கண்டிப்பாக புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கை நீங்கள் வாங்க வேண்டும்.. ஏன் தெரியுமா?
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமானது சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் புத்தம் புதிய ஸ்பிளெண்டர் பிளஸ் ஃபிளெக்ஸ் ஃப்யூல் (Splendor Plus Flex Fuel) பைக்கை வெளியிட்டது. இந்தியாவில் அதிகளவிலான எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோல் குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த இடத்தில் அடித்தட்டு மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையிலேயே இந்தியாவில் இந்த பைக்கை வெளியிட்டுள்ளது ஹீரோ.
தற்போது E20 எரிபொருள், அதாவது 20 சதவீதம் எத்தனால் கலப்பு கொண்ட எரிபொருளே ஸ்டாண்டர்டாக விற்பனையில் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை E10 எரிபொருள், அதாவது 10 சதவீதம் எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோலே இந்தியாவில் ஸ்டாண்டர்டாக இருந்து வந்தது. இன்னும் சில பல ஆண்டுகளில், அதாவது ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் E25 அல்லது E30, அதாவது 25 சதவீதம் அல்லது 30 சதவீதம் எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோல் மத்திய அரசு ஸ்டாண்டர்டு ஆக்கலாம்.

இரண்டு காரணங்களுக்காக பெட்ரோலில் எத்தனால் கலப்பை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி வருகிறது மத்திய அரசு. ஒன்று எத்தனால் என்பது இந்தியாவில் பயிர் செய்யப்படும் விவசாயப் பொருட்களில் இருந்து கிடைக்கும் ஒரு எரிபொருளாகும். இதனால் எத்தனாலை அதிகமாகப் பயன்படுத்தும் போது கிடைக்கும் மொத்த வருவாயும் இந்தியாவிற்குள்ளேயே இருக்கும். இரண்டாவது எத்தனால் எரிபொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் அதற்கு நிகராகக் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல் அளவைக் குறைக்கலாம்.
அந்தப் பெட்ரோலின் அளவைக் குறைப்பதன் மூலம், அதற்காக செலவையும் மத்திய அரசால் குறைக்க முடியும். பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது 30 சதவீதத்துடன் நிறுத்தப்படாது. அதற்கு அடுத்தும் அது 40 சதவீதமாகும், பின்பு 50 சதவீதமாகும். இறுதியாக 100 சதவீதம் எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டமும் மத்திய அரசிடம் இருக்கிறது.

இதனைக் கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்துவதன் மூலம் வாகனங்களை எத்தனால் எரிபொருள் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றிக் கொண்டே வரமுடியும். மேலும், எத்தனால் உற்பத்தியையும் இந்திய எரிபொருள் தேவைக்கு ஏற்ப உயர்த்த முடியும், இந்த அமல்படுத்தப்படும் காலக்கட்டத்திற்குள். மத்திய அரசின் இந்தத் தொடர் அறிவிப்புகளினால் இடையில் பலியாகப் போவது, எத்தனால் பயன்பாட்டிற்கு ஏற்ப இல்லாத வாகனங்கள் தான்.
ஒவ்வொரு குறிப்பிட்ட அளவிற்கு எத்தனால் கலப்பு கூடும் போதும் அதற்கேற்ற அளவில் வாகனங்களும் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த எரிபொருளைப் பயன்படுத்தும் போது வாகனங்களின் ஆயுட் காலம் குறையும். 15 ஆண்டுகள் நன்றாக ஓட வேண்டிய பைக், அதிகளவிலான எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோலைப் பயன்படுத்துதவன் மூலம் 8 முதல் 10 ஆண்டுகள் வரை மட்டுமே நீடிக்க வாய்ப்புகள் இருக்கிறது.
இதனால் தான் கடந்த ஆண்டு E20 எரிபொருளை ஸ்டாண்டர்டு ஆக்கிய போது இந்தியா முழுவதும் எதிர்ப்பு அலைகள் எழுந்தன. இந்தப் பிரச்சினைக்கு மக்களுக்கு ஒரு தீர்வு வழங்கவே ஸ்ப்ளெண்டர் பிளஸ் உள்ளிட்ட புதிய ஃபிளெக்ஸ் ஃப்யூல் பைக் மற்றும் கார்களை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. தற்போது ஹீரோ புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கில் E85 எரிபொருள் வரை, அதாவது 85 சதவீதம் வரை எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனால் குறைந்தபட்சம் அடுத்த 20 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை இதனை வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்திய அரசின் எத்தனால் கலப்பு அறிவிப்புகள் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. ஒரு பைக்கின் ஆயுட்காலமும் அது தான். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 3 லட்சம் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குகள் விற்பனையாகி வருகின்றன. எனவே தான் முதலில் இந்த பைக்கை ஃபிளெக்ஸ் ஃப்யூல் ஒன்றாக மாற்றியிருக்கிறது ஹீரோ.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீண்ட காலத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஒரே பைக்கையே பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பைக்கை வாங்கலாம். குறிப்பாக புதிய பைக்கை வாங்கும் அடித்தட்டு மக்கள் இந்த ஸ்ப்ளெண்டர் பிளஸ் அல்லது இது போன்ற ஃபிளெக்ஸ் ஃப்யூல் கட்டமைப்போடும் வெளியாகும் பைக்குகளை வாங்குவதையே நாங்கள் பரிசீலிக்கிறோம்.


Click it and Unblock the Notifications