அதலபாதாளத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை.. ஹோண்டாவின் 'பிரம்மாண்ட' தோல்விக்குக் காரணம் என்ன?
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச விற்பனையைப் பதிவு செய்துள்ளது ஹோண்டா. எரிபொருள் இருசக்கர வாகனப் பிரிவில் அதிக வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே விற்பனை செய்து வருகிறது. அதற்கு இணையாக ஒவ்வொரு மாதமும் 5 லட்சம் முதல் 6 லட்சம் இருசக்கர வாகனங்களை ஹோண்டாவும் விற்பனை செய்து வருகிறது.
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனப் பிரிவிலும் அதே பாதையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மே மாதம் இந்தியாவில் 520 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது ஹோண்டா. இதில் ஹைலைட் என்னவென்றால், இந்தியாவில் ஹோண்டா ஒரேமாதத்தில் விற்பனை செய்த அதிகபட்ச எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அளவு இது தான் என்பது.

ஆம், இதற்கு முன்னதாக 2025 ஜூலை மாதமே அதிகபட்சமாக 461 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் தான் இந்தியாவில் ஆக்டிவா e: மற்றும் QC1 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டது ஹோண்டா. இரண்டுமே வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை.
எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை என்றால், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாகவே 5,439 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே ஹோண்ட விற்பனை செய்திருக்கிறது. இவ்வளவு குறைவான விற்பனையினால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பையே நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கும் ஹோண்டா தள்ளப்பட்டது. அந்தளவிற்கு வாடிக்கையாளர்களிடம் ஹோண்டாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரவேற்பைப் பெறவில்லை.

என்ன காரணம்? விலைக்கேற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக இல்லாமல் போனது தான் காரணம். டீஸன்டான அளவில் எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி பேக் மற்றும் ரேஞ்சைக் கொடுத்திருந்த ஹோண்டா, விலையை தாறுமாறாக வைத்து விட்டது. அனைத்து ப்ரீமியம் வசதிகளையும் கொண்ட ஆக்டிவா e: ரோடு ஸிங்க் டுயோ வேரியன்டிற்கு 1.52 லட்சம் ரூபாய் விலையை நிர்ணயம் செய்திருந்தது ஹோண்டா.
ஒரு தயாரிப்பை வெளியிடும் போது சந்தையில் போட்டியாக என்னென்ன வேறு தயாரிப்புகள் இருக்கின்றன என்பதனை ஒப்பிட வேண்டாமா. 1 லட்சம் ரூபாய் விலையிலேயே வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தக்கூடிய பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் இருக்கும் போது அதிக விலை மற்றும் குறைவான அம்சங்களைக் கொண்ட ஹோண்டாவின் ஆக்டிவா e: அல்லது QC1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
மேலும் ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழக்கமாக நாம் வீட்டிலேயே சார்ஜ் செய்யும் வகையில் பேட்டரியைக் கொடுக்காமல், பேட்டரி ஸ்வாப்பிங் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது ஹோண்டா. இதனால் ஆக்டிவா e: ஸ்கூட்டரின் பேட்டரிக்களை ஹோண்டா ஆங்காங்கே வைத்திருக்கும் ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களின் மூலமே சார்ஜ் செய்ய முடியும்.
இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பேட்டரிக்கள் சார்ஜ் ஆகும் வகை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களில் ஏற்கனவே சார்ஜ் ஆன பேட்டரிக்கள் இருக்கும். நம்முடைய பேட்டரியை அந்த ஸ்டேஷனில் சார்ஜ் போட்டுவிட்டு, ஸ்டேஷனில் இருக்கும் பேட்டரியை நம்முடைய ஸ்கூட்டரில் எடுத்துப் பொருத்திக் கொண்டு வந்து கொண்டே இருக்கலாம்.
இந்த பேட்டரி ஸ்வாப்பிங் வசதியைப் பயன்படுத்தவும் ஹோண்டாவிற்கு நாம் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வகையில் பார்த்தால் எந்த பேட்டரியையுமே நாம் நிலையாக வைத்துக் கொள்ள முடியாது. அப்படியென்றால் அதனை நம்முடைய பேட்டரி என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த பேட்டரிக்கும் சேர்த்துத் தான் ஹோண்டாவிற்கு ஸ்கூட்டரை வாங்கும்போது நாம் பணம் செலுத்துகிறோம். இதற்கும் மேலாக ஸ்வாப்பிங்கிற்குப் பணம் செலுத்த வேண்டும்.
ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாம் வாங்க வேண்டும் என்றால் நாம் இருக்கும் நகரத்தில் பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன் இருக்க வேண்டும். அதனை ஹோண்டா கட்டமைக்க வேண்டும். இந்தியாவில் மூன்று நகரங்களில் மட்டுமே முதற்கட்டமாக பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களைக் கட்டமைத்தது ஹோண்டா. இதனால் மற்ற நகரங்களில் ஆக்டிவா e: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஹோண்டாவால் விற்பனை செய்ய முடியவில்லை.
அதன் மற்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான QC1 90,487 ரூபாய் என்ற குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருந்தாலும், போதுமான திறனை அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 80 கிமீ மட்டுமே சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை QC1 கொண்டிருந்தது. மேலும் அதில் அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பை மட்டுமே ஹோண்டா கொடுத்திருந்தது.
என்னதான் நகரப் பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால் 50 கிமீ வேகம் என்பது மிகவும் குறைவு, ரேஞ்சும் தான். இவையெல்லாம் சேர்ந்து இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களிடம் டேக்ஆஃபே ஆகாமல் செய்துவிட்டன. டிவிஎஸ், பஜாஜ் ஆகிய நிறுவனங்கள் மாதத்திற்கு 40,000 முதல் 50,000 யூனிட்டுகள் வரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில், ஹோண்டா மற்றும் சுஸூகி ஆகிய நிறுவனங்கள் ஆறு மாதங்களில் 1,500 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆக்டிவா பெயரை வைத்துப் பிராண்டு செய்தால் மக்களிடம் கல்லாகட்டி விடலாம் என்று நினைத்து ஹோண்டா இறங்கியதா என்று தெரியவில்லை. ஆனால் என்னதான் பிராண்டாக இருந்தாலும் பொருள் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை என்றால் மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள். அது தான் ஹோண்டா விஷயத்திலும் நடந்திருக்கிறது. இது ஒரு தவறு தான். இந்தத் தவறில் இருந்து கற்றுக் கொண்டு மீண்டும் புதிதாக எலெக்ட்ரிக் வாகனத் துறையில் ஹோண்டா களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications