டிவிஎஸ் XL வயாசானலும் இன்னும் மவுசு குறையல.. இப்போ புது வசதிகளோட இன்னும் அசத்தலா இருக்கு
'எந்த பைக்கை வேணாலும் விக்கட்டும் விக்காம போகட்டும் ஆனா நான் ஸ்டெடியா விற்பனையாகிட்டே இருப்பேன்' என பல ஆண்டுகளாக நிலையாக விற்பனையாகி வரும் இருசக்கர வாகனமாக டிவிஎஸ் XL100 மொபெட் இருந்து வருகிறது. கிராமப்புறங்களிலேயே இந்த மொபெடை வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்குகிறார்கள். 'நம்ம ஊரு வண்டி' என அறியப்படும் டிவிஎஸ் XL100 இப்போது எவ்வளவு விற்பனையாகியிருக்கிறது தெரியுமா.
கடந்த ஏப்ரல் மாதம் 42,246 XL மொபெட்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது டிவிஎஸ். இது கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது 9.03 சதவீதம் அதிகமாகும். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 45,633 XL மொபெட்களை டிவிஎஸ் இந்தியாவில் விற்பனை செய்திருந்தது. எனினும் இந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது ஏப்ரல் மாத XL விற்பனை சற்று குறைவு தான். மார்ச் மாதம் 46,192 XL மொபெட்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ் நிறுவனத்திற்கு மூன்றாவது அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமாக இந்த XL மொபெட் இருந்து வருகிறது. முதலிடத்தில் 1.17 லட்சம் யூனிட்டுகள் விற்பனையுடன் ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 49,390 யூனிட்டுகள் விற்பனையுடன் அப்பாச்சி பைக்குகள் இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் XL இருக்கிறது. டிவிஎஸ்ஸின் அப்பாச்சி லைன்-அப்பானது 150 சிசி முதல் 300 சிசி வரை பல்வேறு பைக்குகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாத விற்பனையுடன் டிவிஎஸ்ஸின் ஒட்டுமொத்த விற்பனையில் 12.40 சதவீதம் சந்தைப் பங்குகளைக் கைப்பற்றியிருக்கிறது XL மொபெட். முன்னர் இந்தியாவில் பல்வேறு மொபெட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. பல ஆண்டு விற்பனைக்குப் பின்னும் இப்போதும் விற்பனையில் இருக்கும் ஒரே மொபெட் டிவிஎஸ் XL தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த XL-ஐ ஐந்து வேரியன்ட்களாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். ஹெவி டூட்டி, ஹெவி டூட்டி i-டச்ஸ்டார்ட், வின் எடிஷன், கம்ஃபர்ட் i-டச்ஸ்டார்ட் மற்றும் ஹெவி டூட்டி அலாய் என ஐந்து வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஹெவி டூட்டி அலாய் வேரியன்டை புதிதாகக் கடந்தாண்டு தான் டிவிஎஸ் வெளியிட்டது.
46,850 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி, 61,860 ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த XL100 மொபெட் வேரியன்ட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் டாப் எண்டான ஹெவி டூட்டி அலாய் வேரியன்டிலேயே, அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள், LED முகப்பு விளக்கு மற்றும் USB சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளை டிவிஎஸ் கொடுத்திருக்கிறது.
மெக்கானிக்கலாக அனைத்து வேரியன்ட்களிலும் ஒரே மாதிரியாக 99.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த இன்ஜினானது 4.3 hp பவர் மற்றும் 6.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இரண்டு பக்கமும் டிரம் பிரேக்குகளே கொடுக்கப்பட்டிருக்கின்றன. 89 கிலோ எடையுடன் யார் வேண்டுமானாலும் எளிதாக ஹேண்டில் செய்யும் வகையிலான இருசக்கர வாகனமாக இந்த XL100 மொபெட் இருந்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்ஜின் பவர் குறைவாக இருக்கிறதே என நினைக்க வேண்டாம். இப்போதும் எந்த விதமான பாதையிலும் பாரங்களை ஏற்றி சுமூகமாகச் செல்லும் திறனைக் கொண்டிருக்கும் ஒரே இருசக்கர வாகனம் இந்த XL100 தான். குறிப்பாக விவசாய நிலங்களில் மிகவும் இலகுவான பயன்பாட்டைக் கொண்ட வாகனமாக இது இருக்கிறது. அதனாலேயே இதனை நம்ம ஊரு வண்டி என கிராமப்புறங்களில் அழைக்கின்றனர். அதிகம் விற்பனையாவதே வாடிக்கையாளர்கள் இந்த வாகனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கான சாட்சி.


Click it and Unblock the Notifications