பல ரகமாய் வரும் புதிய வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்... யாருக்கு எந்த மாடல் பொருந்தும்?
வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட், இந்திய சந்தையில் தனது மின்சார ஸ்கூட்டர்களை களமிறக்கும் திட்டத்தில் தீவிரமாக உள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காவில் ஆலையை அமைத்துள்ள அந்நிறுவனம் தற்போது மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, மின்சார பேருந்துகள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்களையும் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆலையை மேலும் விரிவுபடுத்த கூடுதலாக சுமார் 200 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் திட்டத்தின்படி, இவோ (Evo), ஃபெலிஸ்(Feliz), வைப்பர் (Viper) ஆகிய மூன்று மின்சார ஸ்கூட்டர்களே இந்தியாவில் முதற்கட்டமாக அறிமுகமப்படுத்த உள்ளது. ஆரம்பத்தில் இவை CKD (Completely Knocked Down) முறையில் வியட்நாமில் இருந்து உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, தூத்துக்குடி ஆலையில் அசெம்பிள் செய்யப்படும். பின்னர் உள்நாட்டு பாகங்களின் பயன்பாடு இந்த ஸ்கூட்டர்களில் படிப்படியாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூன்று மாடல்களும் ஏற்கனவே வியட்நாம் சந்தையில் விற்பனையில் இருப்பதால், இந்திய சாலை மற்றும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களுடன் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது. மூன்றும் வெவ்வேறு வாடிக்கையாளர் பிரிவையும், விருப்பத் தேர்வையும் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றில் உங்களுக்கு சிறந்த மாடலை தேர்வு செய்து கொள்ளும் விதத்தில் இதன் அம்சங்கள் விளக்கிப்பட்டுள்ளன.

வின்ஃபாஸ்ட் இவோ - நகரப் பயன்பாட்டுக்கான ஆரம்ப நிலை ஸ்கூட்டர்
இந்த ஸ்கூட்டர் தினசரி நகரப் போக்குவரத்தை மனதில் வைத்து ஆரம்ப ரக மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. எளிதாக கையாளக்கூடிய வடிவமைப்பு, இலகுரக கட்டமைப்பு மற்றும் சிறிய சக்கரங்கள் இதன் முக்கிய அம்சங்களாக குறிப்பிடலாம். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், LED விளக்குகள் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு போன்ற வசதிகளும் இதில் இடம்பெறுகின்றன. இந்தியாவில் குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர் பிரிவில் இது போட்டி போடும். வியட்நாம் மாடலில் இது இரட்டை பேட்டரி அமைப்புடன் சுமார் 165 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய மாடலின் பேட்டரி அமைப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதால், ARAI சான்று வெளியான பின்னரே துல்லியமான ரேஞ்ச் தெரியவரும்.

வின்ஃபாஸ்ட் ஃபெலிஸ் - குடும்ப பயன்பாட்டுக்கான தேர்வு
தினசரி அலுவலகம், கல்லூரி மற்றும் குடும்பப் பயன்பாட்டை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய இருக்கை, வசதியான அமர்வு அமைப்பு மற்றும் அதிக பூட்ரூம் இடவசதி ஆகியவை இதன் பலமாக கூறலாம். வலுவான ஹப் மோட்டார், நீண்ட பயண தூரம், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் (Regenerative Braking) தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி வசதிகளும் இதில் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் Ather Rizta, TVS iQube, Ola S1 மற்றும் Bajaj Chetak போன்ற குடும்பப் பயன்பாட்டு மின்சார ஸ்கூட்டர்களுக்கு நேரடி போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியட்நாம் மாடல் 156 கிமீ முதல் 198 கிமீ வரை (மாடல் மற்றும் பேட்டரி அமைப்பைப் பொறுத்து) வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்திய தர சான்றிதழ் இன்னும் வெளியாகவில்லை என்பதால் இப்போது எதுவும் உறுதியாக தெரிவிக்க இயலாது.

வின்ஃபாஸ்ட் வைப்பர் - பிரீமியம் மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டர்
இந்த மூன்று மாடல்களில் அதிக கவனம் பெறுவது வின்ஃபாஸ்ட் வைப்பர் ஸ்கூட்டரை கூறலாம். ஸ்போர்ட்டியான மேக்ஸி-ஸ்கூட்டர் வடிவமைப்பு, அகலமான இருக்கை, பெரிய சக்கரங்கள் மற்றும் சக்திவாய்ந்த மின்மோட்டார் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். நகரப் பயன்பாட்டுடன் நீண்ட தூர பயணங்களையும் கருத்தில் கொண்டு இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. முழு LED லைட்டிங், டிஜிட்டல் டிஸ்பிளே, ஸ்மார்ட் கனெக்டிவிட்டி மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளும் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலும் ஒரு முழு சார்ஜில் அதிகபட்சமாக 156 கிமீ வரை செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அராய் சான்று வந்தவுடன் இந்திய மாடலுக்கான ரேஞ்ச் விபரம் தெரிய வரும்.
தமிழ்நாட்டிலிருந்து இந்தியா முழுவதும்
இந்த ஸ்கூட்டர்கள் தூத்துக்குடி ஆலையில் உற்பத்தி செய்யப்படுவதால், இறக்குமதி வரி சுமை குறைந்து சவாலான விலையில் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், இந்தியாவை வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது ஏற்றுமதி மையமாகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் உள்நாட்டு உதிரிபாக உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தமிழகத்தின் மின்சார வாகன உற்பத்தி சூழல் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த புதிய மின்சார ஸ்கூட்டர்கள் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஸ்கூட்டர்கள் நிச்சயமாக ஏத்தர், பஜாஜ், டிவிஎஸ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் கடும் சந்தைப் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
மின்சார கார் சந்தையைத் தொடர்ந்து இருசக்கர வாகன சந்தையிலும் வலுவாக கால்பதிக்க வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளை குறிவைத்து Evo, Feliz, Viper மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டம், இந்திய சந்தையில் நிறுவனத்தின் நீண்டகால இலக்கை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, "மேட் இன் தமிழ்நாடு" என்ற அடையாளத்துடன் இந்த ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வருவது, தமிழகத்தை மின்சார வாகன உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சிக்கும் கூடுதல் வலு சேர்க்கும்.


Click it and Unblock the Notifications
