பெட்ரோலே இல்லாமல் இயங்கும் பைக் அறிமுகம்.. இப்படி ஒரு பைக்குக்கு தான காத்துட்டு இருந்தோம்!
20% எத்தனால் கலப்பு கொண்ட E20 பெட்ரோலை இந்தியாவில் நிரந்தரமாக்கியதற்கு வாகன ஓட்டிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் 100% எத்தனாலில் இயங்கக்கூடிய பைக் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது யமஹா. ஆனால் இந்தியாவில் இல்லை, பிரேசிலில். உலகளவில் எத்தனாலை பெருமளவில் வாகன எரிபொருளாகப் பயன்படுத்தும் நாடுகளில் முன்னணியில் உள்ளது பிரேசில். 100% எத்தனாலில் இயங்கக்கூடிய பைக்குகள் அல்லது கார்கள் எல்லாம் அங்கு சாதாரணம்.
உலகளவில் அதிகளவிலான எத்தனாலை உற்பத்தி செய்வதில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளன. 2024ம் ஆண்டு தரவுப்படி இந்த இரண்டு நாடுகளுமே உலகின் 80% எத்தனாலை உற்பத்தி செய்கின்றன. இதனால் முழுமையான எத்தனால் பயன்பாடு அல்லது எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோல் அங்கே கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த காரணத்தினால் தான் முழுமைக 100% எத்தனாலில் இயங்கக்கூடிய 'ஃபேக்டர் 150' (Factor 150) என்ற பைக் மாடலை யமஹாவால் அந்நாட்டில் வெளியிட முடிந்திருக்கிறது. இந்த பைக்கைப் பார்க்கும் போது இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் FZ-S Fi பைக்கின் நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை. நிறைய டிசைன் அம்சங்கள் இரண்டு பைக்குகளிலும் ஒன்று போலவே இருப்பதாகவே தோன்றுகிறது.
சரி இப்போது இந்த ஃபேக்டர் 150 பைக்கின் சிறப்பம்சத்திற்கு வருவோம். இந்த பைக்கில் 149 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினில் பெட்ரோல் அல்லது எத்தனால் என எந்த எரிபொருளை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 100% பெட்ரோலிலும் இந்த இன்ஜின் இயங்கும், 100% எத்தனாலிலும் இந்த இன்ஜின் இயங்கும். இதுதவிர இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருப்பது போல 20% எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோலிலும் இந்த பைக் இயங்கும்.

விதவிதமான எரிபொருள்களைப் பயன்படுத்துவதினால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்கேற்பவே இந்த பைக் மற்றும் அதன் இன்ஜின் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த 149 சிசி இன்ஜினானது பெட்ரோலில் இயங்கும் போது 11.8 hp பவர் மற்று்ம 12.74 Nm டார்க்கையும், எத்தனாலில் இயங்கும் போது சற்று கூடுதலாக 12 hp பவர் மற்றும் 12.74 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
இதனைக் கேட்டவுடன் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் CNG+பெட்ரோல் வாகனங்களைப் போல இருக்கிறதல்லவா. ஆனால் ஒரேயொரு சின்ன வேறுபாடு தான். இங்கே CNG மற்றும் பெட்ரோல் இரண்டிற்குமே தனி தனி எரிபொருள் டேங்குகள் கொடுக்கப்பட்டிருக்கும். அது பைக்காக இருந்தாலும் சரி, காராக இருந்தாலும் சரி. ஆனால் புதிய ஃபேக்டர் 150 உள்ளிட்ட எத்தனாலில் இயங்கும் வாகனங்களில் ஒரேயொரு எரிபொருள் டேங்க் தான்.
ஃபேக்டர் 150 பைக்கிலும் ஒரேயொரு 15.4 லிட்டர் எரிபொருள் டேங்க் தான் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், எத்தனால் என இரண்டும் ஒன்றாகக் கலந்தே இருக்கும். இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதன் மூலம் எந்த வாகனத்தையும் எளிதாக எத்தனால் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வடிவமைத்து விட முடியும்.
இந்தியாவிலும் 100% எத்தனால் பயன்பாடு என்ற இலக்கை நோக்கிய இந்திய அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனவே எதிர்காலத்தில் இந்தியாவிலும் இது போன்று 100% எத்தனாலில் இயங்கக்கூடிய பைக்குகள் மற்றும் கார்களின் வெளியீடுகளை நாம் எதிர்பார்க்கலாம். எத்தனாலில் ஓடும் பைக் இப்படித் தான் இருக்கும். பார்த்து வைத்துக் கொள்ளுங்கள் மக்களே.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எத்தனாலில் ஓடும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்களைப் பார்க்கும் போது, பெட்ரோலில் இயங்கும் இந்திய பைக்குகளுக்கும் இதற்கும் பெரியளவில் இந்த வேறுபாடும் இல்லை. எனவே எத்தனால் வாகனங்களைக் கண்டு நாம் பயன்படத் தேவையில்லை. தற்போது இருக்கும் வாகனங்களில் எத்தனாலைப் பயன்படுத்துவது தான் பிரச்சினையே தவிர, எத்தனாலில் இயங்கும் வகையில் தயாரிக்கப்படும் வாகனங்களினால் பிரச்சினையில்லை, நன்மை தான்.


Click it and Unblock the Notifications