ஜூப்பிட்டருக்கு அடுத்து டிவிஎஸ் வெளியிடும் சூப்பர் ஸ்கூட்டர்.. ஆக்டிவா எல்லாம் காணாம போக போகுது!
இந்தியா புதிய ஸ்கூட்டர் அலையை சந்திக்கவுள்ளது. இதுவரை ஸ்கூட்டர்கள் என்றால் குடும்பப் பயன்பாட்டு வாகனம் அல்லது நகரத்திற்குள் மட்டுமே பயன்படுத்தப்படும் வாகனம் என்ற இலக்கணங்கள் எழுதாமல் எழுதப்பட்டிருந்தது. ஆனால் விரைவிலேயே அது மாறவிருக்கிறது. ஏற்கனவே யமஹா ஏராக்ஸ் 155 மற்றும் ஹீரோ ஸும் 160 ஆகிய ஸ்கூட்டர் மாடல்கள் அந்த இலக்கணத்தை மாற்றி எழுதி வருகின்றன. இனி அந்த வரிசையில் இன்னும் பல ஸ்கூட்டர்கள் இணையவுள்ளன.
மேக்ஸி ஸ்கூட்டர் என்பது தான் அதற்கான பதம். 150 சிசி அல்லது அதற்கும் மேலான இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர்களையே தற்போது மேக்ஸி ஸ்கூட்டர்கள் என நாம் குறிப்பிட்டு வருகிறோம். ஹீரோ, யமஹா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே அப்படியான ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன. ஹோண்டா விரைவில் வெளியிடவிருக்கிறது. இந்நிலையில் டிவிஸ் நிறுவனமும் புதிய மேக்ஸி ஸ்கூட்டர் ஒன்றை உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஏற்கனவே 150 சிசி பிரிவில் என்டார்க் 150 ஸ்கூட்டரை டிவிஎஸ் விற்பனை செய்து வருகிறது. ஆனால் இதனை யமஹாவின் ஏராக்ஸ் 155 அல்லது ஹீரோவின் ஸூம் 160 ஆகிய மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கு இணையாகக் கூற முடியாது. டிசைன், வசதிகள் மற்றும் இன்ஜின் திறன் ஆகியவற்றில் என்டார்க் 150-யை விட மேலே கூறிய ஸ்கூட்டர்கள் ஒருபடி மேல் தான்.
என்டார்க் 150 ஸ்கூட்டரானது என்டார்க் 125 ஸ்கூட்டரின் விரிவாக்கம் செய்யப்பட்ட வடிவமே. அதனை முறையான மேக்ஸி ஸ்கூட்டராக ஒப்பிடும் போது கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் விலையை வைத்துப் பார்க்கும் போது என்டார்க் 150 அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பெர்ஃபாமன்ஸை வைத்துப் பார்த்தால் என்டார்க் 150 மற்ற மேக்ஸி ஸ்கூட்டர்களுடன் பாஸ் ஆகாது.

எனவே தான் நல்ல தரமான பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கும் வகையிலான லிக்விட்-கூல்டு இன்ஜின் கொண்ட (என்டார்க் 150 ஏர்-கூல்டு இன்ஜின் தான்) புதிய 160 சிசி மேக்ஸி ஸ்கூட்டர் ஒன்றை டிவிஎஸ் உருவாக்கி வருகிறது. நாம் மேலே குறிப்பிட்ட மற்ற நிறுவனங்களின் மேக்ஸி ஸ்கூட்டர்களும் லிக்விட்-கூல்டு இன்ஜினையே கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய மேக்ஸி ஸ்கூட்டருக்கு முற்றிலும் புதிய பிளாட்ஃபார்ம் ஒன்றை டிவிஎஸ் உருவாக்கி வருகிறதாம். 2027ல் இந்தப் புதிய மேக்ஸி ஸ்கூட்டரின் வெளியீட்டை டிவிஎஸ்ஸிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். 2027ம் ஆண்டில் தொடக்கத்திலேயே ஹோண்டாவும் தங்களுடயை ADV160 என்ற மேக்ஸி ஸ்கூட்டரை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. அடுத்தாண்டு மேக்ஸி ஸ்கூட்டர் களம் சூடுபிடிக்கவிருக்கிறது.
புதிய டிவிஎஸ் ஸ்கூட்டரில் என்ன எதிர்பார்க்கலாம்? பெரிய வீல்கள், ப்ரீமியமான சஸ்பென்ஷன் செட்டப்புகள் மற்றும் பிரேக்குகள், 14 முதல் 15 hp அளவில் பவரை உற்பத்தி செய்யும் மேம்பட்ட பெர்ஃபாமன்ஸ் கொண்ட இன்ஜின், தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட அம்சங்கள் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன. ஏற்கனவே X என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தொழில்நுட்ப ரீதியில் சிறப்பான ஒன்றாக டிவிஎஸ் உருவாக்கியிருக்கிறது. எனவே இந்தப் புதிய ஸ்கூட்டர் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளுக்கு இந்த ஸ்கூட்டரை டிவிஎஸ் அதிகளவில் ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகள் இருக்கிறது. வெளிநாடுகளில் ஏற்கனவே மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கான சந்தை இருக்கிறது. அதற்கு யமஹா மற்றும் ஹோண்டா நிறுவனங்களுக்குத் தான் டிவிஎஸ் நன்றி சொல்ல வேண்டும். எனவே வெளிநாடுகளிலும் மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக இதனை டிவிஎஸ் வெளியிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறியது போல 2027ம் ஆண்டு மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கான ஆண்டாக இருக்கப் போவது இப்போதே தெரிகிறது. ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் யமஹா ஆகிய நிறுவனங்கள் புதிய மேக்ஸி ஸ்கூட்டர்களின் வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன. யமஹாவும் ஏராக்ஸ் 155-யை தவிர்த்து மற்றொரு மேக்ஸி ஸ்கூட்டரையும் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. எது சிறப்பான ஸ்கூட்டர் எனத் தேர்வு செய்து வாடிக்கையாளர்கள் வாங்குவது மட்டும் தான் பாக்கி.


Click it and Unblock the Notifications