ஓலா போல பிரச்னை வரக்கூடாது! எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காக மூலைக்கு மூலை ஷோரூம் திறக்கும் வின்ஃபாஸ்ட்!
வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம், இந்திய மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் நுழைவதற்கான முக்கிய நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50-க்கும் மேற்பட்ட டீலர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. மேலும், விற்பனை மட்டுமின்றி, விற்பனைக்கு பிந்தைய சேவையிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் 34 நகரங்களில் 50-க்கும் மேற்பட்ட பிரத்யேக மின்சார இருசக்கர வாகன ஷோரூம்களை அமைக்க வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது. வியட்நாமில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ள அலுவலகத்திற்கு இந்திய டீலர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். அங்கு இந்த ஒப்பந்தங்கள் நேற்று (அக்டோபர் 8, 2026) கையெழுத்தானது.

வட இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் புதிய ஷோரூம்கள் அமையவுள்ளன. மேற்கு இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் வின்ஃபாஸ்ட் தனது விற்பனைச் செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் புதிய விற்பனையகங்கள் அமைக்கப்படவுள்ளன. கிழக்கு இந்தியாவில் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களும் இந்த விரிவாக்கத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாடிக்கையாளர்களைச் சென்றடைய மிக விரிவானத் திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.
மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதுடன், அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் வின்ஃபாஸ்ட் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, சார்ஜிங் கட்டமைப்பை உருவாக்குவதிலும், விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவையை வழங்குவது இதன் முக்கிய நோக்கமாக இருக்கும்.
வின்ஃபாஸ்ட் இந்தியா மின்சார இருசக்கர வாகனப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி அனுராக் சக்சேனா கூறுகையில், "15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடன் இணைந்திருக்கிறோம். இந்தியா முழுவதும் எங்களது மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை தொடங்கி உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார். சார்ஜிங் வசதிகள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளையும் ஒருங்கிணைத்து மேம்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர் தளம் உள்ளது. அலுவலகப் பயணம், குடும்பப் பயன்பாடு, வணிகத் தேவைகள் எனப் பல காரணங்களுக்காக மக்கள் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். அத்துடன் சமீப காலமாக மின்சார இருசக்கர வாகனங்களுக்கான தேவையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல் வாகனங்களிலிருந்து மின்சார வாகனங்களுக்கு மாறும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக வின்ஃபாஸ்ட் கருதுகிறது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025-26 நிதியாண்டில் இந்தியாவில் 2.141 கோடி இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மின்சார வாகனங்களின் பங்கு 6.54 சதவீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை, வரும் காலத்தில் மிக வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வின்ஃபாஸ்ட் இந்தியாவில் எந்தெந்த மின்சார இருசக்கர வாகனங்களை முதலில் விற்பனைக்குக் கொண்டுவரும், அவற்றின் விலை எவ்வளவு, எப்போது அறிமுகமாகும் போன்ற விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், தற்போது டீலர்கள் நியமிக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், விரைவில் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகி இருக்கிறது. இது நிச்சயம் மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கடும் போட்டியை ஏற்படுத்துவதுடன் சிறந்த தேர்வுகளை பெறுவதற்கான வாய்ப்புகளையும் வாடிக்கையாளர்களுக்கு அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications


