வெறும் ரூ.95,000 விலையில் ரொம்ப ஸ்பெஷலான டிவிஎஸ் ரெய்டர் 125 பைக் அறிமுகம்!
பல்வேறு தனித்துவமான சிறப்பம்சங்களுடன் கூடிய டிவிஎஸ் ரெய்டர் 125 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெய்டர் 125 டாக்டர் டூம் என்ற பெயரில் வந்துள்ள இந்த பைக்கிற்கு ரூ.95,320 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
தினசரி பயன்பாட்டிற்கான இலகுரக பைக் ரகத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் ரெய்டர் 125சிசி பைக் முக்கியத் தேர்வாக இருந்து வருகிறது. பட்ஜெட் விலையில் ஸ்டைலான மற்றும் போதுமான செயல்திறனை எதிர்பாக்கும் இளைஞர்கள் மத்தியில் இந்த பைக் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தக்க வைக்கும் விதமாக இந்த பைக்கில் ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது வந்துள்ள ரெய்டர் 125 டாக்டர் டூம் எடிசன் மாடலிலும் பல சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சினிமா கதாபாத்திரங்கள் அடிப்படையில் மார்வெல் நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் நிறுவனம் பல்வேறு சிறப்பு பதிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கனவே ஐயன் மேன், பிளாக் பாந்தர், டெட்பூல், வோல்வெரின் கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
அந்த வரிசையில், தற்போது சூப்பர் ஸ்குவாட் வரிசையில் டாக்டர் டூம் கதாபாத்திரத்தை வைத்து இந்த ஸ்பெஷல் எடிசன் வந்துள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடலில் ஸ்பெக்டரல் க்ரீன் என்ற விசேஷமான பச்சை வண்ணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வெளிச்சம் மற்றும் பார்க்கும் கோணத்தை பொறுத்து இந்த விசேஷ வண்ணப் பூச்சு பழுப்பு வண்ணமாக மாறுவது போன்று தோற்றமளிக்கும். Multi Tone Travel Finish என்ற தொழில்நுட்பத்துடன் இந்த பிரத்யேக வண்ணத்திலான டிவிஎஸ் ரெய்டர் 125 டாக்டர் டூம் எடிசன் வந்துள்ளது.

மேலும், டாக்டர் டூம் கதாபாத்திரத்தின் கவசம் மற்றும் உடையை நினைவூட்டும் வகையில் பெட்ரோல் டேங்க் மற்றும் சைடு பேனல்களில் சிறப்பு கிராஃபிக்ஸ் வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. இதனால், சாதாரண மாடலைவிட இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் தனித்துவமாகவும், ஆக்ரோஷமான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது.
எஞ்சினை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இல்லை. பிற வேரியண்ட்டுகளில் வழங்கப்படும் 124.8சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 11.4 எச்பி பவரையும், 11.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறத்தில் எளிதாக ஓட்டுவதற்கு பயன்படும் iGO அசிஸ்டென்ட் என்ற தொழில்நுட்ப வசதியும் முக்கிய அம்சமாக கூறலாம்.
இந்த பைக்கில் எல்சிடி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புளூடூத், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி, போன் அழைப்புகள், மெசெஜ்களை பார்க்க உதவும் வசதிகள் முக்கியமானதாக இருக்கின்றன. எல்இடி ஹெட்லைட்டுகள், ரைடிங் மோடுகள், யுஎஸ்பி சார்ஜிங் வசதியும் உள்ளன. முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷனும் உள்ளன. பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
டிவிஎஸ் ரெய்டர் 125 பைக் இதன் ரகத்தில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டத்தில் இருந்து இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான ரெய்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது. இந்த புதிய டாக்டர் டூம் எடிசனும் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications