ஹீரோ ஸ்ப்ளெண்டருக்கே டஃப் கொடுக்கும் சூப்பர் பைக்.. மைலேஜும் சூப்பரா கொடுக்குது.. இதை வாங்கலாமா?
இந்திய மக்களுக்கு அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். இதனாலேயே அனைத்து நிறுவனங்கள் அதிக மைலேஜ் கொடுக்கும் பல்வேறு பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன. அப்படி டிவிஎஸ் விற்பனை செய்து வரும் ஒரு பைக் தான் ரேடியான் (Radeon). 110 சிசி இன்ஜினுடன் இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் என்றால் அது 100-110 சிசி வரையிலான இன்ஜின் கொண்ட பைக்குகள் தான். வாடிக்கையாளர்கள் இந்த வகையான பைக்ககுளையே லட்சக்கணக்கில் வாங்கிக் குவிக்கிறார்கள். இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் பட்ஜெட் விலையில் அதிக மைலேஜ் தரக்கூடிய பைக்கை வாங்கும் முடிவில் இருப்பீர்கள். அவர்களுக்காகவே இந்தக் கட்டுரை. புதிய பைக்கை வாங்கும் முன் இந்த டிவிஎஸ் ரேடியான் பைக் எப்படி இருக்கிறது, இதனை வாங்கலாமா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த கம்யூட்டர் பைக்கை 56,850 ரூபாய் முதல் 78,200 ரூபாய் வரையிலான விலையில் டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் விரும்பும் வகையில விதவிதமான வசதிகளுடன் நான்கு வேரியன்ட்களாக இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழுவதுமாக கருப்பு நிறம் கொண்ட 'ஆல் பிளாக் எடிஷன்' (All Black Edition) வேரியன்டை மிகவும் குறைவாக 56,850 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வேறு நிறங்கள் வேண்டும் என நினைக்கும் வாடிக்கையாளர்கள் 'பேஸ் எடிஷனை' (Base Edition) தேர்வு செய்யலாம். ஆனால் இது கொஞ்சம் அதிகமாக 63,350 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வசதியும் இந்த பைக்கின் டாப் இரண்டு வேரியன்ட்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் டிரம் பிரேக் கொண்ட வேரியன்டை 75,950 ரூபாய் விலையிலும், டிஸ்க் பிரேக் கொண்ட வேரியன்டை ரூ.78,200 ரூபாய் விலையிலும் நாம் வாங்கலாம்.

இந்த பைக்கில் 109.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினைப் பயன்படுத்தி வருகிறது டிவிஎஸ். இந்த இன்ஜினானது 8 hp பவர் மற்றும் 8.7 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. தினசரிப் பயன்பாட்டிற்கு இந்த இன்ஜின் 65 கிமீ முதல் 75 கிமீ வரையிலான மைலேஜை தாராளமாகக் கொடுப்பதாக இதனைப் பயன்படுத்தி வரும் நிறைய வாடிக்கையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த பைக் லிட்டருக்கு 73.68 வரையிலான மைலேஜ் கொடுக்கும் என ARAI அமைப்பு சோதனை செய்து கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பவர் மற்றும் டார்க்கின் அளவுகள் குறைவாக இருப்பது போன்றே உங்களுக்குத் தோன்றும். ஆனால் பயன்படுத்தும் போது போதுமான அளவு பவரை இந்த பைக் வழங்குகிறது. அது மட்டுமின்றி ஒரு கம்யூட்டர் பைக் போல மிகவும் அமைதியாக இருக்காமல், ஆக்சிலரேட்டரை முறுக்கும் போது இன்ஜின் உறுமுவதை நாம் உணர முடிகிறது.
115 கிலோ எடையுடன் மிகவும் குறைவாகவும் இல்லாமல், அதிகமாகவும் இல்லாமல் சரியான பேலன்ஸுடன் இருக்கிறது டிவிஎஸ் ரேடியான் பைக். ஹீரோவின் ஸ்ப்ளெண்டரை விட 5 மிமீ குறைவாக, 780 மிமீ சீட் உயரத்தைக் கொண்டுள்ளது இந்த பைக். இதனால் உயரம் குறைவானவர்கள் கூட இந்த பைக்கில் எளிதாக ஏறி அமர்ந்து கையாள முடியும். கிரௌண்டு கிளியரன்ஸும் 180 மிமீ இருப்பதால் பெரிய ஸ்பீடு பிரேக்கர்களில் கூட தயங்காமல் ஏற்றி இறக்கலாம்.
ஆல் பிளாக், ஸ்டார்லைட் ப்ளூ, மெட்டல் பிளாக், ராயல் பர்பிள் மற்றும் டைட்டானியம் கிரே ஆகிய ஐந்து விதமான தனித்துவமான நிறங்களில் இந்த கம்யூட்டர் பைக்கின் அடிப்படை வேரியன்ட் விற்பனை செய்யப்படுகிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்ட வேரியன்ட்கள், ஆல் பிளாக் மற்றும் இரண்டு டூயல் டோன் நிறங்கள் என மொத்தம் மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போது அதிகம் விற்பனை செய்யப்படும் பைக் என்றால் ஹீரோவின் ஸ்ப்ளெண்டர் பிளஸ் தான். அந்த பைக்கையே இப்போது நீங்களும் வாங்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால் டிவிஎஸ்ஸின் ஷோரூமுக்குச் சென்று இந்த ரேடியான் பைக்கையும் ஒரு முறை பாருங்கள். ஸ்ப்ளெண்டருக்கு நிகரான வசதிகள் மற்றும் அம்சங்களை இந்த பைக்கும் கொண்டுள்ளது. மேலும், விலையும் ஸ்ப்ளெண்டரை விட குறைவு என்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட்.


Click it and Unblock the Notifications