அந்த நிறுவனம் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய போகுதா... டிவிஎஸ், பஜாஜிற்கு இப்பவே ஒதறல் எடுத்திருக்கும்...
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிரம்மாண்டமான தொழிற்சாலையை அமைத்துள்ளது. தற்போதைய நிலையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தையில் 2 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) ஆகியவை ஆகும். இந்த வரிசையில் இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் 3வது எலெக்ட்ரிக் காரான வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 (VinFast VF MPV 7), வரும் ஏப்ரல் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

7 சீட்டர் எலெக்ட்ரிக் காரான இது, இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் கார் உடன் போட்டியிடும். வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதன் தாய் நாடான வியட்நாமில் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) போன்ற மற்ற எலெக்ட்ரிக் வாகனங்களையும் விற்பனை செய்து வருகிறது.
இதன்படி இந்தியாவிலும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் கூடிய விரைவில், அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. முதற்கட்டமாக வியட்நாம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவை வின்ஃபாஸ்ட் எவோ (VinFast Evo), வின்ஃபாஸ்ட் ஃபெலிஸ் (VinFast Feliz) மற்றும் வின்ஃபாஸ்ட் வைப்பர் (VinFast Viper) ஆகியவை ஆகும். இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், வின்ஃபாஸ்ட் எவோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.4 kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
வியட்நாம் சந்தையில் இந்திய மதிப்பில் சுமார் 81 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் வின்ஃபாஸ்ட் எவோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக வின்ஃபாஸ்ட் ஃபெலிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. வியட்நாம் சந்தையில் இந்திய மதிப்பில் சுமார் 96 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் இது விற்பனையாகி வருகிறது.
கடைசியாக வின்ஃபாஸ்ட் வைப்பர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.8 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. வியட்நாம் சந்தையில் இந்திய மதிப்பில் சுமார் 1.63 லட்ச ரூபாய் என்ற விலையில் இது விற்பனையாகி கொண்டுள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகை, இந்திய சந்தையில் டிவிஎஸ் (TVS), பஜாஜ் (Bajaj) மற்றும் ஏத்தர் (Ather) போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஆரம்பத்தில் வியட்நாம் சந்தையில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைதான் இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது. ஆனால் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தைக்கென பிரத்யேகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கி விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். கூடிய விரைவில் அது நடக்கும் என நாம் உறுதியாக நம்பலாம்.


Click it and Unblock the Notifications








