49,999 ரூபாய் விலை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. போன மாசம் மட்டும் 42,000 யூனிட் வித்துருக்கு!
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று சொன்னால் ஓலா தான் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது டிவிஎஸ் மோட்டார்ஸ் தான் நினைவுக்கு வருகிறது. நிறைய இடங்களில் வாடிக்கையாளர்கள் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டுச் செல்வதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக சிறிய நகரங்களிலும் கூட.
இப்போது இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் உயர்த்தில் அமர்ந்திருப்பது டிவிஎஸ் தான். மற்ற எந்த நிறுவனங்களுக்கும் முன்பாகவே எலெக்ட்ரி இருசக்கர வாகன சந்தையில் கால் பதித்ததன் பலனை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது டிவிஎஸ். கடந்த மாதம் இந்தியாவில் அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தியிருக்கிறது. அது குறித்த விரிவான தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

கடந்த மே மாதம் இந்தியாவில் சுமார் 42,415 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது டிவிஎஸ் மோட்டார். இந்த விற்பனையுடன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் முதலிடத்திலும் இருக்கிறது அந்நிறுவனம். கடந்தாண்டு மே மாதத்துடன், அதாவது 2025 மே மாதத்துடன் ஒப்பிடும் போது இது அசுர வளர்ச்சியாகும்.
2025 மே மாதம் இந்தியாவில் 25,804 யூனிட்டுகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது கடந்த மே மாத விற்பனை 64 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டும் இந்த விற்பனை அளவுடன் மற்ற நிறுவனங்களுக்கு மேலாக முதலிடத்திலேயே டிவிஎஸ் மோட்டார் இருந்தது குறிப்பிடத்தக்கது.

42,000 யூனிட்டுகள் விற்பனையுடன் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை சந்தையின் 25 சதவீதம் சந்தைப் பங்குகளையும் அந்நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. அப்படியென்றால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நான்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் ஒன்று டிவிஎஸ்ஸுடையது என்று சொல்லலாம். இந்தாண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு மே மாதம் தான் டிவிஎஸ் அதிக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த இரண்டாவது அதிகபட்ச அளவாகும். மார்ச் மாதம் சுமார் 51,593 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
இந்தியாவில் தற்போது இரண்டு மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். அதில் ஐக்யூபே அதிகம் விற்பனை செய்யப்பட்டும் மாடலாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வளர்ந்து வரும் ஒன்றாக இருக்கிறது. இரண்டு ஸ்கூட்டர்களில் விலை குறைவான ஒன்று என்றால் அது ஆர்பிட்டர் தான்.
எனினும் நீண்ட காலமாக சந்தையில் இருந்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதால் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. BaaS திட்டத்துடன் ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மிகவும் குறைவாக 50,000 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைக்கே வாடிக்கையாளர்களால் வாங்க முடியும். இருந்தாலும் சற்று கூடுதல் விலை கொண்ட ஐக்யூபையே மக்கள் அதிகம் வாங்குகிறார்கள்.
இதற்கு ஸ்கூட்டரின் டிசைன் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆர்பிட்டர் நல்ல டிசைனையே கொண்டிருக்கும் என்றாலும், ஐக்யூப் இன்னும் சற்று கிளாசியாக இருப்பதாகவே எங்களுக்குத் தோன்றுகிறது. எப்படி இருந்தாலும் டிசைன் என்பது தனிநபர் விருப்பம் தானே. முதலில் பார்க்கும் போது ஆர்பிட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் தனித்துவமானதாகவும், வித்தியாசமாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் தொடர்ந்து பார்க்கும் போது ஐக்யூபின் டிசைனே மனதைக் கவர்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எது எப்படி இருந்தாலும் இந்தியாவின் இப்போதைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிங் டிவிஎஸ் தான். வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்குவதாலேயோ என்னவோ ஐக்யூபிலேயே டிவிஎஸ் அதிக கவனம் செலுத்துவதாகவும் தெரிகிறது. தொடர்ந்து புதிய பேட்டரி பேக்குகள், புதிய வேரியன்ட் மற்றும் புதிய வசதிகள் என்று மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது.
மேம்படுத்துகிறது என்று சொல்வதை விட வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சின்னச் சின்ன மாற்றங்களை செய்து கொண்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு விற்பனையில் இருந்த ஐக்யூபுடன் இப்போது இருக்கும் லைன்-அப்பை ஒப்பிட்டால் நிறைய மாறியிருப்பதை நாம் பார்க்க முடியும். ஆனால் பெரிதாக எந்தவொரு அப்டேட்டையும் ஐக்யூபிற்கு டிவிஎஸ் கொடுத்ததாக நினைவில்லை. சின்னச் சின்னதாக எல்லாம் சேர்ந்து ஸ்கூட்டரை பெரிய அளவில் சிறப்பானதாகக் காட்டுகின்றன.
இதனால் தான் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் டிவிஎஸ் அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாகவும் இருக்கிறது. கடந்த மாதம் கூட 4.7 kWh பேட்டரி பேக் கொண்ட ஐக்யூப் வேரியன்ட் ஒன்றை புதிதாக வெளியிட்டது டிவிஎஸ். வாடிக்கையாளர்கள் எந்த விலையில் என்ன வசதிகளுடன் கேட்கிறார்களோ அந்த காம்போவில் ஐக்யூப் கிடைக்கிறது. இதனை டிவிஎஸ்ஸின் வெற்றிக்கான ஃபார்முலாவாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications