அடிமாட்டு விலையில் டிவிஎஸ் வெளியிட்டுள்ள புதிய ஸ்கூட்டர்.. மைலேஜ் அள்ளுது!
இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி வாங்கும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக டிவிஎஸ் ஜூப்பிட்டர் இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் 125 சிசி மாடலை புதிய நிறங்களுடன் அப்டேட் செய்துள்ளது டிவிஎஸ். இதுவரை நாம் பார்க்காத வகையில் தனித்துவமாக இருக்கின்றன இந்தப் புதிய நிறங்கள். இந்தப் புதிய நிறங்களுடன் இனி ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டரை 11 வகையான நிறத் தேர்வுகளில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டரை, டிரம் அலாய், டிஸ்க், டூயல் டோன் SXC மற்றும் ஸ்மார்ட்Xகனெக்ட் என நான்கு வேரியன்ட்களாக டிவிஎஸ் விற்பனை செய்து வருகிறது. இதில் புதிய நிறங்களை டூயல் டோன் SXC வேரியன்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறது டிவிஎஸ். இதுவரை இந்த வேரியன்டானது ஐவரி பிரௌன் மற்றும் ஐவரி கிரே ஆகிய இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இனி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும், ஐவரி மேட் காப்பர் பிரான்ஸ் மற்றும் ஐவரி எலைட் கிரீன் ஆகிய நிறங்களையும் சேர்த்து நான்கு நிறத் தேர்வுகளில் டூயல் டோன் SXC வேரியன்ட் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த வேரியன்டைத் தவிர்த்து மற்ற ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டர் வேரியன்ட்கள் எல்லாம் மோனோடோன் நிறங்களையே கொண்டிருக்கின்றன.
தொடக்க நிலை டிரம் அலாய் மற்றும் டிஸ்க் வேரியன்ட்கள் எல்லாம் வழக்கமான ஒயிட், பிளாக், ப்ளூ மற்றும் கிரோ ஆகிய நிறத் தேர்வுகளைக் கொண்டிருக்கும் நிலையில், டாப் எண்டான ஸ்மார்ட்Xகனெக்ட் வேரியன்டானது எலைட் கிரீன், மேட் காப்பர் பிரான்ஸ் ஆகிய தனித்துவமான நிறங்களைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு நிறங்களும் தற்போது வெளிாகியிருக்கும் புதிய டூயல் டோன் நிறங்களின் மோனோடோன் வெர்ஷன்களாகும். இவற்றுடன் எலிகண்ட் ரெட் என்ற நிறத்தும் டாப் எண்டு வேரியன்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டதைத் தவிர்த்து ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டரின் டிசைன் அல்லது வசதிகளில் வேறெந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விலையும் அதேதான். புதிய நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டூயல் டோன் SXC வேரியன்டானது 86,750 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும், டாப் எண்டு ஸ்மார்ட்Xகனெக்ட் வேரியன்டானது 89,060 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டரின் அடிப்படையான டிரம் அலாய் மற்றும் இடைநிலை டிஸ்க் வேரியன்ட்களானது முறையே 78,700 ரூபாய் மற்றும் 83,900 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறைவான விலை, தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் அப்டேட் செய்யப்படுவது உள்ளிட்ட காரணங்களினாலேயே இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது டிவிஎஸ் ஜூப்பிட்டர்.
இந்த ஸ்கூட்டரில் 124.8 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது அதிகபட்சமாக 8.4 hp பவர் மற்றும் 11.1 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த 125 சிசி ஸ்கூட்டரானது லிட்டருக்கு 57.27 கிமீ வரையிலான மைலேஜ் கொடுக்கும் எனத் டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே நன்றாக விற்பனையாகி வரும் ஸ்கூட்டராகவே டிவிஎஸ் ஜூப்பிட்டர் இருக்கிறது. இந்த நிலையில் புதிய நிறங்கள் கொடுக்கப்பட்டிருப்பது இந்த ஸ்கூட்டரின் விற்பனையை மேலும் அதிகரிக்க உதவும். மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கம் டூயல் டோன் நிறங்களானது பார்ப்பதற்கு மிகவும் கிளாஸியாகவும், ப்ரீமியமாகவும் இருக்கின்றன. இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் மிகச் சிறப்பான 125 ஸ்கூட்டர் என இந்த டிவிஎஸ் ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டரைச் சொன்னால் அது மிகையாகாது.


Click it and Unblock the Notifications