156 கிமீ ரேஞ்சுடன் இந்தியாவில் வின்ஃபாஸ்டின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது தான்
வியட்நாமைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் கார்களை தற்போது விற்பனை செய்வதுடன், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அப்படி இந்தியாவில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைனுக்குக் காப்புரிமை பெற்றிருக்கிறது வின்ஃபாஸ்ட்.
ஏற்கனவே கிளாரா எஸ் (Klara S) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைனுக்கு இந்தியாவில் வின்ஃபாஸ்ட் காப்புரிமை பெற்றிருக்கிறது. கிளாஸியான இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்கனவே வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை இந்தியாவிலும் வெளியிட வின்ஃபாஸ்ட் ஆர்வம் காட்டுகிறது.

ஆனால் புதிதாக இந்தியாவில் தற்போது அந்நிறுவனம் பதிவு செய்திருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைனானது வேறு எங்கும் காணாத வகையில் இருக்கிறது. வின்ஃபாஸ்டின் சொந்த சந்தையான வியட்நாமில் கூட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைனில் எந்த வாகனமும் விற்பனை செய்யப்படவில்லை. எனவே, இந்தியாவிற்காக இதனை வின்ஃபாஸ்ட் பிரத்தியேகமாக உருவாக்கியிருக்கிறதா அல்லது. சர்வதேச அளவில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி தான் வின்ஃபாஸ்ட் வெளியிடவுள்ளதா என்பது குறித்த தகவல்கள் தற்போது இல்லை.
ஒட்டுமொத்த சில்-அவுட்டை வைத்துப் பார்க்கும் போது வின்ஃபாஸ்ட் வெளிநாடுகளில் விற்பனை செய்து வரும் வைப்பர் (Viper) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைனுக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன். ஆனால் கொஞ்சம் நுணுக்கமாக ஆராயும் போது, வைப்பர் ஸ்கூட்டரில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

ஆனால், வைப்பரைப் போலவே ஸ்போர்ட்டியான வைபையே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் கொண்டுள்ளது. ஷார்ப்பான முகப்பு விளக்கு மற்றும் பின்பக்க விளக்கு டிசைன், இன்னும் ஸ்போர்ட்டியான வடிவமைப்பைக் கொண்ட பின்பக்க கிராப் ஹேண்டில், ப்ரீமியமான டிசைனில் சைடு பேனல்கள் என ஒட்டுமொத்தமாக ஸ்போர்ட்டியான மற்றும் ப்ரீமியமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு உண்டான தோற்றத்தை இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.
டிசைன் புதிதாக இருந்தாலும், பவர்ட்ரெயின் ஏற்கனவே இருப்பதையே வின்ஃபாஸ்ட் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், வைப்பர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்ட அம்சங்களையே இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் வின்ஃபாஸ்ட் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைப்பர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெரிய 3 kWh பேட்டரி பேக் மற்றும் 3 kW பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பவர்ட்ரெயின் செட்டப்புடன் அதிகபட்சமாக மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், 156 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த பவர்ட்ரெயினே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் இருக்கலாம் எனத் தெரிகிறது. வைப்பரின் பேட்டரியை 4.30 மணி நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்துவிட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது வின்ஃபாஸ்ட். ஹப் மவுன்டட் மோட்டாருடன், இரண்டு பக்கமும் 14 இன்ச் வீல்களையும் புதிய ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. ஸ்கூட்டரின் முன்பக்கம் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.
வியட்நாமில் இந்திய மதிப்பிற்கு 1.63 லட்சம் ரூபாய் என்ற விலையில் வைப்பர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது கிட்டத்தட்ட அதனைப் போலவே ஸ்போர்ட்டியாக ஆனால் கொஞ்சம் ப்ரீமியமாக இருப்பதனால், அதனைவிடக் கூடுதல் விலையையே கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.
வின்ஃபாஸ்டின் VF6 எலெக்ட்ரிக் காரானது அங்கே இந்திய மதிப்பிற்கு 22 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் சற்று குறைவாக 17.29 லட்சம் ரூபாய் என்ற விலையில் தொடங்குகிறது. அதன் அடிப்படையில் வின்ஃபாஸ்டின் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் இந்தியாவில் 1.50 லட்சம் ரூபாய்க்குக் கீழான விலையிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
இந்தியாவில் ஏத்தர் 450 மற்றும் சிம்பிள் ஒன் ஆகிய ஸ்போர்ட்டியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. ஆனால், வின்ஃபாஸ்டின் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்ப்பதற்கு இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் எரிபொருள் ஸ்கூட்டர்களின் டிசைனை ஒற்றிருக்கிறது. ஸ்போர்ட்டியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய வாடிக்கையாளர்களைப் பெருமளவில் கவர்ந்ததில்லை. எனினும் புதிய பாதையை வின்ஃபாஸ்ட் கையிலெடுத்திருப்பதால் இது கவர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டில் இந்த ஸ்கூட்டரின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications