ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் இந்த வேரியன்ட் தான் சூப்பரா இருக்கும்! ட்ரை பண்ணி பாருங்க!
இந்தியாவில் ஸ்கூட்டர் என்று சொன்னவுடன் முதலில் நினைவுக்கு வருவது ஹோண்டாவின் ஆக்டிவாவாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு வாடிக்கையாளர்களின் மனதில் பதிந்த, வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்ற ஒரு ஸ்கூட்டராக ஆக்டிவா இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் சுமார் 2.5 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஹோண்டா.
இந்தியா சாலைகளில் நீங்கள் அதிகம் பார்க்கும் ஒரு ஸ்கூட்டராக ஆக்டிவாவே இருக்கும். எனவே ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்றவுடன், ஆக்டிவா உடனடியாக உங்கள் நினைவிற்கு வந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சரி, ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தாயிற்று, ஆக்டிவாவையும் டிக் செய்தாச்சு, எந்த வேரியன்டை வாங்குவது?

இந்தியாவில் தற்போது இரண்டு ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது ஹோண்டா. ஒன்று ஆக்டிவா 110, மற்றொன்று ஆக்டிவா 125. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஸ்கூட்டர் தான். ஆனால் ஒரே ஸ்கூட்டர் கிடையாது. இரண்டிற்கும் இடையேயான பிரதான வித்தியாசம், ஆக்டிவா 110 ஸ்கூட்டரானது 109.51 சிசி இன்ஜினைக் கொண்டிருக்கும். ஆக்டிவா 125 ஸ்கூட்டரானது 123.92 சிசி இன்ஜினைக் கொண்டிருக்கும்.
இதனைத் தவிர டிசைனிலும், வசதிகளிலும் இரண்டு ஸ்கூட்டர்களுக்கும் இடையே சின்னச் சின்ன வேறுபாடுகள் இருக்கும். ஆனால் இரண்டுமே மிகவும் பிராக்டிகலான, மிகச்சிறப்பான ஸ்கூட்டர்கள் தான். உங்களது பட்ஜெட், பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டில் ஒரு ஸ்கூட்டரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக குறைவான பட்ஜெட் என்றால் ஆக்டிவா 110 ஸ்கூட்டரையும், பட்ஜெட் பிரச்சினையில்லை என்றால் ஆக்டிவா 125 ஸ்கூட்டரையும் தேர்ந்தெடுக்கலாம்.

பட்ஜெட் பிரச்சினையில்லை என்றாலும், மிகவும் குறைவான அளவே உங்கள் பயன்பாடு இருக்கும், குறிப்பாக நகரங்களுக்குள் குறைவான தொலைவிற்குள்ளேயே ஸ்கூட்டரைப் பயன்படுத்துவீர்கள் என்றால் ஆக்டிவா 110 ஸ்கூட்டரின் உயர்நிலை வேரியன்டைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் மூலம், ஆக்டிவாவில் ஹோண்டா கொடுக்கும் மேம்பட்ட வசதிகளை நீங்கள் பெற முடியும்.
ஆக்டிவா 110 ஸ்கூட்டரை ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் H-ஸ்மார்ட் என மூன்று வேரியன்ட்களாக ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. இதில் ஸ்டாண்டர்டு வேரியன்டை 75,958 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே நாம் வாங்கலாம். டீலக்ஸ் மற்றும் ஸ்மார்ட் வேரியன்ட்களானது முறையே, 86,360 ரூபாய் மற்றும் 90,832 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் டாப் எண்டு H-ஸ்மார்ட் வேரியன்டை வாங்கும் போது, உயர்தர TFT டிஸ்பிளே, ப்ளூடூத் மற்றும் ஹோண்டா ரோடு ஸிங்க் செயலினின் மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் ஸ்மார்ட் கீ ஆகிய வசதிகளையும் பெறலாம். இதில் ஸ்மார்ட் கீ வசதியின் மூலம், சாவியை ஸ்கூட்டரில் செருகாமலேயே ஸ்மார்ட்டாக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து நாம் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட் கீ உங்களது பாக்கெட்டில் இருந்தால் போதும்.
இப்படியான வசதி இந்தியாவில் சில ஸ்கூட்டர்களில் மட்டுமே உள்ளது. ஆக்டிவாவின் இரண்டு ஸ்கூட்டர்களிலுமே டாப் எண்டு H-ஸ்மார்ட் வேரியன்டில் மட்டும் இந்த வசதி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆக்டிவா 125 H-ஸ்மார்ட் வேரியன்டானது சற்று அதிகமாக 95,247 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்றொறு வேரியன்டான டீலக்ஸ் 90,803 ரூபாய் என்ற விலையைக் கொண்டுள்ளது.
வசதிகளை விட பெர்ஃபாமன்ஸ் தான் முக்கியம் என்றால் ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டீல்க்ஸ் வேரியன்டை வாங்கலாம். இதன் மூலம் ஆக்டிவா 110 ஸ்கூட்டரின் ப்ரீமியமான வசதிகள் இருக்காது. ஆனால், 125 சிசி இன்ஜினுக்கான சற்று கூடுதல் பெர்ஃபான்ஸை அதே விலையில் நாம் பெற முடியும். பெர்ஃபாமன்ஸ் மற்றும் வசதிகள் இரண்டுமே முக்கியம் என்பவர்கள் ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டாப் எண்டு H-ஸ்மார்ட் வேரியன்டை வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரைப் பொறுத்தவரை எந்த வேரியன்டை நீங்கள் வாங்கினாலும் அது கொடுக்கும் விலைக்கும் வொர்த்தானது என்றே நாங்கள் கூறுவோம். உங்கள் பட்ஜெட் மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மேலே கூறியிருப்பது போல உங்களுக்கு பிடித்தமான ஸ்கூட்டரை தேர்ந்தெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications