ஸ்போர்ட்டியான மற்றும் பிராக்டிகலான புதிய 150 சிசி ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது யமஹா
பைக்குகளில் மட்டும் ஸ்கூட்டர்களில் யமஹாவின் பெர்ஃபாமன்ஸ் ஸ்கூட்டர்கள் பெயர்போனவை. நமக்கு தெரிந்து ஒன்றிரண்டு ஸ்கூட்டர்களை மட்டுமே இந்தியாவில் யமஹா விற்பனை செய்து வருகிறது. நமக்குத் தெரியாத வகையில் ஏராளமான, பிராக்டிகலான மற்றும் பெர்ஃபான்ஸ் ஸ்கூட்டர்களை உலகமெங்கும் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதில் ஒன்று தான் சிக்னஸ் எக்ஸ்ஆர் 155 (Cygnus XR 155).
சர்வதேச அளவில் இந்த 150 சிசி ஸ்கூட்டரின் 70ம் ஆண்டு கொண்டாட்ட எடிஷனை வெளியிட்டுள்ளது யமஹா. யமஹா நிறுவனம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யத் தொடங்கி 70 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் கொண்டாடும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் ஒன்றாக சிக்னஸ் எக்ஸ்ஆர் 155 ஸ்கூட்டரின் இந்த சிறப்பு எடிஷனையும் நாம் பார்க்கலாம்.

சிறப்பு எடிஷன் என்பதால் உலகளவில் ஒட்டுமொத்தமாக 1,200 யூனிட்டுகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது யமஹா. எனவே இந்த ஸ்கூட்டரை ஒரு வகையில் கலெக்ஷன் எடிஷன் என்றும் கூறலாம். 70ம் ஆண்டு கொண்டாட்ட எடிஷனுக்கு சிவப்பு மற்றும் வெள்ளை இணைந்த டூயல் டோன் நிறத்தைக் கொடுத்துள்ளது யமஹா. இது இந்த ஸ்கூட்டருக்கு தனித்துவமான லுக்கைக் கொடுக்கிறது.
மேலும், 70ம் ஆண்டு சிறப்பு எடிஷன் என்பதைக் குறிக்கும் விதமாக ஸ்கூட்டரில் ஆங்காங்கே பேட்ஜ்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர வசதிகள் ரீதியாகவோ, மெக்கானிக்கலாகவோ ஸ்டாண்டர்டு சிக்னஸ் எக்ஸ்ஆர் 155 ஸ்கூட்டருக்கும், இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டருக்கும் இடையே வேறு எந்த வேறுபாடுகளும் இல்லை.

இந்த சிக்னஸ் எக்ஸ்ஆர் 155 ஸ்கூட்டரில் மற்றொரு சிறப்பம்சமும் இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் தான் இந்த சிக்னஸ் எக்ஸ்ஆர் 155 ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஏராக்ஸைப் போல பிராக்டிகாலிட்டியைக் குறைக்கும் விதமாக 'ஸ்பைனை'க் கொண்டிருக்காமல், ஃபிளாட்டான ஃபுட்-போர்டைக் கொண்டுள்ளது சிக்னஸ்.
இது இந்த ஸ்கூட்டரை, ஸ்போர்ட்டியான, அதே நேரம் பிராக்டிகலான ஒன்றாக மாற்றுகிறது. ஏராக்ஸில் இருக்கும் அதே இன்ஜின் தான் என்றாலும் ஏராக்ஸை விட 0.3 hp வரை குறைவாக 14.7 hp பவர் மற்றும் 0.17 Nm குறைவாக 13.73 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது சிக்னஸ் எக்ஸ்ஆர் 155 ஸ்கூட்டரின் இன்ஜின்.
ஸ்கூட்டரின் இரண்டு பக்கமும் 12 இன்ச் வீல்களுடன், சஸ்பென்ஷனுக்காக முன்பக்கமும் பின்பக்கமும் டெலிஸ்கோபிக் ஃபோக்ஸ் மற்றும் ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் டூயல் ஷாக் செட்டப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கிற்காக முன்பக்கம் 267 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஏராக்ஸை போலவே அனைத்து விதமான ப்ரீமியமான அம்சங்களை இந்த சிக்னஸ் எக்ஸ்ஆர் 155 ஸ்கூட்டர் மற்றும் அதன் 70ம் ஆண்டு சிறப்பு எடிஷனும் கொண்டிருக்கின்றன.
இந்திய மதிப்பிற்கு 3.47 லட்சம் ரூபாய் என்ற விலையில் சர்வதேச அளவில் வெளியாகியிருக்கிறது யமஹா சிக்னஸ் எக்ஸ்ஆர் 155 70ம் ஆண்டு சிறப்பு எடிஷன் மாடல். இந்தியாவில் இந்த சிக்னஸ் எக்ஸ்ஆர் 155 ஸ்கூட்டர் வெளியாவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் யமஹாவின் மற்றொரு 155 சிசி ஸ்கூட்டரான என்மேக்ஸ் 155 விரைவில் இந்தியாவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் தான் இதன் டிசைனை இந்தியாவில் அந்நிறுவனம் காப்புரிமை செய்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏராக்ஸில் இருக்கும் 155 சிசி பெர்ஃபாமன்ஸ் இன்ஜினைப் பயன்படுத்த உலகளவில் பல்வேறு பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை யமஹா விற்பனை செய்து வருகிறது. அதில் ஒன்றாக இந்த சிக்னஸ் எக்ஸ்ஆர் 155 ஸ்கூட்டரும் இருக்கிறது. மேலே கூறியது போல ஸ்போர்ட்டியா அதே நேரம் பிராக்டிகலான ஸ்கூட்டராக இது இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்பட்டாலும் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் யமஹாவின் திட்டம் வேறாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications