ஆக்டிவாவுக்கு எமனாகும் புதிய ஸ்கூட்டர் வெளியானது.. கிளாஸின லுக்குடன் பெரிய இன்ஜினைக் கொண்டுள்ளது
உலகளவில் ஸ்கூட்டர்களுக்குப் பெயர் போன வெஸ்பா நிறுவனம் ஆட்டன்டெஸிமோ எடிஷன் (Ottantesimo Edition) என்ற சிறப்பு எடிஷன் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. வெஸ்பா பிராண்டு உருவாகி 80 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக இந்த சிறப்பு எடிஷனை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். இதற்காக '80 Years of an Icon' என்ற நிகழ்வும் இத்தாலியின் தலைநகரான ரோமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நிகழ்விலேயே இந்த சிறப்பு எடிஷன் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது.
இதனை வழக்கமான பயனாளர்களுக்கான ஸ்கூட்டராக அந்நிறுவனம் வெளியிடவில்லை. மாறாக, எங்கேயும் கிடைக்காத, தனித்துவமான பொருட்களை சேகரிக்கும், சேகரிப்பாளர்களுக்கான ஸ்கூட்டராகவே பார்க்கிறது வெஸ்பா. எனவே தான் இந்த ஆட்டன்டெஸிமோ எடிஷனை வெறும் 1,946 யூனிட்டுகள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யவுள்ளது. அது என்ன 1,946 என்று தானே கேட்கிறீர்கள். வெஸ்பா பிராண்டு உருவானது அந்த ஆண்டு தான். எனவே அதனை நினைவுகூறும் விதமாக 1,946 ஸ்கூட்டர்களை மட்டும் தயாரிக்கவுள்ளது.

வெஸ்பாவின் சர்வதேச லைன்அப்பில் இருக்கும் GTS 310 என்ற ஸ்கூட்டரை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆட்டன்டெஸிமோ சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. 80 ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்பா எதன் அடிப்படையில் உருவெடுத்ததோ, அந்த அம்சங்களை எல்லாம் நினைவு கூறும் விதமான வடிவமைப்பில் இந்தப் புதிய சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.
முழுவதும் ஸ்டீலாலேயே உருவாக்கப்பட்டது போலான வெளிப்புற டிசைனுடன் புதிய சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர் வெளியாகியுள்ளது. அதற்கு மேலே தனித்துத் தெரியும் வகையில் பச்சை நிறத்தில் ஹைலைட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சீட் மற்றும் வீல்களிலுமே அதே பச்சை நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை இந்த ஸ்கூட்டர் தனித்துவமான ஒன்று என்பதை சொல்லாமல் சொல்கின்றன.

இந்த 1,946 ஸ்கூட்டர்களுக்கும் நம்பர் பேட்ஜைக் கொடுத்து இன்னும் தனித்துவமானதாக மாற்றியிருக்கிறது வெஸ்பா. அண்டர் சீட் கம்பார்ட்மென்டில் இந்த நம்பரை நீங்கள் பார்க்கலாம். அந்த நம்பர் இந்த சிறப்பு எடிஷன் ஸ்கூட்டரின் ஒன்றில் மட்டும் தான் இருக்கும். மேலும், ஸ்கூட்டர் பேனல் மீது 80 ஆண்டுகள் என்பதைக் குறிக்கும் விதமாக 80 என்ற எண்ணும் அதே பச்சை நிறத்தில் இடம்பெற்றிருக்கிறது.
மிகவும் கிளாஸியாக, ரெட்ரோ லுக்கைக் கொண்ட ஸ்கூட்டர் போலான வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும், வசதிகளில் மாடர்னாகவே இருக்கிறது இந்த ஆட்டன்டெலிமோ எடிஷன். LED விளக்குகள், 5 இன்ச் கலர் TFT டிஸ்பிளே ஆகிய அம்சங்களை இந்த ஸ்கூட்டரில் கொடுத்துள்ளது அந்நிறுவனம். இத்துடன் வெஸ்பாவின் MIA கனெக்டிவிட்டி சிஸ்டமும் இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்பா ஸ்கூட்டர் லைன்-அப்பிலேயே மிகவும் பவர்ஃபுல்லான 310 hpe இன்ஜின் இந்த சிறப்பு எடிஷன் மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் 310 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜினானது 25 hp பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் வெஸ்பா ஸ்கூட்டர் லைன்-அப்பிலேயே மிகவும் பவர்ஃபுல்லான ஒன்றாக இந்த சிறப்பு எடிஷன் மாடலையும் நாம் கூறலாம்.
இந்தியாவில் பல்வேறு ஸ்கூட்டர்களை வெஸ்பா விற்பனை செய்து வருகிறது. அதிகபட்சமாக 150 சிசி வரையிலான இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர்களை இந்தியாவில் வெஸ்பா விற்பனை செய்கிறது. ஆனால், இந்த சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியாவதற்கான வாய்ப்புகள் இல்லை. மிகவும் குறைவான எண்ணிக்கை என்பதாலும், இந்தியாவில் வழக்கமான வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கே டிமாண்டு குறைவு என்பதாலும், இந்த சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியாகாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் வெஸ்பாவிற்கு என்று ஒரு தனி மதிப்பு இருக்கிறது. அங்கு அது வெறும் ஸ்கூட்டர் பிராண்டு மட்டும் கிடையாது, ஒரு கலாச்சார அடையாளமும் கூட. ஆனால் இந்தியாவில் வெஸ்பாவிற்கு அந்தளவிற்கு பிராண்டு வேல்யூ கிடையாது. எனவே இந்தியாவில் இந்த சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர் வெளியாகாது என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.


Click it and Unblock the Notifications