R15 எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வரும் யமஹா?
இந்தியா உட்பட உலகளவில் ஸ்போர்ட்டியான பைக்குகளுக்குப் பெயர் போனது யமஹா. இன்றும் R15 பைக்கின் மூலமாக இந்திய இளைஞர்களுக்கு உண்மையான ஸ்போர்ட் பைக்கின் அனுபவத்தைக் கொடுப்பது யமஹா தான். இந்த நிலையில் அந்த ஸ்போர்ட்டினஸை அப்படியே எலெக்ட்ரிக் வடிவிலும் எடுத்துச் செல்ல அந்நிறுவனம் விரும்புவதாகத் தெரிகிறது. தற்போது புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட் பைக்கின் உருவாக்கத்தில் அந்நிறுவனம் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான பேட்டன்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்திருக்கின்றன. அந்த பேட்டன்ட் புகைப்படத்தில் இருக்கும் பைக் R15 போலவே இருக்கிறது. R சீரிஸ் பைக்குகள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சில்-அவுட்டையே கொண்டிருப்பதனால் நமக்கு அப்படி தோன்றலாம். இந்த பேட்டன்ட் பைக் புகைப்படமானது உண்மையில் R7 பைக்கிற்கு அருகில் இருக்கும் டிசைனைக் கொண்டுள்ளது.

இந்த பேட்டன்ட புகைப்படமானது பைக்கிற்கானது கிடையாது. மாறாக பிரேக்கிங் தொடர்பான டிசைனுக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமாக எரிபொருள் பைக்குகளில் பின்பக்க பிரேக்கிற்கு ஃபுட் பெடலே கொடுக்கப்படும். ஹேண்டில்பாரில் இடது பக்க லீவர் கிளட்சுக்காக ஒதுக்கப்பட்டு விடுவதால், பின்பக்க பிரேக் ஃபுட் பெடலுக்கு சென்று விடுகிறது.
ஆனால், எலெக்ட்ரிக் பைக்குகளில் கிளட்சுக்கான வேலை இல்லை. எனவே அந்த இடத்தில் பின்பக்க பிரேக்கிற்கான லீவரை எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் யமஹாவும் தாங்கள் புதிதாக உருவாக்கி வரும் பைக்கின் பின்பக்க பிரேக்கிற்கு இடது பக்க லீவரில் கண்ட்ரோல் கொடுக்கும் டிசைனையே காப்புரிமைக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் இது இந்தியாவில் இல்லை. வெளிநாடுகளில் அந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.

எனினும் இது யமஹா ஸ்போர்ட்டியான எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வருவதை உறுதி செய்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அளவிற்கு எலெக்ட்ரிக் பைக்குகள் மீது வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. அவை மெயின் ஸ்ட்ரீமுக்கு வருவதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. எனினும் தற்போது எலெக்ட்ரிக் பைக்குகளை வடிவமைப்பதை யமஹா நிறுத்தவில்லை. எலெக்ட்ரிக் பைக்குகள் மீது மக்களுக்கு ஆர்வம் வரும் போது அந்நிறுவனம் தயாராக இருக்க வேண்டும்.
எப்படி இருந்தாலும் முதலில் இந்தியாவிற்கு இந்த பைக் வராது. இதன் டிசைனை வைத்துப் பார்க்கும் போது அதிக பெர்ஃபாமன்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் பைக்காகவே இது இருக்கும். அந்த விலை அதிகமான பைக் இந்திய சந்தைக்கு ஒத்து வராது. எனவே இந்த பைக் இந்தியாவிற்கு வரும் வாய்ப்பு கண்ணுக்கெட்டிய தூரம் வரை குறைவு தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் பைக்குகளை விடுங்கள், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மெயின் ஸ்ட்ரீமாகி இருக்கும் இந்த நேரத்தில் சொந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இந்தியாவில் யமஹா இன்னும் வெளியிடவில்லை. EC-06 என்ற ஸ்கூட்டர் வெளியானது தான். ஆனால் அது முற்றிலும் யமஹா தயாரித்தது இல்லை. மேலும் விலையும் சற்று கூடுதலாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் வகையில் இல்லை.
வளர்ந்து வரும் இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் யமஹாவின் பிரசன்ஸ் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை அந்நிறுவனம் வெளியிட்டதாகவே தெரிகிறது. ஆனால் அது நல்ல விஷயம் தான். விரைவில் யமஹா சொந்தமாக உருவாக்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட வேண்டும். அதற்கான காலம் தொலைவில் இல்லை.
ஏனெனில் இந்தியாவில் விற்பனை செய்வதற்காகவே சொந்தமாக ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை யமஹா வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன், ஏற்கனவே இந்தியாவில் யமஹா காட்சிப்படுத்தியிருக்கும் ஏராக்ஸ் E எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் லைன்-அப்பில் இருக்கிறது. விரைவில் இந்த இரண்டு யமஹா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வெளியீடுகளையும் இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications