100 கிமீ மைலேஜ் குடுத்தாலும் பஜாஜ் பிளாட்டினாவை ஏன் யாரும் மதிக்க மாட்றாங்க தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!
இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை (Petrol Price) மிக கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை உயர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் இது அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய பைக்குகளில் ஒன்றாகும். மைலேஜ்தான் பிரதானம் என்றால், பஜாஜ் பிளாட்டினாவைதான் (Bajaj Platina) பலரும் உங்களுக்கு பரிந்துரைப்பார்கள்.
பஜாஜ் பிளாட்டினா பைக் ஒரு லிட்டருக்கு 90-100 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது என்பது அதை பயன்படுத்தி வரும் பலரும் தெரிவிக்கும் விஷயம் ஆகும். எனவேதான் தற்போதைய சூழலை வைத்து பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை உயர்ந்திருக்க வேண்டும் என நாங்கள் கூறினோம். ஆனால் பெரும்பாலான மாதங்களை போல் இம்முறையும் அது நடக்கவில்லை.

இந்திய சந்தையில் சமீப காலமாக பஜாஜ் பிளாட்டினா பைக்கின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. நடப்பு 2026ம் ஆண்டு மே மாதமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. AUTO PUNDITZ தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் வெறும் 26,467 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.
ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் 27,919 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 1,452 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 5 சதவீத வீழ்ச்சி ஆகும். எனவே நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் அதிகமாக விற்பனையான டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes May 2026) பஜாஜ் பிளாட்டினாவிற்கு 10வது மற்றும் கடைசி இடமே கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 9 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், பஜாஜ் பல்சர், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ், டிவிஎஸ் அப்பாச்சி, டிவிஎஸ் எக்ஸ்எல், ஹோண்டா சிபி யூனிகார்ன், டிவிஎஸ் ரைடர் மற்றும் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஆகியவை உள்ளன.
பஜாஜ் பிளாட்டினா பைக் தற்போதைய நிலையில் 100 சிசி மற்றும் 110 சிசி இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) மட்டுமே கிடைக்கிறது. இதில், பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப விலை 70,676 ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் பஜாஜ் பிளாட்டினா 110 பைக்கின் ஆரம்ப விலை 73,083 ரூபாயாக உள்ளது.
இவை அனைத்துமே பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை (Tamil Nadu Ex-showroom Price) ஆகும். சிறப்பான மைலேஜ் மற்றும் விலை ஓரளவிற்கு குறைவு என்றாலும் கூட, இந்திய வாடிக்கையாளர்களின் மனநிலை தற்போது வெகுவாக மாறி விட்டது.
இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது சிறப்பான செயல்திறன் மற்றும் அதிநவீன வசதிகளுக்கு முக்கியத்துவம் வழங்க தொடங்கி விட்டனர். பஜாஜ் பிளாட்டினா பைக்கின் வீழ்ச்சிக்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். இந்தியாவின் 125 சிசி மற்றும் 150 சிசி செக்மெண்ட்டில் பல்வேறு பைக்குகள் சிறப்பான செயல்திறன் மற்றும் அதிநவீன வசதிகள் உடன் கிடைக்கின்றன.
பஜாஜ் நிறுவனமே 125 சிசி செக்மெண்ட்டில் பல்சர் என் 125 (Bajaj Pulsar N 125), பல்சர் என்எஸ் 125 (Bajaj Pulsar NS 125) மற்றும் பல்சர் கிளாசிக் 125 (Bajaj Pulsar Classic 125) என மொத்தம் 3 பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இதில், பஜாஜ் பல்சர் என் 125 பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருவது கூடுதல் தகவல்.
மறுபக்கம் 150 சிசி செக்மெண்ட்டிலும் பல்சர் என் 160, பல்சர் என்எஸ் 160 மற்றும் பல்சர் கிளாசிக் 150 என 3 பைக்குகளை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இது போன்ற பிரீமியம் பைக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் மாறி கொண்டுள்ளனர். இது பஜாஜ் பிளாட்டினாவின் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவிற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
அத்துடன் பஜாஜ் பிளாட்டினா பைக்கை வாங்க கூடிய வாடிக்கையாளர்கள் பலரின் எண்ணமே இயக்குவதற்கு குறைவு செலவு (Low Running Cost) ஆக வேண்டும் என்பதாகதான் இருக்கும். இந்த தேவையை தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) பூர்த்தி செய்ய தொடங்கி விட்டன. பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை இதன் காரணமாகவே எழுச்சியடைந்துள்ளது.
பஜாஜ் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 38,376 சேத்தக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இது பஜாஜ் பிளாட்டினாவை விட மிகவும் அதிகம். துல்லியமாக சொல்வதென்றால், பஜாஜ் பிளாட்டினாவை விட 11,909 பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. பஜாஜ் சேத்தக் போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எழுச்சியும் ஒரு வகையில் பஜாஜ் பிளாட்டினாவின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விற்பனை சரிவடைந்து கொண்டிருந்தாலும் கூட, குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் பிளாட்டினா தொடர்ந்து நல்ல ஆப்ஷனாகவே உள்ளது. ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ், ஹீரோ பேஷன் ப்ளஸ், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மற்றும் ஹோண்டா ஷைன் 100 ஆகிய பைக்குகளுக்கு எல்லாம் பஜாஜ் பிளாட்டினா நல்ல மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.


Click it and Unblock the Notifications