165 கிமீ ரேஞ்சுடன் வெளியாகும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்.. ஜூலை மாசம் வீட்டுக்கு ஓட்டிட்டு வந்துடலாம்
ப்ரீமியம் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான இருப்பிடமாக உருவெடுத்து வருகிறது அல்ட்ராவைலட் (Ultraviolette) எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம். இந்தியாவில் மற்ற நிறுவனங்கள் எல்லாம் குறைவான விலை போதுமான வசதிகள் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வரும் நிலையில், அல்ட்ராவைலட் நிறுவனம் மட்டும் யாரும் இன்னும் காலடி எடுத்து வைக்காத ப்ரீமியம் இருசக்கர வாகன பிரிவிலேயே புதிய வாகனங்களை உருவாக்கி வருகிறது.
கடந்தாண்டு மார்ச் மாதம் டெஸராக்ட் (Tesseract) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் ஷாக்வேவ் (Shockwave) என்ற டூயல் ஸ்போர்ட் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது அல்ட்ராவைலட். இரண்டு வாகனங்களையுமே இந்த 2026ம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடவிருப்பதாகவும், டெலிவரியைத் தொடங்கவிருப்பதாகவுமே அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி டெலிவரி தொடங்கவில்லை.

இந்நிலையில் டெஸராக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரினை 2027ம் ஆண்டிலேயே அல்ட்ராவைலட் நிறுவனம் வெளியிடவிருப்பதாக தகவல் வெளியானது. மேலும், அதே ஜனவரி 2027ல் தான் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிரியைத் தொடங்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அதனைத் தொடர்ந்து ஷாக்வேவ் பைக் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
டெஸராக்டைப் போல இல்லாமல் ஷாக்வேவ் எலெக்ட்ரிக் பைக்கை முன்னதாக, அடுத்த சில மாதங்களிலேயே விற்பனைக்கு கொண்டு வர அல்ட்ராவைலட் திட்டமிட்டிருக்கிறதாம். ஜூலை மாதம் இந்த டூயல் ஸ்போர்ட் எலெக்ட்ரிக் பைக்கின் டெலிவரியை இந்தியாவில் தொடங்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த பைக்கின் முன்பதிவை கடந்தாண்டு மார்ச் மாதமே அல்ட்ராவைலட் தொடங்கிவிட்டது. முதலில் முன்பதிவு செய்யும் 1,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 1.50 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக்கை விற்பனை செய்யவிருப்பதாக அப்போது அறிவித்திருந்தது அந்நிறுவனம். அதெல்லாம் முடிந்துவிட்ட நிலையில், இப்போது நீங்கள் முன்பதிவு செய்தால் 1.75 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தான் வாங்க முடியும்.
120 கிலோ எடையைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 14.7 hp பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொடுத்துள்ளது அல்ட்ராவைலட். இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேட்டரி குறித்த தகவல்களை அந்நிறுவனம் அளிக்கவில்லை. ஆனால் 165 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை இந்த பைக் கொண்டிருப்பதாக மட்டும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.
டூயல் ஸ்போர்ட் எண்டூரோ பைக் என்பதால் சிறப்பான சஸ்பென்ஷன் செட்டப்புகளை இந்த எலெக்ட்ரிக் பைக்கில் கொடுத்துள்ளது அல்ட்ராவைலட். இந்த பைக்கின் முன்பக்கம் 19 இன்ச் வீலும், 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் 200 மிமீ டிராவலுடன் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் 17 இன்ச் வீல், 180 மிமீ டிராவல் கொண்ட மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்குகள் தான். முன்பக்கம் 270 மிமீ, பின்பக்கம் 220 மிமீ. காஸ்மிக் பிளாக் மற்றும் ஃபிராஸ்ட் ஒயிட் என இரண்டு விதமான நிறங்களில் இந்த எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியிருந்தது அல்ட்ராவைலட். ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் கவாஸாகி KLX230 உள்ளிட்ட எரிபொருள் பைக் வாடிக்கையாளர்களுக்கான எலெக்ட்ரிக் மாற்றாக ஷாக்வேவை விற்பனை செய்யவுள்ளது அல்ட்ராவைலட்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்: வழக்கமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கும் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடாமல், தனி ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறது அல்ட்ராவைலட். தற்போது அந்நிறுவனம் விற்பனை செய்த வரும் F77 மற்றும் X-47 ஆகிய இரண்டுமே தனித்துவமான பைக்குகள் தான். அந்த வரிசையில் புதிதாக இணையவிருக்கிறது ஷாக்வேவ். தற்போது கூறப்படுவதைப் போலவே அடுத்த இரண்டு மாதங்களில் டெலிவரி தொடங்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பதே அனைரவது கருத்தாகவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications