ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எந்த வேரியன்டை வாங்குவது என்று குழப்பமா? இதைப் படிங்க

எரிபொருள் ஸ்கூட்டர்களில் இருந்து ட்ரெண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooter) கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம் என்று குழப்பத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் கண்களை மூடிக் கொண்டு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாம். அது வேறெதுவும் இல்லை, ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தின் ரிஸ்டா (Rizta) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான்.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு சில வலிமையான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று நிறைய வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையிலான விலையில் இருப்பது. இரண்டாவது அடிப்படை வேரியன்டே தினசரிப் பயன்பாட்டிற்கு போதுமான ரேஞ்சைக் கொண்டிருப்பது. மூன்றாவது பார்ப்பதற்கு நல்ல ஸ்டைலாகவும், அதே நேரத்தில் நல்ல இடவசதியுன் மிகவும் பிராக்டிகலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருப்பது. இதனால் தான் சுமார் 3 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியிருக்கிறார்கள்.

Ather Rizta

2024 ஏப்ரலில் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டது ஏத்தர் எனர்ஜி. இரண்டே ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கிறது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். 2024 ஜூன் மாதம் ரிஸ்டாவின் டெலிவரி தொடங்கப்படுகிறது. முதல் 10 மாதங்களிலேயே 1 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனை மைல்கல்லை எட்டுகிறது ரிஸ்டா. இரண்டாவது ஒரு லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய ஏத்தர் எனர்ஜி வெறும் ஆறு மாத காலமே எடுத்துக் கொண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அடுத்த ஆறு மாதங்களில் அடுத்த ஒரு லட்சம் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள். கடந்த 2026 ஏப்ரல் வரை மட்டும் சுமார் 3.09 லட்சம் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் ஏத்தர் விற்பனை செய்யும் நான்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மூன்று ரிஸ்டா தான். இது தான் ஏத்தரை இந்தியாவின் மூன்றாவது அதிக எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையாளர் என்ற அரியணையில் அமர்த்தியிருக்கிறது.

Ather Rizta

சரி, ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம் என்று கண்களை மூடிக் கொண்டு முடிவு செய்துவிட்டாயிற்று. எந்த வேரியன்டை வாங்குவது? ரிஸ்டாவை S மற்றும் Z என இரண்டு வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது ஏத்தர் எனர்ஜி. இரண்டு வேரியன்ட்களிலுமே 2.9 kWh மற்றும் 3.7 kWh என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் சிறிய 2.9 kWh பேட்டரி பேக்கானது 123 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது. தினசரிப் பயன்பாட்டில் 100 கிமீ வரையிலான உண்மையான ரேஞ்சை தாராளமாகப் பெற முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது ஏத்தர். இந்த பேட்டரி பேக்கை ஏத்தர் வழங்கும் PC Lite ஹோம் சார்ஜர் மூலமாக 0-80% வரை 6.30 மணி நேரத்திலும், முழுவதுமாக 8.30 மணி நேரத்திலும் சார்ஜ் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, 3.7 kWh என்ற பெரிய பேட்டரி பேக்கானது 159 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், 125 கிமீ வரையிலான உண்மையான ரேஞ்சைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஏத்தர் வழங்கும் Duo ஹோம் சார்ஜர் மூலமாக 4.30 மணி நேரத்திலேயே 80% வரையிலும், 5.45 மணி நேரத்தில் முழுவதுமாகவும் சார்ஜ் செய்து விட முடியும்.

அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்மார்ட் எக்கோ, எக்கோ மற்றும் ஸிப் என மூன்று ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரையே அனைத்து வேரியன்ட்களிலும் ஏத்தர் எனர்ஜி கொடுத்திருக்கிறது. S வேரியன்டானது மோனோடோன் நிறங்களில் மட்டுமே கிடைக்கும் நிலையில், Z வேரியன்டானது டூயல் டோன் நிறங்களிலும் கிடைக்கிறது.

எலெக்ட்ரிக் மோட்டார், பெர்ஃபாமன்ஸ், அதிகபட்ச வேகம் ஆகிய அடிப்படை அம்சங்கள் ரிஸ்டாவின் இரண்டு வேரியனட்களிலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால் சிறப்பம்சங்கள், ஸ்மார்ட் அம்சங்கள் என்று வரும் போது தான் இரண்டிற்குமான வேறுபாட்டை நாம் பார்க்க முடியும். குறிப்பாக S வேரியன்டில் 7 இன்ச் LCD டிஸ்பிளேவே கொடுக்கப்பட்டிருக்கும். Z வேரியன்டில் ப்ரீமியமான 7 இன்ச் TFT டச்ஸ்கிரீன் டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கும்.

LCD டிஸ்பிளேவை ஸ்விட்ச்கியர் அல்லது ஜாய்ஸ்டிக் மூலமே இயக்க முடியும். அத்துடன் டர்ன்-பை-டர்ன் வசதியை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். TFT டிஸ்பிளேவை நேரடியாக தொடுதல் மூலம் நாம் அனுகலாம். மேலும் கூகுள் மேப்ஸை முழுவதுமாக டிஸ்பிளேயில் இன்டகிரேட் செய்து கொள்ள முடியும். இது நாம் ஸ்மார்ட்போனில் மேப்ஸைப் பார்ப்பது போன்ற ஒரு பயன்பாட்டு அனுபவத்தையே கொடுக்கும்.

இத்துடன் மேஜிக் ட்விஸ்ட், ஸ்கிட் கண்ட்ரோல், அதிக ரேம் அல்லது ஸ்டோரேஜ் ஸ்பேஸ் ஆகிய தொழில்நுட்ப அம்சங்கள் Z வேரியன்டில் மட்டுமே இருக்கிறது, S வேரியன்டில் இல்லை. ஏத்தர் ரிஸ்டாவில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயமும் இருக்கிறது. இந்த தொழில்நுட்ப அம்சங்களை எல்லாம் ஏத்தர் ஸ்டேக் ப்ரோவுடன் (Ather Stack Pro) மட்டுமே நாம் பெற முடியும்.

ஏத்தர் ஸ்டேக் ப்ரோ என்பது ஸ்கூட்டரில் இருக்கும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களை நாம் பயன்படுத்துவதற்காக நாம் செலுத்த வேண்டிய கூடுதல் தொகை ஆகும். நாம் தேர்ந்தெடுக்கும் வேரியன்ட் அல்லது பேட்டரி பேக்கைப் பொறுத்து இந்த ஏத்தர்ஸ்டேக் ப்ரோவுக்கு 15,000 ரூபாய் முதல் 23,000 ரூபாய் வரை நாம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏத்தர்ஸ்டேர் ப்ரோ இல்லாமல் ஸ்கூட்டரைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் அல்லது குறைபாடுகளும் இருக்காது. ஆனால், மேலே கூறிய ரைடு மோடுகள் தொடங்கி, வாட்ஸ்அப் பிரிவியூ, அலெக்ஸா, நேவிகேஷன் உள்ளிட்ட எந்தவொரு தொழில்நுட்ப அம்சத்தையும் நாம் பயன்படுத்த முடியாது. ஆனால் இதனை வாங்குவது, ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டின் ப்ரீமியமான அனுபவத்தை நமக்குக் கொடுப்பதோடு, பல்வேறு வகையிலும் நமது தினசரி பயன்பாட்டை எளிமையாக்கும்.

குறிப்பாக இதில் இருக்கும் டாக்குமென்ட் ஸ்டோரேஜ் அம்சம் மூலம், நமது டிரைவிங் லைசன்ஸ் முதல் வாகனத்தின் ஆர்சி புக் வரை அனைத்தையும் டிஜிட்டலாக ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த வசதி ஏத்தர்ஸ்டேக் ப்ரோவுன்ட Z வேரியன்டில் மட்டுமே கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஸ்கூட்டர் திருடு போனால் நோட்டிபிகேஷன் வருவது, லைன் லொகேஷன் ஷேர் செய்வது உள்ளிட்ட அம்சங்களும் இதில் அடங்கும்.

சிறிய பேட்டரி பேக் கொண்ட ரிஸ்டா S வேரியன்டானது 1.17 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இதுவே பெரிய பேட்டரி பேக் என்றால் 1.40 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். சிறிய பேட்டரி பேக் என்றால் ஏத்தர்ஸ்டேக் ப்ரோவுக்கு 15,000 ரூபாயும், பெரிய பேட்டரி பேக் என்றால் 16,000 ரூபாயும் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

சிறிய பேட்டரி பேக் கொண்ட ரிஸ்டா Z வேரியன்டானது 1.35 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இதுவே பெரிய பேட்டரி பேக் என்றால் 1.55 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்க வேண்டியிருக்கும். சிறிய பேட்டரி பேக் வேரியன்டின் ஏத்தர்ஸ்டேக் ப்ரோவுக்கு 22,500 ரூபாயும், பெரிய பேட்டரி பேக்கின் ஏத்தர்ஸ்டேக் ப்ரோவுக்கு 23,500 ரூபாயும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக செலுத்த வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்த ஏத்தர் ரிஸ்டா வேரியன்டைத் தேர்ந்தெடுப்பது?

ரேஞ்சு கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை தொழில்நுட்ப அம்சம் வேண்டும் என்று சொல்லும் வாடிக்கையாளர்கள் ரிஸ்டா Z வேரியன்டின் சிறிய பேட்டரி பேக்குடன் ஏத்தர்ஸ்டேக் ப்ரோவை சேர்த்து வாங்கலாம். ரேஞ்சும் அதிகமாக வேண்டும் என்றால் Z வேரியன்டின் பெரிய பேட்டரி பேக்கை ஏத்தர் ஸ்டேக் ப்ரோவுடன் வாங்கலாம். ஆனால் எக்ஸ்-ஷோரூம் விலை 1.80 லட்சத்தைத் தொட்டுவிடும்.

இங்கே நாங்கள் பரிந்துரைப்பது இரண்டு வேரியன்ட்களிலும் சிறிய பேட்டரி பேக்கை ஏத்தர்ஸ்டேக் ப்ரோவுடனோ அல்லது இல்லாமலோ வாங்கலாம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெரும்பாலும் நகரப் பயன்பாட்டிற்கானவை என்பதால் குறைவான தூரமே பயணம் செய்வோம். நாளொன்று 20 கிமீ முதல் 40 கிமீ என்ற அளவிலேயே பயணம் இருக்கும். அந்த வகையில் சிறிய பேட்டரி பேக்கே போதுமானதாக இருக்கும்.

இதனை முதன்மை வாகனமாக வெளியே சுற்றித் தெரியும் வேலைகளுக்குப் பயன்படுத்துபவர்கள் ஏத்தர்ஸ்டேக் ப்ரோவை வாங்கலாம். இல்லை வீட்டில் அவ்வப்போது அடிப்படையான பயன்பாடு மட்டுமே என்றால் ஏத்தர்ஸ்டேக் ப்ரோவுக்கான தேவை பெரிய அளவில் இருக்காது. உங்கள் பயன்பாடு எதுவோ அதனை வைத்து மேற்கூறிய தகவல்களைக் கொண்டு முடிவெடுங்கள்.

Article Published On: Monday, May 11, 2026, 13:37 [IST]
English summary
Which ather rizta electric scooter varitant should i buy check all details here
மேலும்... #ather energy #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+