வெறும் 2 வருடங்களில் 1.46கிமீ பயணம்... எலெக்ட்ரிக் பைக்கில் இது சாத்தியம் இல்லனு நிறைய பேர் நினைக்குறாங்க!
அல்ட்ராவயலட் நிறுவனத்தின் எஃப்77 மேக் 2 எலெக்ட்ரிக் பைக்கின் தரத்தை நிரூபிக்கும் விதமாக கடந்த 2 வருடங்களில் சுமார் 1.46 லட்ச கிமீ தொலைவிற்கு இந்த எலெக்ட்ரிக் பைக்கை ஓட்டி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. அல்ட்ராவயலட் நிறுவனத்தை சேர்ந்த ஹரீஷ் சுரம்படே என்பவரால் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த சாதனை குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் எஃப்77 எலெக்ட்ரிக் பைக்கிற்கு இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் சிறப்பாக வரவேற்பு கிடைத்து வருகிறது. எஃப்77 பைக்கின் அப்கிரேட் வெர்சனாக எஃப்77 மேக் 2 ஆனது இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்காக பலரும் பாராட்டிவரும் எஃப்77 மேக் 2-இன் தரத்தை உலகிற்கு நிரூபிக்கும் விதமாக வெறும் இரண்டே வருடங்களில் சுமார் 1,46,000 கிமீ தொலைவிற்கு குறிப்பிட்ட ஒரு எஃப்77 மேக் 2 எலெக்ட்ரிக் பைக் ஓட்டிப் பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இரு உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் ஒரு உலக சாதனை என்னவென்றால், வெறும் 19 நாட்களில் 6 சர்வதேச எல்லைகள் அல்ட்ராவயலட் எஃப்77 மேக் 2 எலெக்ட்ரிக் பைக்கில் கடக்கப்பட்டுள்ளன. இதில், இந்திய-சீன எல்லையில் இமயமலை தொடரில் அமைந்துள்ள நாது லா கணவாயை கடந்தது முக்கியமான அம்சமாகும். ஏனெனில், சுமார் 4,310மிமீ உயரத்தில் அமைந்துள்ள இந்த கணவாயை கடந்த முதல் எலெக்ட்ரிக் பைக் எஃப்77 மேக் 2 ஆகும்.

கடல் மட்டத்தில் இருந்து மிக உயரத்தில் அமைந்துள்ள நாது லா கணவாயை கடக்கும்போது மைனஸ் 10 டிகிரி அளவிற்கு குளிர் வாட்டி வதைத்ததாகவும், இருப்பினும் எஃப்77 மேக் 2 எந்தவொரு பிரச்சனையும் இன்றி அதனை கடந்து சென்றதாகவும் அந்த சமயத்தில் பைக்கை ரைடர் ஹரீஷ் சுரம்படே தெரிவித்துள்ளார்.
6 சர்வதேச பார்டர்களை வெறும் 19 நாட்களில் கடப்பதற்காக 3 ஆயிரம் கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு பைக் இயக்கப்பட்டுள்ளது. இரண்டாவது உலக சாதனை என்னவென்றால், எலெக்ட்ரிக் பைக்கில் நாடு தழுவிய அளவிலான பயணத்தை அதிக தொலைவிற்கு இந்த பயணத்தில் மேற்கொண்டது ஆகும். 600 நாட்களில் அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் இந்த எஃப்77 மேக் 2 எலெக்ட்ரிக் பைக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நீண்ட நெடிய பயணத்தின் போது சுமார் 1.2 லட்சம் கிமீ தொலைவிற்கு பைக் இயக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 12 சர்வதேச எல்லைகள் அல்ட்ராவயலட் எஃப்77 மேக் 6 பைக்கின் இந்த பயணத்தில் கடக்கப்பட்டுள்ளன. இதில், கர்துங் லா மற்றும் உம்லிங் லா போன்ற மைனஸ் 15 டிகிரி வரையில் வெப்பம் குறைவான பகுதியில் இருந்து 48 டிகிரி வரையில் வெப்பம் மிகுந்த பகுதி வரையில் பைக் ஓட்டி பார்க்கப்பட்டது.
ஹரீஷ் சுரம்படே இந்த நீண்ட தொலைவு பயணத்தை முடித்த பின்பும் பைக்கின் பேட்டரி 95% நல்ல நிலையில் உள்ளதாக அல்ட்ராவயலட் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தில் சுமார் 5,763 லிட்டர் பெட்ரோல் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அதன் மூலம் ரூ.5,93,617 பெட்ரோல் செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, 9,468 கிலோ கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதே நீண்ட நெடிய பயணத்தை ஒரு பெட்ரோல் பைக்கில் மேற்கொண்டு இருந்தால் எந்த அளவிற்கான கார்பன்-டை-ஆக்சைடு வெளியே உமிழப்பட்டு இருக்கும் என்பதை தான் மேலே பார்த்தோம். அதுமட்டுமின்றி, பெட்ரோல் மற்றும் அதற்கான பல லட்ச ரூபாய் செலவு என எல்லாமே எலெக்ட்ரிக் பைக் என்பதால் மிச்சமாகியுள்ளது. எலெக்ட்ரிக் பைக்குகளில் இவ்வாறான தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கு இருக்கும் நிலையில் அதனை அல்ட்ராவயலட் நிறுவனம் தனது எஃப்77 மேக் 2 மூலம் உடைத்தெறிந்துள்ளது.
கூடுதலாக ஒரு படம் சேர்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications