ஒட்டுமொத்த இந்தியாவும் இந்த பைக்குகளுக்கு மரண வெயிட்டிங்! ராயல் என்ஃபீல்டில் இருந்து நார்டன் வரையில்!
நம்மில் பெரும்பாலானவர்கள் வாங்குவது சிங்கிள் சிலிண்டர் என்ஜினை கொண்ட பைக்குகளை ஆகும். ஏனெனில், அவற்றின் விலை தான் குறைவானதாக உள்ளது. இரு சிலிண்டர்கள் கொண்ட என்ஜினை கொண்ட பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும் அவற்றின் எண்ணிக்கை தற்போது வரையில் குறைவாகவே உள்ளது. இருப்பினும், பல ட்வின்-சிலிண்டர் என்ஜின் பைக்குகள் அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட தயாராகி வருகின்றன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 (Royal Enfield Himalayan 750): தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஹிமாலயன் 450 பைக்கின் 750சிசி வெர்சனாக இது அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதல்முறையாக கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் இத்தாலியில் நடைபெற்ற EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, கிட்டத்தட்ட அறிமுகத்துக்கு தயாரான நிலையில் ஹிமாலயன் 750 வருகிற 2026 EICMA கண்காட்சியிலும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

நார்டன் அட்லஸ் (Norton Atlas): டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அட்லஸ் மோட்டார்சைக்கிள் மிக சமீபத்தில்தான் யுகே நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்தியாவிலும் நார்டன் அட்லஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹிமாலயன் 750 பைக்கை போலவே நார்டன் அட்லஸ் பைக்கும் 2025 EICMA கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டது.
ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி750 (Royal Enfield Continental GT750): ஹிமாலயன் 750 பைக் உடன் சேர்த்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உருவாக்கி வரும் மற்றொரு 750சிசி மோட்டார்சைக்கிள் இதுவாகும். ஆனால் ஹிமாலயனை போன்று அட்வென்ச்சர் ரக பைக்காக இல்லாமல், காண்டினெண்டல் ஜிடி750 ஆனது கேஃப் ரேசர் ரக பைக்காக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டிவிஎஸ் பிஎம்டபிள்யூ ட்வின் (TVS BMW Twin): பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்துடன் இணைந்து 2-சிலிண்டர் என்ஜினை கொண்ட பைக்கை உருவாக்குவதற்கான பிளாட்ஃபாரத்தை டிவிஎஸ் மோட்டார் உருவாக்கி வைத்துள்ளது. இந்த பிளாட்ஃபாரத்தில் இருந்து டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ என இரு பிராண்ட்களில் இருந்தும் ட்வின்-சிலிண்டர் என்ஜின் கொண்ட பைக்குகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்றாலும், இரண்டிலும் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளில் சிறிய வித்தியாசம் இருக்கும்.
ஏப்ரிலியா டூராக் 457 (Aprilia Tuareg 457): இந்தியாவில் ஏப்ரிலியா நிறுவனம் ஏற்கனவே ஆர்எஸ்457 மற்றும் டுவானோ 457 என இரு பைக்குகளை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வரிசையில் விரைவில் டூராக் 457 பைக்கும் இணையவுள்ளது. மற்ற இரு 457சிசி பைக்குகளில் பொருத்தப்படும் அதே 457சிசி இணையான-இரட்டை சிலிண்டர் தான் புதிய டூராக் 457 பைக்கிலும் வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 (Royal Enfield Bullet 650): 2025 EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளுள் இதுவும் ஒன்றாகும். தற்போதைக்கு 350சிசி என்ஜின் உடன் மட்டுமே புல்லட் பைக் விற்பனை செய்யப்படும் நிலையில், அதன் 650சிசி வெர்சனாக இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 648சிசி, இணையான-இரட்டை, ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் உடன் புல்லட் 650 உருவாக்கப்பட்டு வருகிறது.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர்450 (TVS Apache RR450): டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து உருவாக்க உள்ளதாக மேலே கூறப்பட்ட புதிய என்ஜின் உடன் புதிய அப்பாச்சி ஆர்ஆர்450 பைக் உருவாக்கப்பட்டு வருகிறது. வருகிற நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என இந்த புதிய பவர்ஃபுல்லான அப்பாச்சி பைக் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 2-சிலிண்டர் என்ஜின் பைக்குகளுக்கான மார்க்கெட் மெல்ல மெல்ல விரிவடைந்து வருகிறது. மைலேஜ் அதிகமாக கிடைக்காது என்றாலும், 2-சிலிண்டர் என்ஜினால் அதிக இயக்க ஆற்றலையும், உடனடியாக அதிக டார்க் திறனையும் பெறலாம். இதனால், தொலைத்தூர நெடுஞ்சாலை பயணங்களுக்கு 2-சிலிண்டர் என்ஜின் பைக்குகளே சிறந்தவை என்பது எங்களது கருத்து.


Click it and Unblock the Notifications