வெஸ்பாவின் மூன்று புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு: இந்திய அறிமுகம் எப்போது?
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தனித்துவமான வடிவமைப்புடன் கூடிய ஸ்கூட்டர்களுடன் ரசிகர்களை ஈர்த்து வருகிறது வெஸ்பா நிறுவனம். இதுவரை பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு பெயர்பெற்ற இந்நிறுவனம், தற்போது மின்சார வாகனச் சந்தையிலும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக மூன்று புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
வெஸ்பா அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய மின்சார ஸ்கூட்டர்களுக்கு ஸ்பிரிண்ட் எஸ் (Sprint S), பிரைமாவெரா (Primavera), பிரைமாவெரா டெக் (Primavera Tech) எனப் பெயரிடப்பட்டுள்ளது. மூன்று மாடல்களும் வெஸ்பாவின் பாரம்பரிய வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும், பேட்டரி திறன், ரேஞ்ச் மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் சில முக்கியமான வேறுபாடுகள் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி, ரேஞ்ச்
முதலில் ஸ்பிரிண்ட் எஸ் மற்றும் பிரைமாவெரா ஆகிய இரண்டு மாடல்களிலும் 2.3 kWh திறன் கொண்ட கழற்றி மாட்டும் வசதி கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் 3.1 kW திறன் கொண்டது. இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் WMTC சோதனை முறையின்படி 68 கிமீ தூரம் பயணிக்க முடியும். நகர்ப்புறங்களில் குறுகிய தூரப் பயணங்களுக்கு இந்த ரேஞ்ச் போதுமானதாக இருக்கலாம். மேலும், இந்த ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ள பேட்டரியை வாகனத்திலிருந்து தனியாகக் கழற்றி சார்ஜ் செய்ய முடியும். 500W சார்ஜரைப் பயன்படுத்தும்போது பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக ரேஞ்ச், கூடுதல் வசதிகள்
வெஸ்பாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் அதிக வசதிகளைக் கொண்ட டாப் மாடலாக பிரைமாவெரா டெக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 4.2 kWh திறன் கொண்ட பெரிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் மின்மோட்டார் 3.6 kW திறனை வெளிப்படுத்துகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிமீ ரேஞ்ச் கிடைக்கும்.
இந்த மாடலில் 4.3 அங்குல TFT டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் இணைப்பு, நேவிகேஷன் வசதி, கீலெஸ் இக்னிஷன் மற்றும் ஸ்கூட்டரின் பார்க்கிங் இடத்தை கண்டறியும் Find My Scooter வசதிகளும் இடம்பெற்றுள்ளன. முதல் மூன்று ஆண்டுகளுக்கு நேவிகேஷன் இலவசமாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரைமாவெரா டெக் மாடலில் Eco மற்றும் Power என இரண்டு ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப செயல்திறனையும் மின்சாரப் பயன்பாட்டையும் மாற்றிக்கொள்ள முடியும். இதில் பெரிய பேட்டரி இடம்பெற்றுள்ளதால் எடை 130 கிலோவாக உள்ளது. மற்ற இரண்டு மாடல்களின் எடை பேட்டரியுடன் சேர்த்து 111 கிலோவாக இருக்கிறது.
வடிவமைப்பு மற்றும் வசதிகள்
மூன்று ஸ்கூட்டர்களிலும் வெஸ்பாவின் அடையாளமான பாரம்பரிய வடிவமைப்பு தொடர்கிறது. பெட்ரோல் மாடல்களுடன் ஒப்பிடும்போது சைலென்சர் இல்லாதது மட்டுமே வெளிப்புறத்தில் முக்கியமான வித்தியாசமாகத் தெரிகிறது. மேலும், மூன்று மாடல்களிலும் முழுமையான LED விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்புறத்தில் 200 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 140 மிமீ டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. பிரைமாவெரா டெக் மாடலில் கூடுதலாக சிங்கிள் சேனல் ABS வசதி இடம்பெற்றுள்ளது. மேலும், 12 மற்றும் 11 அங்குல சக்கரங்களுடன் முறையே 120 மற்றும் 110மிமீ அகலமுள்ள டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவிற்கு எப்போது?
தற்போது இந்த மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து வெஸ்பா எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருகளுக்கான வரவேற்பு மிக அதிகமாக இருப்பதால், அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் உள்ளிட்ட பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் நேரடியாகப் போட்டியிடும்.


Click it and Unblock the Notifications


