பழைய பெட்ரோல் பைக்கை கொடுத்தால் கூடுதல் சலுகை! ரூ.30,000 குறைவான விலையில் அல்ட்ராவயலட் எலெக்ட்ரிக் பைக்குகள்!
பெங்களூருவில் இருந்து தோன்றிய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் அல்ட்ராவயலட் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் 'கில் த பெட்ரோல் பில்' என்கிற பெயரில் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. எதற்காக இந்த திட்டம்? இந்த திட்டத்தினால் அல்ட்ராவயலட் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அல்ட்ராவயலட் நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு அதிவேகமாக இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்ப்படுகின்றன. அவையாவன, அல்ட்ராவயலட் எஃப்77 மற்றும் எக்ஸ்-47 என்பன ஆகும். இந்த நிலையில்தான், தனது எலெக்ட்ரிக் பைக்குகளின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக 'கில் த பெட்ரோல் பில்' என்கிற திட்டத்தை அல்ட்ராவயலட் நிறுவனம் துவங்கியுள்ளது.

இதன் தமிழ் அர்த்தம் என்னவென்றால், பெட்ரோல் செலவை இல்லாமல் ஆக்குங்கள் என்பதாகும். அல்ட்ராவயலட் நிறுவனத்தின் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே, பெட்ரோல் பைக்குகளுக்கு பதிலாக எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்க வைப்பது ஆகும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், பெட்ரோல் பைக்குகளை கொடுத்து எக்ஸ்சேஞ்சில் அல்ட்ராவயலட்டின் எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்க வைப்பது ஆகும்.
இது வழக்கமான ஒன்றே என்றாலும், அல்ட்ராவயலட்டின் 'கில் த பெட்ரோல் பில்' திட்டத்தின் கீழ், இவ்வாறு பெட்ரோல் பைக்கை கொடுத்து எலெக்ட்ரிக் பைக்கை எக்ஸ்சேஞ்சில் வாங்குவோருக்கு பணம் தள்ளுபடி சலுகை கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் செய்யும் பெட்ரோல் பைக்கை கடந்த 2 வருடங்களில் எவ்வளவு தொலைவிற்கு இயக்கி உள்ளீர்கள் என்பதை பொறுத்து இந்த சலுகை ஆனது கிடைக்கும்.

உதாரணத்திற்கு, பெட்ரோல் பைக்கை கடந்த 2 வருடங்களில் 20 ஆயிரம் கிமீ தொலைவிற்கு ஓட்டி இருந்தால் ரூ.20 ஆயிரம் பணம் தள்ளுபடி கிடைக்கும் என அல்ட்ராவயலட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரூ.20 ஆயிரம் பணம் தள்ளுபடி ஆனது புதியதாக வாங்கும் அல்ட்ராவயலட் எலெக்ட்ரிக் பைக்கின் விலையில் இருந்து கழித்துக் கொள்ளப்படும். இந்த புதிய திட்டத்தின்படி அதிகப்பட்சமாக ரூ.30 ஆயிரம் வரையிலான பணம் தள்ளுபடியை பெறலாமாம்.
இது இல்லாமல், பெட்ரோல் பைக்கிற்கு பதிலாக எலெக்ட்ரிக் பைக்கை வாங்குபவர்கள் பெட்ரோல் செலவையும் தவிர்க்கலாம் என தனது வழக்கமான பிரச்சாரத்தையும் அல்ட்ராவயலட் முன் வைத்துள்ளது. பைக்கை ஓட்டும் விதம் மற்றும் பெட்ரோல் விலையை பொறுத்து மாதத்திற்கு ரூ.3,000இல் இருந்து ரூ.5,000 வரையில் பெட்ரோல் செலவாக சேமிக்கலாம் என அல்ட்ராவயலட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தில் இருந்த் விற்பனை செய்யப்படும் எஃப்77 ஆனது தற்போதைக்கு இந்தியாவிலேயே பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் பைக் ஆக விளங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் பொருத்தப்படும் 10.3kWh திறன் கொண்ட பேட்டரி ஆனது அதிகப்பட்சமாக 323கிமீ ரேஞ்சை சிங்கிள்-முழு சார்ஜில் வழங்கக் கூடியதாக உள்ளது. அல்ட்ராவயலட் எக்ஸ்-47 ஆனது கிராஸ்ஓவர் தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் பைக்காக விளங்குகிறது.
இது 10.3kWh பேட்டரி மட்டுமின்றி, 7.1kWh பேட்டரி ஆப்ஷனிலும் கிடைக்கிறது. அதிகப்பட்சமாக 40.2 எச்பி வரையிலான இயக்க ஆற்றலில் இயங்கக்கூடிய இந்த எலெக்ட்ரிக் பைக்கில் அதிகப்பட்சமாக மணிக்கு 145கிமீ வேகத்தில் செல்லலாம். பேட்டரி சந்தா திட்டத்தில் எக்ஸ்-47 பைக்கை வெறும் ரூ.1.49 லட்சத்தில் வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீப காலத்தில் கவனத்தை ஈர்த்துள்ள இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் அல்ட்ராவயலட் நிறுவனமும் ஒன்றாகும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய 'கில் த பெட்ரோல் பில்' திட்டத்தின் மூலமாக பலர் அல்ட்ராவயலட் எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்குவர் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும், பலரும் எதிர்பார்க்கும் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தால்தான் அல்ட்ராவயலட் பிராண்ட் இன்னும் பெரியதாக வளரும் என்பது எங்களது கருத்து.


Click it and Unblock the Notifications