டிவிஎஸ் கிட்ட இருந்து இப்படி ஒரு பைக்கை எதிர்பார்க்கவே இல்லை.. சும்மா மிரட்டலா இருக்கே!
டிவிஎஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு சூப்பரான ஹை பெர்ஃபாமன்ஸ் சூப்பர் பைக் வந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு பைக் தான் விரைவில் இந்தியாவில் வெளியாகவிருக்கிறது. ஆனால் இது டிவிஎஸ் நிறுவனத்துடையது கிடையாது, டிவிஎஸ் கைப்பற்றிய நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் என்ற பிரிட்டிஷ் நிறுவனத்துடையது. 2020ம் ஆண்டு நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை டிவிஎஸ் கைப்பற்றியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனத்திலிருந்து புதிய ஒரு பைக் வெளியாகவிருக்கிறது இந்தியாவில்.
'மன்க்ஸ் R' (Manx R) என்ற புதிய பைக்கைத் தான் இந்தியாவில் விரைவில் வெளியிடவுள்ளது நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ். இது எவ்வளவுக்கு எவ்வளவு நார்டன் பைக்கோ, அவ்வளவுக்கு அவ்வளவு டிவிஎஸ்ஸின் பைக் என்றும் நாம் உறுதியாக சொல்ல முடியும். 100 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட ஒரு பைக் தயாரிப்பு நிறுவனத்தை முழுவதுமாக மாற்றியமைத்து இந்த பைக்கின் உருவாக்கத்தில் டிவிஎஸ்ஸின் நிர்வாகத்திற்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது.

UK-யில் இருந்து முழுவதுமாக இறக்குமதி செய்து நார்டனின் ஃபிளாக்ஷிப் பைக்காக புதிய மன்க்ஸ் R பைக்கை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது டிவிஎஸ். இந்த விலை உயர்ந்த ப்ரீமியம் பைக்கை வெளியிடுவதன் மூலமாக இந்தியாவில் நார்டன் பிராண்டை ப்ரீமியமான ஒன்றாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த நினைக்கிறது. இதனால் இந்தியாவில் டிவிஎஸ்ஸில் இருந்து நார்டன் பிராண்டு தனித்தே செயல்படவிருக்கிறது.
சென்னை, மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நார்டன் டீலர்ஷிப்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் இந்த மன்க்ஸ் R பைக் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளது. பைக்கின் வெளியீடு நெருங்கும் போது நார்டனின் புதிய டீலர்ஷிப்கள் குறித்த தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,200 சிசி, 72 டிகிரி, V4 இன்ஜினுடன் கூடிய ப்ரீமியம் பைக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது நார்டன் மன்க்ஸ் R. நார்டனின் முந்தைய பைக்குகளின் பயன்படுத்தப்பட்ட இன்ஜினே தற்போது மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. மேம்படுத்தப்பட்ட புதிய இன்ஜினானது 11,500 rpm-ல் 206 hp பவர் மற்றும் 9,000 rpm-ல் 130 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் 5,000 rpm-ல் 100 Nm டார்க்கை இந்த இன்ஜின் உற்பத்தி செய்கிறது.
UK-யில் ஏற்கனவே இந்த நார்டன் மன்க்ஸ் R பைக் விற்பனைக்கு வந்து விட்டது. அந்நாட்டில் ஸ்டாண்டர்டு, ஏபெக்ஸ், சிக்னேச்சர் மற்றும் ஃபர்ஸ்ட் எடிஷன் என நான்கு வேரியன்ட்களாக இந்த ஃப்ளாக்ஷிப் ப்ரீமியம் பைக் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பிற்கு 26.03 லட்சம் ரூபாய் முதல் 49.77 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இந்த பைக் என்ன விலையில் வெளியாகும் என்பதைப் பார்க்க நாங்களும் ஆர்வமாகக் காத்திருக்கிறோம். மேலே கூறிய நான்கு வேரியன்ட்களில் எந்த வேரியன்டை இந்தியாவில் டிவிஎஸ் வெளியிடும் என்பது குறித்த தகவலும் இன்னும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. முழுவதுமாக இறக்குமதி செய்யப்படுவதால் அனைத்து வசதிகளையும் கொண்ட வேரியன்டை வெளியிடுமா அல்லது விலையை மனதில் கொண்டு குறைவான விலை கொண்ட வேரியன்ட் வெளியிடப்படுமா என்பதைப் பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய பாதையில் செல்லத் தொடங்கியிருக்கும் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு இது சிறப்பான ஒரு தொடக்கம் தான். இது வரை இந்த பைக்கை ஓட்டிப் பார்த்தவர்கள், தங்களது எதிர்பார்ப்பை இந்த பைக் பூர்த்தி செய்வதாகவே கூறியிருக்கிறார்கள். பாஸிட்டிவ்வான நோட்டில் புதிய பயணத்தைத் தொடங்குவது சிறப்பு தானே. இந்திய வாடிக்கையாளர்கள் இதன் பிறகு வெளியாகவிருக்கும் 500 சிசி நார்டன் பைக்கிற்காகவே இன்னும் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications