ஹீரோவின் விடா பிராண்டில் 3 புதிய எலக்ட்ரிக் பைக் கான்செப்ட்டுகள் அறிமுகம்!
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் மின்சார வாகன பிராண்டான விடா (VIDA) நிறுவனம், இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் EICMA 2026 கண்காட்சியில் மூன்று புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன கான்செப்ட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்ற மோட்டார்சைக்கிள், அதிக செயல்திறன் கொண்ட ஆஃப்-ரோடு எலக்ட்ரிக் பைக் மற்றும் அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என மூன்று விதமான எலெக்ட்ரிக் பைக் கான்செப்ட்டுகளை விடா காட்சிப்படுத்தியுள்ளது. மேலும், ஐரோப்பிய சந்தையிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளது.

விடா யுபிஎக்ஸ் (VIDA UBX)
விடா அறிமுகப்படுத்திய UBX கான்செப்ட் பைக் மாடலானது, நகர்ப்புற சாலைகளில் பயணிப்பதற்கும் சாகச பயணங்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நியோ-நேக்கட் (Neo-Naked) ஸ்ட்ரீட்ஃபைட்டர் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் அகலமான ஹேண்டில்பார், ஹேண்ட்கார்டுகள் மற்றும் நவீன வடிவமைப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் தனித்துவமான ஸ்விங்கார்ம் அமைப்பு பைக்கிற்கு வித்தியாசமான தோற்றத்தை வழங்குகிறது. மேலும், டிஎஃப்டி (TFT) டிஜிட்டல் திரை உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இதன் பேட்டரி திறன், மோட்டார் செயல்திறன் மற்றும் ரேஞ்ச் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
விடா டர்ட்.இ எம்எக்ஸ்7 (VIDA DIRT.E MX7)
இரண்டாவது கான்செப்ட்டான DIRT.E MX7 மாடலானது வயது வந்தோர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட அதிக செயல்திறன் கொண்ட எலக்ட்ரிக் ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிளாகும். குறிப்பாக, மண் சாலைகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளில் பயணிப்பதற்கு ஏற்ற மோட்டோகிராஸ் பைக் வடிவமைப்பை இது பெற்றுள்ளது.
இந்த பைக்கில் நீண்ட பயணத்திற்கு ஏற்ற சஸ்பென்ஷன் அமைப்பு, ஸ்போக்ஸ் வீல்கள், ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கான பிரத்யேக டயர்கள் மற்றும் தட்டையான இருக்கை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன் வடிவமைப்பு, வழக்கமான பெட்ரோல் மோட்டோகிராஸ் பைக்குகளுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் எதிர்கால மாடல்களை உருவாக்கும் விடாவின் திட்டம் தெரிய வந்துள்ளது.
புராஜெக்ட் விஎக்ஸ்இசட் (Project VXZ)
மூன்றாவது கான்செப்ட்டான Project VXZ பைக் மாடலானது, அமெரிக்காவைச் சேர்ந்த ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் (Zero Motorcycles) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. நவீன ஸ்ட்ரீட்ஃபைட்டர் வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கில் பெரிய டிஎஃப்டி திரை மற்றும் பிரத்யேக சுவிட்ச் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கூட்டணி மூலமாக உலகளாவிய மின்சார மோட்டார்சைக்கிள் சந்தையில் விடா தனது தொழில்நுட்ப திறனை மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த பைக்கின் தொழில்நுட்ப விவரங்கள், விற்பனைக்கு வரும் காலம் மற்றும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்படவில்லை.
ஐரோப்பாவில் தடம் பதிக்கும் விடா
புதிய எலெக்ட்ரிக் பைக் கான்செப்ட்டுகளை அறிமுகப்படுத்தியதுடன், விடா நிறுவனம் தனது ஐரோப்பிய சந்தை விரிவாக்கத்தையும் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. எலக்ட்ரோரைடர் (Elektrorider) நிறுவனத்துடன் இணைந்து இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் உருவாக்கப்படும் மின்சார இருசக்கர வாகனங்களை சர்வதேச சந்தையில் கொண்டு செல்வதில் ஹீரோ மோட்டோகார்ப் தீவிரம் காட்டுகிறது. எதிர்காலத்தில் இந்த மூன்று பைக் கான்செப்ட்களும் தயாரிப்புக்கு உகந்த நிலையை அடையும்போது, உலகளாவிய மின்சார மோட்டார்சைக்கிள் சந்தையில் விடா முக்கிய போட்டியாளராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


