343 கிமீ ரேஞ்ச், ரேடார் பாதுகாப்பு... ரூ.2.65 லட்சத்தில் புதிய அல்ட்ராவயலெட் X-47 Venom EV பைக் அறிமுகம்!
இந்தியாவில் மின்சார பைக் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதிக செயல்திறன், நீண்ட தூரப் பயணம் மற்றும் நவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட புதிய மாடல்களை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில், பெங்களூரை சேர்ந்த அல்ட்ராவயலெட் நிறுவனம் தனது புதிய X-47 Venom என்ற புதிய மின்சார பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் அறிமுக விலை ரூ.2.65 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்ட்ராவயலெட் நிறுவனத்தின் புதிய VX-100 என்ற 100 வோல்ட் தொழில்நுட்பத் தளத்தில் உருவாக்கப்பட்ட முதல் மோட்டார்சைக்கிள் இது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்காலத்தில் அறிமுகமாகவுள்ள அல்ட்ராவயலெட் நிறுவனத்தின் புதிய மின்சார வாகனங்களுக்கும் இந்தத் தொழில்நுட்பத் தளம் பயன்படுத்தப்படும். ஏற்கெனவே மின்சார பைக் பிரிவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ள அல்ட்ராவயலெட், இந்தப் புதிய மாடல் மூலம் செயல்திறன் மற்றும் தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

பேட்டரி, ரேஞ்ச் மற்றும் செயல்திறன்
புதிய அல்ட்ராவயலெட் X-47 Venom பைக்கில் 11 kWh திறன் கொண்ட SRB-11 என்ற பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 343 கிமீ வரை பயணிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் அதிகபட்சமாக 30 kW திறனை வெளிப்படுத்துகிறது. பின்சக்கரத்தில் 550 என்எம் முறுக்குவிசை கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைக் மணிக்கு அதிகபட்சம் 155 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. பூஜ்ய நிலையில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட 5.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது, புதிய மாடலின் எடை 20 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 180 கிலோவாக உள்ளது. எடை குறைக்கப்பட்டிருப்பது செயல்திறனுக்கு மட்டுமின்றி, பைக்கைக் கையாளும் அனுபவத்துக்கும் உதவக்கூடும். பேட்டரி தொழில்நுட்பத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முந்தைய பேட்டரி தொகுப்புடன் ஒப்பிடும்போது, புதிய பேட்டரி 15 சதவீதம் எடை குறைவாகவும், 25 சதவீதம் அதிக ஆற்றல் அடர்த்தியுடனும் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பேட்டரியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் குளிரூட்டும் அமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் அதிகபட்சமாக 12 kW திறனில் DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியில் சார்ஜ் குறைந்த நிலையிலும் அதிக செயல்திறனைப் பெற உதவும் Ballistic மோடு, தொடக்கத்திலிருந்தே செயல்படும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

ரேடார் மூலம் பாதுகாப்பு எச்சரிக்கைகள்
இந்த பைக்கில் UV Hypersense என்ற பிரத்யேக பாதுகாப்பு அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 77 GHz பின்புற ரேடார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 200 மீட்டர் வரையிலான கண்காணிப்புத் திறனைக் கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பக்கவாட்டில் வரும் வாகனங்களைக் கண்டறிந்து எச்சரிப்பது, பாதையை மாற்றும்போது ஓட்டுனரை எச்சரிக்கும் வசதி, பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் குறித்து எச்சரிப்பது, பின்புற மோதல் அபாயத்தைக் கண்டறிவது போன்ற வசதிகள் இதில் உள்ளன. மோதல் அபாயம் கண்டறியப்பட்டால் எச்சரிக்கை விளக்குகளும் செயல்படும்.
மேலும், 7 அங்குல தொடுதிரை, Mappls வழிகாட்டி வசதி, பின்புறக் கேமரா மூலம் பார்க்கிங் உதவி, க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் மென்பொருள் அப்டேட் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. வாகனம் நகர்த்தப்படுவது, கீழே விழுவது அல்லது இழுத்துச் செல்லப்படுவது போன்ற சூழல்களில் எச்சரிக்கை வழங்கும் VIOLETTE AI வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

முன்பதிவு , டெலிவிரி எப்போது?
X-47 Venom பைக்கிற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கி உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி வரும் நவம்பர் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் Afterburner Yellow, Turbo Red, Cosmic Black மற்றும் Stellar White ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கும். மேலும், பைக்கில் பயணிப்பவர்களுக்கான B-MAX பாதுகாப்பு உடையையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மோதலின்போது ஏற்படும் விசையின் தாக்கத்தை 86 சதவீதம் வரை குறைக்கும் எனக் கூறப்படுகிறது. இதனை ஐந்து முறை வரை மீண்டும் பயன்படுத்தலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications



