பஜாஜின் புதிய முயற்சியில் உருவாகும் பைக்! ஹீரோ, ராயல் என்ஃபீல்டுக்கு டஃப் கொடுக்க வருது!
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முற்றிலும் புதியதாக குறைந்த விலையில் ஒரு அட்வென்ச்சர் பைக்கை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் அல்லது 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய பஜாஜ் பைக்கில் 350சிசி என்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 250சிசி என்ஜின் வழங்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
பஜாஜ் நிறுவனத்தில் இருந்து பல்வேறு விதமான மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டாலும், அட்வென்ச்சர் பைக் எதுவும் விற்பனை செய்யப்படுவது இல்லை. ஏனெனில், மற்ற வகை பைக்குகளுக்கு எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஹார்ட்வேர் மற்றும் மெக்கானிக்கல் பாகங்களை வழங்கினாலே போதும். ஆனால், அட்வென்ச்சர் பைக்குகளுக்கு பிரத்யேகமான ஹார்ட்வேர் பாகங்களை வழங்க வேண்டியுள்ளது.

இதனாலோ என்னவோ பஜாஜ் நிறுவனம் அட்வென்ச்சர் பைக்குகள் பக்கம் மட்டும் செல்லாமல் இருந்து வந்த நிலையில், விரைவில் அட்வென்ச்சர் வகையை சேர்ந்த பைக்குகளையும் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதன்படி, முதல் பஜாஜ் அட்வென்ச்சர் பைக் இந்த 2026ஆம் ஆண்டு இறுதி அல்லது அடுத்த 2027ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பஜாஜின் இந்த புதிய பைக் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக பஜாஜ் விளங்குவதால், இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் அதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை.

குறிப்பாக, லத்தீன் அமெரிக்க நாடுகளை தான் இந்த பைக்கிற்கான மார்க்கெட்டாக பஜாஜ் கருதுகிறது. ஏனெனில், பஜாஜ் நிறுவனத்தின் முக்கியமான வெளிநாட்டு சந்தைகளில் ஒன்று மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் அடங்கிய லத்தீன் அமெரிக்கா ஆகும். அதுமட்டுமின்றி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் அட்வென்ச்சர் பைக்குகளுக்கு பெரிய அளவிலான மார்க்கெட் உள்ளது.
இந்த விபரங்கள் அனைத்தும் ஏற்கனவே நமக்கு தெரிந்தவையே. தற்போது நமக்கு புதியதாக கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், இந்த பைக்கில் 250சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளது என்பதாகும். பஜாஜ் பல்சர் என்250 பைக்கில் பொருத்தப்படும் அதே 249சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் தான் இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கிலும் வழங்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
பஜாஜின் இந்த புதிய அட்வென்ச்சர் பைக் சிலமுறை பொது சாலைகளில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது அடையாளம் காணப்பட்டு இருந்தது. அப்போது ஒருமுறை, பல்சர் என்250 பைக் உடன் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்ட போதே இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கில் 250சிசி என்ஜின் வழங்கப்படலாம் என்கிற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள விபரங்கள் அதனை மேலும் உறுதிப்படுத்தி உள்ளன. இதற்கு முன்னர் வெளியாகி இருந்த பைக்கின் சோதனை ஓட்ட படங்களில், இந்த பஜாஜ் அட்வென்ச்சர் பைக்கில் முன்பக்கத்தில் மேல்நோக்கி தூக்கப்பட்ட மட்கார்டு, சிங்கிள்-பீஸில் நீளமான இருக்கை, பின்பக்கத்தில் டாப் பாக்ஸ், வயர்-ஸ்போக் சக்கரங்கள், சாதாரணமான சாலை & ஆஃப்-ரோடு என இரண்டிற்கும் பயன்படுத்தக் கூடிய டயர்களை பார்க்க முடிந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கை ஏற்கனவே கூறியதுபோல் முக்கியமாக லத்தீன் அமெரிக்க நாட்டு சந்தைகளை டார்க்கெட் ஆக கொண்டு அறிமுகம் செய்கிறது. அதேநேரம், இந்திய சந்தையிலும் இந்த அட்வென்ச்சர் பைக்கிற்கு கணிசமான எண்ணிக்கையிலான கஸ்டமர்கள் கிடைப்பார்கள். ஏனெனில், இந்தியாவில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் கவாஸாகி KLX230 என்கிற விலை குறைவான அட்வென்ச்சர் பைக்குகள் கணிசமான மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளன.


Click it and Unblock the Notifications