அக்டோபர் விற்பனையில் ஹீரோவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த ஹோண்டா!
இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அக்டோபர் மாத விற்பனை புள்ளிவிவரங்கள் சற்று வித்தியாசமான நிலையை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, முன்னணி நிறுவனங்களின் விற்பனையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் ஹோண்டா நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மத்திய அரசின் வாகனப் பதிவு தரவுகளின் அடிப்படையில், அக்டோபர் மாதத்தில் மொத்தம் 23,21,419 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 32,39,949 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. இதன் மூலம் வருடாந்திர அடிப்படையில் விற்பனை 28.35 சதவீதம் சரிந்துள்ளது.

முதலிடத்தில் ஹோண்டா
இந்திய இருசக்கர வாகன சந்தையில் நீண்டகாலமாக முன்னிலையில் இருந்து வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஹோண்டா முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் மொத்தம் 6,37,630 இருசக்கர வாகனங்களைப் பதிவு செய்துள்ளது. இதன் சந்தைப் பங்கு 27.47 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 8,50,875 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது விற்பனை 25.06 சதவீதம் குறைந்திருந்தாலும், ஒட்டுமொத்த சந்தையின் சரிவுடன் ஒப்பிடும்போது ஹோண்டாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இதனால் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
இரண்டாமிடத்தில் ஹீரோ
கடந்த மாதத்தில் 5,98,433 இருசக்கர வாகனங்களைப் பதிவு செய்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10,06,796 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. இதன் மூலம் நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை 40.56 சதவீதம் சரிந்துள்ளது. சந்தைப் பங்கும் 25.78 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மூன்றாவது இடத்தில் டிவிஎஸ்
அடுத்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 4,58,303 இருசக்கர வாகனங்களை அக்டோபர் மாதத்தில் பதிவு செய்து மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 5,72,347 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. தற்போது விற்பனை 19.93 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும் சந்தைப் பங்கு 19.74 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் 2,09,634 வாகனங்களைப் பதிவு செய்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். இதன் விற்பனை 37.47 சதவீதம் குறைந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 1,23,982 வாகனங்களையும், சுஸுகி நிறுவனம் 1,20,931 வாகனங்களையும் பதிவு செய்துள்ளன. யமஹா நிறுவனம் 79,001 வாகனங்களைப் பதிவு செய்துள்ளது.
EV டூவீலர் விற்பனை
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனப் பிரிவில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 31,833 வாகனங்களைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 5.25 சதவீத வளர்ச்சியாகும். ஆம்பியர் நிறுவனம் 10,839 வாகனங்களையும், ரிவர் நிறுவனம் 6,817 வாகனங்களையும் பதிவு செய்துள்ளன. ரிவர் நிறுவனத்தின் வளர்ச்சி 273.94 சதவீதமாக உள்ளது.
மறுபுறம், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை 26.41 சதவீதம் சரிந்து 12,098 வாகனங்களாகப் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனையில் பெட்ரோல் வாகனங்கள் 90.30 சதவீத பங்கையும், எலெக்ட்ரிக் வாகனங்கள் 9.65 சதவீத பங்கையும் பெற்றுள்ளன. இதன் மூலம் மின்சார வாகனங்களின் சந்தைப் பங்கு அதிகரித்து வருகிறது.
விற்பனை சரிவுக்கு காரணம்?
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாத விற்பனை குறைந்ததற்கு பண்டிகைக் கால அட்டவணையில் ஏற்பட்ட மாற்றம் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவராத்திரி மற்றும் தீபாவளி அக்டோபர் மாதத்திலேயே வந்தன. ஆனால், இந்த ஆண்டு தந்திராஸ் மற்றும் தீபாவளி நவம்பர் மாதத்திற்கு மாறியதால் வாங்கும் முடிவுகள் தள்ளிப்போயுள்ளன.
செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாத இருசக்கர வாகனப் பதிவுகள் 29.67 சதவீதம் அதிகரித்துள்ளன. மேலும், இந்தியாவில் இதுவரை பதிவான அக்டோபர் மாத விற்பனைகளில் இந்த ஆண்டு அக்டோபர் இரண்டாவது சிறந்த மாதமாகவும் அமைந்துள்ளது. நடப்பு நவம்பர் மாத பண்டிகைக் கால விற்பனை புள்ளிவிவரங்கள் வந்தால்தான் இந்த ஆண்டு நிலவரம் தெரியவரும்.


Click it and Unblock the Notifications


