அப்பாச்சி பைக்குகளிலேயே ரொம்ப பெருசு! டிவிஎஸ் முடிவு பண்ணிடுச்சு... BMW உடன் சேர்ந்து உருவாக்குன என்ஜின் உடன்!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) இந்தியாவில் 'டேன்ஜென்ட் ஆர்.ஆர் கான்செப்ட்' (Tangent RR Concept)-க்கு காப்புரிமையை பெற்றுள்ளது. இது விரைவில் வரவிருக்கும் அப்பாச்சி ஆர்.ஆர் 450 (Apache RR 450) என்கிற சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளாக மாறக்கூடும். இது நடக்காமல் போவதற்கும் மிகவும் குறைவாக வாய்ப்புள்ளதை மறந்துவிட வேண்டாம். இந்தக் கான்செப்ட் முதலில் கடந்த ஆண்டு இறுதியில் இத்தாலியில் நடைபெற்ற EICMA 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது இது உற்பத்திக்குத் தயாரான தயாரிப்பாக உருவாகும் நிலையில் உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். எதிர்கால தயாரிப்புகளை காட்சிப்படுத்த இந்த நிறுவனம் சர்வதேச கண்காட்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. அந்த வகையில், EICMA 2025 கண்காட்சியில் பங்கேற்று டேன்ஜென்ட் ஆர்.ஆர் உட்பட பல கான்செப்ட் வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் காட்சிப்படுத்தி பெரும் கவனத்தை ஈர்த்தது.

அந்த அளவிற்கு, இந்த கவர்ச்சிகரமான சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் இரட்டை ஹெட்லேம்ப்கள், கூர்மையான ஏரோடைனமிக் பாடிவொர்க் மற்றும் நேர்த்தியான டெயில் பகுதியுடன் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ரேசிங் மோட்டார்சைக்கிள்களைப் போன்ற ஒரு பெரிய பெட்ரோல் டேங்க், கிளிப்-ஆன் ஹேண்டில்பார்கள், பைக்கிற்கு அடிப்பகுதியில் எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் ரேஸ் பைக்குகளுக்கே உண்டான முழு ஃபேர்டு டிசைன் போன்ற அம்சங்களுடன் இது வருகிறது.
பாதுகாப்பு மற்றும் ஹார்டுவேர் அமைப்பைப் பொறுத்தவரை, முன்பக்க யுஎஸ்டி (USD) ஃபோர்க்குகள், பின்புற மோனோஷாக் சஸ்பென்ஷன், டூயல்-சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்த டேன்ஜென்ட் ஆர்ஆர் கான்செப்ட், சிறந்த சமநிலை, நிலைத்தன்மை மற்றும் ரைடர் கண்ட்ரோல் ஆகியவற்றை வழங்கும் வகையில் இலகுரக சேசிஸ் மற்றும் மோனோகோக் சப்-ஃப்ரேமில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் (BMW Motorrad) நிறுவனங்கள் இணைந்து புதிய 450சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜினை உருவாக்கியுள்ளன. டேன்ஜென்ட் ஆர்ஆர் கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்பட உள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்450 பைக்கில் பொருத்தப்பட உள்ள இதே என்ஜின் தான் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள பிஎம்டபிள்யூ எஃப்450 ஜிஎஸ் (F 450 GS) என்கிற அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளிலும் பொருத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 450சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 48 எச்பி ஆற்றலையும், 43 என்.எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. புதிய அப்பாச்சி ஆர்ஆர்450 பைக்கில் கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், பின் சக்கரம் மேலே தூக்குவதை தடுக்கும் புரொடக்ஷன், வீலிங் கண்ட்ரோல் போன்ற நவீன ரைடர் உதவிகள் இடம்பெறும்.

மேலும், கனெக்டிவிட்டியுடன் கூடிய TFT டிஸ்ப்ளே, ஸ்விட்ச் கண்ட்ரோல்கள், இரு விதமாக செயல்படும் குயிக்ஷிஃப்டர், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் பல ரைடிங் மோடுகளும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்பாச்சி ஆர்ஆர்450 ஆனது ஏப்ரிலியா ஆர்.எஸ்457 (Aprilia RS 457), கவாஸாகி நிஞ்சா 500 (Kawasaki Ninja 500), யமஹா ஆர்3 (Yamaha R3) மற்றும் கேடிஎம் ஆர்சி390 (KTM RC 390) போன்ற சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள்களுடன் போட்டிபோடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய தளத்தில் உருவாக்கப்படும் அப்பாச்சி ஆர்ஆர்450 ஆனது டிவிஎஸ் நிறுவனத்தின் முதன்மை சூப்பர்ஸ்போர்ட் மாடலாக அமையவுள்ளது. அதேநேரம், தற்போதுள்ள 310சிசி அப்பாச்சி பைக்கைப் பற்றியும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யபட்ட அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 (RTX 300) அட்வென்ச்சர் பைக்கில் டிவிஎஸ் நிறுவனத்தால் சொந்தமாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும் 300சிசி என்ஜினுடன் தற்போதைய அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் புதுப்பிக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications









