ஓசூரில் அல்ட்ராவைலட்டின் பிரம்மாண்ட ஆலை... ஆண்டுக்கு 2.5 லட்சம் EV தயாரிக்கும் மெகா திட்டம்!!
இந்தியாவின் பிரீமியம் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வரும் அல்ட்ராவயலெட் நிறுவனம் ஓசூர் அருகே சூளகிரியில் புதிய தொழிற்சாலையை அமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிக பிரம்மாண்டமாக அமைய இருக்கும் இந்த புதிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலைக்கு, BIGGA - Big Global Ambition Factory என்ற பெயரில் குறிப்பிடுகிறது அல்ட்ராவைலட் நிறுவனம்.
அதிக செயல்திறன் மிக்க எலெக்ட்ரிக் சூப்பர் பைக் போன்ற பெர்ஃபார்மென்ஸ் வகை வாகனங்களில் கவனம் செலுத்தி வந்த அல்ட்ராவயலெட் நிறுவனம் அடுத்தகட்டமாக, அதிக எண்ணிக்கையிலான மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்வதை இலக்கு வைத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

உற்பத்தி திறன்
அந்த வகையில், ஆண்டுக்கு 2.5 லட்சம் உற்பத்தி திறன் கொண்டதாக இந்த புதிய மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை அமைக்க இருக்கிறது அல்ட்ராவைலட். மேலும், இந்த ஆலையை தேவைக்கு ஏற்ப 5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக விரிவாக்கம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஓசூர் அருகே சூளகிரியில் உள்ள சிப்காட் பகுதியில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது. இந்த புதிய ஆலை அமைக்கப்பட்டாலும், பெங்களூரில் செயல்பட்டு வரும் தனது தொழிற்சாலையில் உற்பத்தி தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புதிய தொழிற்சாலையில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள டெஸராக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்காலத்தில் பல்வேறு மின்சார ஸ்கூட்டர்களும், பைக்குகளும் இங்கு உற்பத்தி செய்யப்படும்.

புதிய மாடல்கள் விபரம்
2027ம் ஆண்டுக்கான மாடல்கள் குறித்த படம் ஒன்றையும் அல்ட்ராவைலட் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதில், F-Series, X-Series மற்றும் ஷாக்வேவ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், டெஸராக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்பதும் தெரிய வந்துள்ளது. ஸ்போர்ட்ஸ், க்ராஸ்ஓவர், க்ரூஸர் மற்றும் ஸ்ட்ரீட் என பல வகை மோட்டார்சைக்கிள் மாடல்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன.
இதனால், இதுவரை பெரும்பாலும் செயல்திறன் சார்ந்த பிரீமியம் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் வர்த்தகத்தை மட்டும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் அல்ட்ராவைலட் இனி பல்வேறு மின்சார இருசக்கர வாகனப் பிரிவுகளிலும் தனது தயாரிப்புகளை களமிறக்க திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. புதிய ஆலை பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு சோதனை அமைப்புகளுடன் கட்டமைக்கப்படும்.
ஆயிரக்கணக்கானோருக்கு வேலை
சூளகிரியில் அமையும் இந்த புதிய மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலை மூலமாக நேரடியாக 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அல்ட்ராவைலட் தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆலையின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்போது வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூரில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருவதால், அதன் அருகே உள்ள ஓசூரில் தனது ஆலையை அமைக்க முடிவு செய்ததாக அல்ட்ராவைலட் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது ஓசூரில் மின்சார வாகன சப்ளையர்கள் நெட்வொர்க் அதிகம் இருப்பதும் காரணமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications


