சென்னை ஆலையை கண்டுக்கல... முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்க வேற மாநிலத்துக்கு போன யமஹா!!
கர்நாடகாவில் ரிவர் மொபிலிட்டி (River Mobility) நிறுவனம் யமஹா இசி-06 (EC-06) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் (Electric Scooter) உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட முதல் இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கர்நாடகாவின் ஹோஸ்கோட் ஆலையில் மாநில தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் வெளியீடு செய்தார். இந்தியாவில் யமஹாவின் இந்த முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்ன? அதனை ஏன் ரிவர் மொபிலிட்டி என்கிற ஸ்டார்ட்-அப் (Start-up) நிறுவனம் உற்பத்தி செய்கிறது? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜப்பானை சேர்ந்த யமஹா இந்திய சந்தையில் பெரிய அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கைகளை பதிவு செய்து முன்னணி நிறுவனமாக உள்ளது. இருப்பினும், எலெக்ட்ரிக் 2-வீலர் சந்தையில் நீண்ட காலமாக நுழையாமல் தவிர்த்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தில் சுமார் 4 கோடி டாலர்களை முதலீடு செய்து அந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கைப்பற்றியது.

ரிவர் மொபிலிட்டியை யமஹா கைப்பற்றியதற்கு முக்கிய காரணம், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்குவதற்கு கர்நாடகாவை சேர்ந்த ரிவர் மொபிலிட்டியின் தொழிற்சாலையையும், ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையத்தையும் யமஹா பயன்படுத்துவதற்காக ஆகும். ஏனெனில், அந்த சமயத்தில் ரிவர் மொபிலிட்டியின் இண்டி (Indie) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தோற்றம் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தது.
தற்போது உற்பத்தி துவங்கப்பட்டிருக்கும் யமஹா இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கூட பார்ப்பதற்கு கொஞ்சம் ரிவர் இண்டி போன்று இருப்பதை காணலாம். 2 ஆண்டுகளுக்கு முன் செய்துக் கொள்ளப்பட்ட கூட்டணியில் ஒரு வழியாக இப்போது உற்பத்தி துவங்கப்பட்டு இருப்பது, ரிவர் மொபிலிட்டி மற்றும் யமஹா இடையேயான தொழிற்துறை கூட்டாண்மையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

ஹோஸ்கோட்டில் உள்ள ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையில் நடைபெற்ற நிகழ்வில், அமைச்சர் எம்.பி. பாட்டீல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை யமஹாவிற்கு வழங்கினார். பின்னர், இந்த உற்பத்தி ஆலையை அமைச்சர் பாட்டீல் பார்வையிட்டு, உற்பத்தி உபகரணங்கள் மற்றும் அதற்கான உள்கட்டமைப்பை ஆய்வு செய்தார்.
இந்த ஆலையில் ஆண்டுதோறும் சுமார் 2,000 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும் என்று குறிப்பிட்ட கர்நாடக அமைச்சர் பாட்டீல், கர்நாடகாவின் எலெக்ட்ரிக் வாகனத் துறையில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சிக்கு இந்தத் தொடக்கம் பெரும் பலமாக அமையும் என்றும் தெரிவித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பேட்டரிகளுடன் இசி-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உருவாக்கப்படுகின்றன.

இந்த பேட்டரிகள் ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை இயங்கும் திறன் கொண்டவை என்றும், 10 ஆண்டுகள் வாரண்டி உடன் வரும் என்றும் ரிவர் மொபிலிட்டி நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ரிவர் இன்டி (River Indie) அடிப்படையிலான யமஹா EC-06 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது ரிவர் இன்டி மாதிரியின் அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் ஸ்டைலிங் மற்றும் அம்சங்களில் சில மாற்றங்கள் உள்ளன.
அர்விந்த் மணி மற்றும் விபின் ஜார்ஜ் என்பவர்களால் 2021 மார்ச்சில் நிறுவப்பட்ட ரிவர் மொபிலிட்டி நிறுவனம், யமஹா மோட்டார் லிமிடெட், துபாயைச் சேர்ந்த அல் ஃபுட்டைம் குழுமம், கிறிஸ் சாக்காவின் லோவர்கார்பன் கேபிட்டல், டொயோட்டா வென்ச்சர்ஸ், மனிவ் மொபிலிட்டி மற்றும் டிரக்ஸ் வென்ச்சர்ஸ் போன்ற முன்னணி முதலீட்டாளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழ்நாட்டின் சென்னையில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திவரும் யமஹா மோட்டார் நிறுவனம் இவ்வாறு ரிவர் மொபிலிட்டியின் தொழிற்சாலையை பயன்படுத்துவது கர்நாடகா மாநிலத்தின் விநியோகச் சங்கிலியை பலப்படுத்துவது மட்டுமின்றி, இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனத் துறைக்கு உதிரிபாகங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில், யமஹா இசி-06 அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









