130 கிமீ உண்மையான ரேஞ்சைக் கொடுக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. கண்டிப்பா இதை வாங்கலாம்!
கடந்த வாரம் தான் இந்தியாவில் தங்களது இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான 'ஏராக்ஸ் E'-யை வெளியிட்டது யமஹா. எனினும் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான EC-06-யே வாடிக்கையாளர்களின் சாய்ஸாக இருக்கும். ஏனெனினில் அது தான் மேற்கூறிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் குறைவான விலையைக் கொண்டுள்ளது (சந்தையில் இருக்கும் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும் போது அதுவும் விலை அதிகம் தான்).
சரி, இப்போது நாம் பார்க்கப் போவது யமஹாவின் அந்த முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உண்மையான ரேஞ்சு எவ்வளவு என்பதைப் பற்றித் தான். EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் 6.9 kW (8.9 hp) பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பவர்ட்ரெயின் செட்டப்பானது 169 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது யமஹா.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எக்கோ, ஸ்டாண்டர்டு மற்றும் பவர் என மூன்று ரைடிங் மோடுகளைக் கொடுத்துள்ளது யமஹா. இதில் ஸ்டாண்டர்டு மோடு தான் வழக்கமான தினசரிப் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். குறிப்பாக ஓரளவிற்கு நல்ல ரேஞ்சைக் கொடுப்பதோடு, சாலைகளில் போதுமான வேகத்தில் பயணிப்பதற்கும் ஸ்டாண்டர்டு ரைடிங் மோடே ஏற்றதாக இருக்கும்.
இந்த ஸ்டாண்டர்டு ரைடிங் மோடில் சிங்கிள் சார்ஜில் 110 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கிறது யமஹா EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். இந்த ரேஞ்சு நாம் தினசரி பயன்படுத்தும் போது கிடைக்கக்கூடிய உண்மையான ரேஞ்சு ஆகும். மேலும், இந்த ரைடிங் மோடில் அதிகபட்சமாக மணிக்கு 79 கிமீ வேகத்திலும் செல்ல முடிகிறது. இது நகரங்களிலும் சரி, நெடுஞ்சாலைகளிலும் சரி போதுமான வேகமே ஆகும்.

சற்று நீண்ட தூரம் பயணிக்கிறீர்கள் அல்லது நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டும் என்றால் எக்கோ மோடைப் பயன்படுத்தலாம். இந்த ரைடிங் மோடில் 130 கிமீ முதல் 140 கிமீ வரையிலான உண்மையான ரேஞ்சை நாம் பெற முடியும். ஆனால், இந்த மோடில் குறைவான வேகத்திலேயே நாம் பயணம் செய்ய முடியும். அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீ வரையிலான வேகத்தில் நாம் செல்லலாம்.
நகரத்திற்குள் பயன்படுத்த இந்த எக்கோ மோடு சிறப்பானதாகவும் போதுமான ஒன்றாகவும் இருக்கும். வேகமாக செல்ல வேண்டும் என்றால் பவர் மோடைப் பயன்படுத்தலாம். இந்த ரைடிங் மோடில் அதிகபட்சமாக 92 கிமீ வரையிலான வேகத்தில் இந்த EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நாம் செல்ல முடியும். ஆனால் ரேஞ்சு குறைவாகவே கிடைக்கும். பவர் மோடைப் பயன்படுத்தும் போது 70 முதல் 80 கிமீ வரையிலான ரேஞ்சையே நாம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று மோடுகளுமே கொடுக்கப்பட்ட வேலையைக் கட்சிதமாக செய்யும் திறனைக் கொண்டிருக்கின்றன. மேலும், நிறுவனம் குறிப்பிட்ட சான்றளிக்கப்பட்ட ரேஞ்சுக்கு அருகில் உண்மையான ரேஞ்சும் இருக்கிறது. வேகமும் போதுமான அளவில் இருப்பதையடுத்து, தினசரிப் பயன்பாட்டிற்கு ஏற்ற சிறப்பான ஸ்கூட்டர்களில் ஒன்றாக இந்த யமஹா EC-06ஐ நாம் சொல்லலாம்.
ஆனால், இந்த ஸ்கூட்டரை வாங்குவதற்கு இரண்டு விஷயங்கள் தடைக்கற்கலாக இருக்கலாம். ஒன்று பேட்டரியின் சார்ஜிங் நேரம். இந்த எலெக்டரிக் ஸ்கூட்டருடன் 450W ஹோம் சார்ஜர் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதனைக் கொண்டு 0-100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 10 மணி நேரம் ஆகிறது. 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யவும் 8 மணி நேரம் வரை ஆகும். இன்னும் கொஞ்சம் பவர்ஃபுல்லான 750W சார்ஜரைக் கொடுப்பதை யமஹா பரிசீலனை செய்யலாம்.
இரண்டாவது விலை. 1.72 லட்சம் ரூபாய் என்ற விலையில் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) இந்த EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது யமஹா. ஆன்-ரோடு விலை இன்னும் அதிகமாக இருக்கும். சந்தையில் இருக்கும் மற்ற ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும் போது இது கொஞ்சம் அதிக விலை தான். இதே அளவு பெரிய பேட்டரி பேக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்ட்களுடன் ஒப்பிடும் போதும் இது சற்று கூடுதல் விலை தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யமஹா EC-06 நல்ல ஸ்கூட்டரா என்று கேட்டால், கண்டிப்பாக ஆம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் கொடுக்கும் விலைக்கேற்ற ஸ்கூட்டாரவும் இதனை நாம் கூறலாம். மற்ற ஸ்கூட்டர்களில் இருந்து தனித்துவமான லுக்கையும் கொண்டுள்ளது. விலையைத் தவிர்த்துவிட்டால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதை கண்டிப்பாக பரிசீலனை செய்யலாம் என்பதே எங்களின் கருத்தாக இருக்கும்.


Click it and Unblock the Notifications