ஹீரோ ஸ்கூட்டருக்கு எந்த விதத்திலும் சளைத்தது இல்ல... யமஹாவின் புதிய ஸ்கூட்டரை வாங்கலாமா?
இந்தியாவில் மேக்ஸி-ஸ்கூட்டர்களுக்கு மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக பெரியதாகி வருகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸூம் 160 உள்ளிட்ட மேக்ஸி-ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், யமஹாவில் இருந்து அடுத்ததாக என்மேக்ஸ் 155 விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வருகிற 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் யமஹா என்மேக்ஸ் 155 அறிமுகம் செய்யப்படலாம்.
இந்த புதிய யமஹா மேக்ஸி-ஸ்கூட்டர் ஆனது ஹீரோ ஸூம் 160 மேக்ஸி-ஸ்கூட்டருக்கு நேரடி போட்டியாக இருக்கும். பயண சவுகரியம், அன்றாட பயன்பாடு மற்றும் தொலைத்தூர பயணங்களுக்கான திறன் உள்ளிட்டவை இந்த இரு மேக்ஸி-ஸ்கூட்டர்களில் எவ்வாறு உள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

தோற்றத்தில் எது சிறந்தது?
ஹீரோ ஸூம் 160 ஆனது முரட்டுத்தனமான தோற்றம் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. இதனால், இந்த ஹீரோ ஸ்கூட்டர் பார்ப்பதற்கு அட்வென்ச்சர் பயணங்களுக்கான ஸ்கூட்டராக காட்சியளிக்கிறது. இதன் முன்பக்கம் நன்கு உயரமானதாக வழங்கப்படுகிறது. இதற்கு காரணம், முன்பக்க விண்ட்ஷீல்டு நன்கு பெரியதாக பொருத்தப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த ஸ்கூட்டரின் உடலமைப்பே நன்கு ஸ்டைலிஷாக உள்ளது.
மறுபக்கம், புதிய யமஹா என்மேக்ஸ் 155 ஸ்கூட்டர் ஆனது முரட்டுத்தனமான தோற்றத்திற்கு பதிலாக பிரீமியம் தரத்திலானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப, மென்மையான டிசைனிலான பாடி பேனல்கள் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளன. என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரிலும் நன்கு பெரியதான விண்ட்ஷீல்டு முன்பக்கத்தில் பொருத்தப்படுகிறது. ஆனால், முக்கால்வாசி விண்ட்ஷீல்டு ஸ்கூட்டரின் முன்பக்க பாடி பேனல் மீது பொருத்தப்பட்டுள்ளது.

தொழிற்நுட்ப வசதிகள் எதில் சிறந்தது?
ஸூம் 160 ஸ்கூட்டரில் டிஜிட்டல் கன்சோல் திரை, சாவியில்லாமல் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் வசதி மற்றும் ஐடியல் ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை ஹீரோ நிறுவனம் வழங்குகிறது. யமஹா என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரில் இன்னும் அட்வான்ஸாக ஸ்மார்ட்போன் உடன் இணைக்கக்கூடிய TFT டிஸ்பிளே, டிராக்ஷன் கண்ட்ரோல், ABS, USB சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
அன்றாட பயன்பாட்டிற்கான அம்சங்கள்
ஸூம் 160 ஸ்கூட்டரில் 14-இன்ச் அலாய் சக்கரங்களில் பொருத்தப்படும் பிளாக்-பேட்டர்ன் டயர்கள் ஸ்கூட்டரின் ரக்டான தோற்றத்தை மேலும் மெருக்கேற்றக் கூடியவைகளாக உள்ளன. அதுவே, என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரில் சற்று சிறியதாக 13 இன்ச்சில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நெரிசல் மிகுந்த அன்றாட நகர்புற சாலைகளுக்கு ஏற்றவையாக இருக்கும்.
வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் 25 லிட்டர்கள் கொள்ளளவில் இடவசதி வழங்கப்படுகிறது. ஆனால், ஸூம் 160 ஸ்கூட்டரில் 22 லிட்டர்கள் அளவிற்கு மட்டுமே ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஹீரோ மேக்ஸி-ஸ்கூட்டரின் அடிப்பகுதி ஆனது தரையில் இருந்து 155மிமீ-இல் சற்று உயரமாக வழங்கப்படுகிறது.
என்ஜின்
ஸூம் 160 ஸ்கூட்டரில் 156சிசி லிக்யுடு-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 14 பிஎஸ் மற்றும் 13.7 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரின் 155சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 15.4 பிஎஸ் மற்றும் 13.9 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யமஹா என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரில் வெளிநாடுகளில் பொருத்தப்படும் மேற்கூறப்பட்ட என்ஜின் பொருத்தப்படாமல், இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் பொருத்தப்படும் என்ஜினே வழங்கப்படும். அப்படி இருப்பினும், ஹீரோ ஸூம் 160 ஸ்கூட்டரை காட்டிலும் பவர்ஃபுல்லானதாக என்மேக்ஸ் 155 இருக்கும். இன்னும் இந்த புதிய யமஹா மேக்ஸி-ஸ்கூட்டரின் விலை அறிவிக்கப்படவில்லை. அது அறிவிக்கப்பட்ட பின்னரே ஹீரோ ஸூம் 160 ஸ்கூட்டருடன் ஒப்பிடுகையில் இது எந்த அளவிற்கு சிறந்தது என்பது முழுமையாக தெரியவரும்.


Click it and Unblock the Notifications