ் ஆர்பிட்டர் வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக 86கிமீ வரையில் ரேஞ்சை வழங்கக்கூடியது என சான்றளிக்கப்பட்டுள்ளது. இந்த இ-ஸ்கூட்டரின் பேட்டரியை 2 மணிநேரம் 20 நிமிடங்களில் 0-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிட முடியும். இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் விஸர் உடன் எல்இடி ஹெட்லைட் வழங்கப்படுகிறது.
இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரின் ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்படும் கலர் எல்சிடி க்ளஸ்ட்டர் திரை உடன் மொபைல் போனை இணைப்பதன் மூலம் போனுக்கு வரும் அழைப்புகளை திரையிலேயே கண்ட்ரோல் செய்யலாம். இந்த ஸ்கூட்டரில் 845மிமீ-இல் நன்கு நீளமான இருக்கை வழங்கப்பட, ஓட்டுனர் கால் வைப்பதற்கான ஃபுட்போர்டு பகுதி ஆனது 290மிமீ நீளத்தில் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: BaaS முறையை பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன. அந்த வரிசையில் டிவிஎஸ் மோட்டாரும் இணைந்துள்ளது. இதன் விளைவாக, டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆரம்ப விலை வெறும் ரூ.49,999 ஆக குறைந்துள்ளதால், இது ஆர்பிட்டர் வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையை பெரிய அளவில் உயர்த்தும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








