2 ஸ்ட்ரோக் போன்ற ரைடிங் அனுபவம்... அல்ட்ராவயலெட் ஷாக்வேவ் EV பைக் எப்போது அறிமுகம்? அதிகாரப்பூர்வ தகவல்!
அல்ட்ராவயலெட் நிறுவனம் தனது புதிய ஷாக்வேவ் மின்சார மோட்டார்சைக்கிளை அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இதன் மூலம் பல மாதங்களாக நீடித்து வந்த வெளியீட்டு குழப்பத்துக்கு தற்போது தெளிவு கிடைத்துள்ளது. இந்த புதிய மாடலானது அந்நிறுவனத்தின் புதிய 100V மின்சார கட்டமைப்பு தொழில்நுட்பத்துடன் வர இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகி உள்ளது.
கடந்த 2025ம் ஆண்டு ஷாக்வேவ் பைக்கையும், டெஸராக்ட் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையும் அல்ட்ராவயலெட் நிறுவனம் பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த ஆண்டு துவக்கத்திலேயே டெலிவிரி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த இரண்டு மாடல்களின் அறிமுகத்தை தொடர்ந்து அல்ட்ராவயலெட் நிறுவனம் தள்ளிப்போட்டு வந்தது.

இந்த நிலையில், வரும் 2027ம் ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் ஷாக்வேவ் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக இன்று அல்ட்ராவயலெட் நிறுவனம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் அறிவிக்கப்பட்ட காலக்கெடுவில் ஷாக்வேவ் சந்தைக்கு வராத நிலையில், 100V மின்சார கட்டமைப்பு தொழில்நுட்பத்திற்கு ஷாக்வேவ் மாற்றப்பட்டதே கால தாமதத்திற்கு காரணமாக தெரிய வந்துள்ளது.
புதிய 100V கட்டமைப்பு பயன்படுத்துவதன் மூலமாக அதிக திறன், மேம்பட்ட வெப்ப மேலாண்மை மற்றும் வேகமான சார்ஜிங் போன்ற பலன்களை இந்த பைக் பெற முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. இதன் தனித்துவமான வடிவமைப்பு இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இந்த பைக்கை FUNDURO வகையாக அல்ட்ராவயலெட் நிறுவனம் அழைக்கிறது.
எடை குறைந்த உடலமைப்புடன், சுவாரஸ்யமான ரைடிங் அனுபவத்தை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பழைய தலைமுறை இரண்டு ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிள்களின் ரைடிங் அம்சங்களை வழங்கும் வகையில் இந்த எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வருவதாக அல்ட்ராவயலெட் குறிப்பிடுகிறது.
இந்த ஷாக்வேவ் பைக் ஒற்றை இருக்கை மற்றும் இரட்டை இருக்கை என இரண்டு வகைகளில் கிடைக்கும் என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனியாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கும், பின்னால் ஒருவர் அமர்ந்து செல்வதற்கான வாய்ப்பையும் வழங்கும். இருப்பினும், இரண்டு வகைகளுக்கும் இடையிலான உபகரணங்கள் மற்றும் விலை வேறுபாடு குறித்து நிறுவனம் இன்னும் தகவல் வெளியிடவில்லை.
அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு வர இருப்பதால், புதிய ஷாக்வேவ் எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி பணிகளிலும் அல்ட்ராவயலெட் தீவிரமாக இறங்கி உள்ளது. தற்போதைய உற்பத்தி ஆலையிலேயே இந்த மின்சார பைக்குக்கு என தனி உற்பத்தி பிரிவை அல்ட்ராவயலெட் அமைத்து வருகிறது. ஆனால், எப்போது உற்பத்தி துவங்கப்படும் என்பது குறித்த தகவல் இல்லை.
கடந்த ஆண்டு ஷாக்வேவ் பைக்குடன் பொது பார்வைக்கு வந்த அல்ட்ராவயலெட் நிறுவனத்தின் டெஸராக்ட் ஸ்கூட்டரிலும் 100V மின்சார கட்டமைப்பு பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஒரே தொழில்நுட்ப அடிப்படையை வெவ்வேறு வகை வாகனங்களுக்கு நிறுவனம் விரிவுபடுத்தி வருகிறது. இருப்பினும், இரண்டு வாகனங்களிலும் ஒரே பேட்டரி அல்லது மோட்டார் பயன்படுத்தப்படும் என்று தற்போது உறுதியாக கூற முடியாது.
இதனிடையே, ஷாக்வேவ் போன்ற டெஸராக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் வித்தியமான ஸ்டைலில் வாடிக்கையாளர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷாக்வேவ் அறிமுகத்தை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அல்ட்ராவயலெட் சந்தைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


