பைக், ஸ்கூட்டர் வாங்க குவிந்த மக்கள்... ஆகஸ்ட்டில் 17 லட்சத்தை தாண்டிய விற்பனை!!
இந்திய இருசக்கர வாகன சந்தை மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் காலக்கட்டத்தில் மழைக்காலம் உள்ளிட்ட காரணங்களால் விற்பனை சற்று மந்தமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 17.14 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. மேலும், மின்சார இருசக்கர வாகனங்களின் சந்தைப் பங்கு முதல் முறையாக 10 சதவீதத்தை தாண்டி உள்ளது.
இந்திய வாகன டீலர்கள் கூட்டமைப்பு (FADA) வெளியிட்டுள்ள கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை விற்பனை தரவுகளின்படி, இந்தியாவில் மொத்தம் 17,14,610 இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 14,32,537 வாகனங்கள் விற்பனையான நிலையில், தற்போது விற்பனை 19.69 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தைப் பொறுத்தவரை இது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஹோண்டா முதலிடம்
கடந்த மாதம் உள்நாட்டு விற்பனையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் ஹோண்டா நிறுவனம் 4,47,342 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மேலும், கடந்த மாதம் மொத்த விற்பனையில் 26.09 சதவீத சந்தைப் பங்கை பெற்றுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 4,13,996 வாகனங்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்திலும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 3,53,746 வாகனங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வளர்ச்சி 18.6 சதவீதமாக இருந்த நிலையில், டிவிஎஸ் மோட்டார் 25.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதனால் முதல் மூன்று முன்னணி நிறுவனங்களின் போட்டியில் டிவிஎஸ் வேகமாக முன்னேறி வருகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் 1,57,149 வாகனங்களுடனும், சுஸுகி இருசக்கர வாகன நிறுவனம் 1,04,217 வாகனங்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 94,448 வாகனங்களை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்துள்ளது.

சூடுபிடித்த கிராமப்புற சந்தை
ஆகஸ்ட் மாத விற்பனை வளர்ச்சியில் கிராமப்புற சந்தையின் பங்களிப்பும் கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது. கிராமப்புறங்களின் இருசக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆகஸ்ட்டில் 20.25 சதவீதம் உயர்ந்துள்ளது. நகர்ப்புற சந்தையில் விற்பனை வளர்ச்சி 19.07 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வந்த பிறகு வாகனங்களை வாங்குவதற்கு ஏற்ற சூழல் ஏற்பட்டுள்ளதும், கிராமப்புற தேவை வலுவாக இருந்ததும் இந்த வளர்ச்சிக்கு காரணங்களாக FADA அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ஆகஸ்ட் விற்பனை அறிக்கையின் மிகப்பெரிய மாற்றம் மின்சார இருசக்கர வாகன சந்தையில் ஏற்பட்டுள்ளது. மொத்த இருசக்கர வாகன விற்பனையில் மின்சார இருசக்கர வாகனங்களின் பங்கு 10.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மற்றொரு கவனித்தக்க விஷயமாக, எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் சந்தைப் பங்கு 10.68 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் சந்தைப் பங்கு 7.66 சதவீதமாக இருந்த நிலையில், விற்பனை டல்லடிக்கும் ஆகஸ்ட்டில் இந்த முறை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.
ஜூலையை விட குறைவு
கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, ஆகஸ்ட் மாத விற்பனை 5.70 சதவீதம் குறைந்துள்ளது. மழை, பருவகால காரணிகள் மற்றும் ஆடி/ஷ்ரவன் மாத காலகட்டம் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் செப்டம்பர் முதல் பண்டிகை கால விற்பனை தொடங்குவதால் சந்தை மீண்டும் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


