பெட்ரோல் பைக் வாங்குற விலையில் எலெக்ட்ரிக் பைக்! மாதம் ரூ.2,499 கட்டுனா போதுமா?
அல்ட்ராவயலட் ஆட்டோமோட்டிவ் (Ultraviolette Automotive) நிறுவனம் அதன் எக்ஸ்47 (X47) எலெக்ட்ரிக் பைக்கிற்கான புதிய 'பேட்டரி ஃபிளெக்ஸ்' (Battery Flex) என்கிற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பைக்கின் விலையை குறைக்கும் விதமாகவும், சார்ஜிங் செய்வதில் உள்ள கால நேர விரயத்தை குறைக்கும் விதமாகவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தை பற்றியும், எக்ஸ்47 எலெக்ட்ரிக் பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
'BaaS' இந்த வார்த்தையை சமீப காலமாக அடிக்கடி கேட்பதுபோல் உங்களில் சிலருக்கு தோன்றலாம். இதன் முழு விரிவாக்கம் என்னவென்றால், பேட்டரி-அஸ்-அ-சர்வீஸ் (Battery-as-a-Service) என்பதாகும். சமீப காலமாக பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கையில் எடுத்திருக்கும் இந்த திட்டத்தின்படி, வாங்கும் எலெக்ட்ரிக் வாகனத்துடன் வழங்கப்படும் பேட்டரி ஆனது உங்களுக்கு சொந்தமானது கிடையாது.

அதனை சுழற்சி முறையில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியதாக இருக்கும். அதாவது, பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துப் போனால், சார்ஜ் தீர்ந்த அளவிற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி முழுவதுமாக சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலமாக பேட்டரிக்கான விலை தவிர்க்கப்படுவதால், எலெக்ட்ரிக் வாகனத்திற்கான விலையும் குறைகிறது.
இதைவிட முக்கியமாக, சார்ஜ் ஆகும் வரை காத்திருக்க வேண்டிய தேவை தவிர்க்கப்படுவதால், இந்த BaaS முறையை எம்ஜி மோட்டார் (MG Motor), ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) என நிறைய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பின்பற்ற ஆரம்பித்துள்ளன. அந்த வகையில், அல்ட்ராவயலட் நிறுவனமும் பேட்டரி ஃபிளெக்ஸ் என்கிற பெயரில் இந்த முறையை கையில் எடுத்துள்ளது.

அல்ட்ராவயலட் நிறுவனத்தின் பேட்டரி ஃபிளெக்ஸ் திட்டத்தின்படி அதன் எக்ஸ்47 எலெக்ட்ரிக் பைக்கை வாங்கினால் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.1.49 லட்சம் மட்டுமே ஆகும். புதிய கண்டுப்பிடிப்புகள் மற்றும் அதிநவீன இவி தொழிற்நுட்பங்களுக்கு பெயர் போன பெங்களூருவை சேர்ந்த அல்ட்ராவயலட் நிறுவனம் ஈக்கோஃபி (Ecofy) என்கிற பசுமையான சுற்றுச்சூழலை விரும்பும் வங்கி-அல்லா நிதி நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
இந்த ஈக்கோஃபி நிறுவனம் சிறந்த நெகிழ்வுத்தன்மை உடன் நிதி ஆப்ஷன்கள் மற்றும் வாடிக்கயாளர்களுக்கு முதற்கட்டமாக ஏற்படும் அதிக நிதி சுமையை குறைக்கும் என அல்ட்ராவயலட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேட்டரி ஃபிளெக்ஸ் திட்டத்தின்படி ரூ.1.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் எக்ஸ்47 எலெக்ட்ரிக் பைக்கிற்கு மாத சந்தாவாக ரூ.2,499 செலுத்த வேண்டியிருக்கும்.
மற்றப்படி, அல்ட்ராவயலட் எக்ஸ்47 எலெக்ட்ரிக் பைக்கின் மற்ற அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. எக்ஸ்47 பைக்கில் 10.3kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 323கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது அல்ட்ராவயலட் நிறுவனம். இந்த பேட்டரி பொருத்தப்படும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 40.2 எச்பி மற்ற்ம் 610 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது.
இந்த எலெக்ட்ரிக் பைக் அதிகப்பட்சமாக மணிக்கு 145கிமீ வேகத்தில் இயங்கக்கூடியதாக உள்ளது. இரு விதமான வேரியன்ட்களில் கிடைக்கும் எக்ஸ்47 எலெக்ட்ரிக் பைக்கில் அல்ட்ராவயலட் ஹைப்பர்சென்ஸ் ரேடார் டெக்னாலஜி, முன் & பின்பக்க கேமராக்கள், 5-இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே உள்பட பல அட்வான்ஸான தொழிற்நுட்ப அம்சங்கள் உடன் நீளமான டிராவல் கொண்ட சஸ்பென்ஷன் பயன்படுத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் நிறுவனமான அல்ட்ராவயலட் ஏற்கனவே பல புதுமைகளை எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் புகுத்தி உள்ளது. அந்த வரிசையில் தற்போது பேட்டரி ஃபிளெக்ஸ் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது. மற்ற நிறுவனங்கள் பேட்டரியின் சார்ஜ் அல்லது வாகனம் ஓடிய தூரத்தை பொறுத்து கட்டணத்தை வசூலிக்கும் நிலையில், அல்ட்ராவயலட் நிறுவனம் மாத சந்தா முறையில் கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








