யமஹா புதிய ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிடுவது உறுதியாகியுள்ளது.. இது தான் அந்தப் புதிய ஸ்கூட்டர்
ஏற்கனவே ஏராக்ஸ் 155 (Aerox 155) என்ற மேக்ஸி ஸ்கூட்டரை யமஹா இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில், என்மேக்ஸ் 155 (Nmax 155) என்ற மற்றொரு மேக்ஸி ஸ்கூட்டரையும் இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் இந்தியாவில் என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரின் டிசைனைக்கு காப்புரிமை பெற்றிருக்கிறது யமஹா.
மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவில் அதிகரித்து வரும் போட்டிய சமாளிக்க யமஹா இந்த முடிவை எடுத்திருக்கிறது. தற்போது அதன் ஏராக்ஸ் 155 மற்றும் ஹீரோவின் ஸூம் 160 ஆகியவை மட்டுமே லிக்விட்-கூல்டு இன்ஜினுடன் கூடிய மாஸ் மார்க்கெட் மேக்ஸி ஸ்கூட்டர்கள் என்ற பெருமையுடன் இந்தியாவில் வலம் வருகின்றன. ஆனால் விரைவில் ஹோண்டா மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களும் லிக்விட்-கூல்டு இன்ஜினுடன் கூடிய புதிய 160 சிசி ஸ்கூட்டர்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கின்றன.

என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரை பல ஆண்டுகளாகவே சர்வதேச அளவில் பல்வேறு ஆட்டோமொபைல் சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது யமஹா. இந்த ஸ்கூட்டரை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் அந்நிறுவனத்திற்கு சிரமமேதும் இருக்காது. ஏனெனில், வெளிப்புற டிசைனைக் கடந்து, ஏராக்ஸ் மற்றும் என்மேக்ஸ் ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களின் அடிப்படையும் ஒன்று தான். இரண்டுமே ஒரே பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஏராக்ஸை ஏற்கனவே இந்தியாவில் யமஹா தயாரித்து வருவதால், என்மேக்ஸையும் சேர்த்துத் தயாரிப்பதில் யமஹாவிற்குப் பிரச்சினையில்லை. ஹோண்டா மற்றும் டிவிஎஸ்ஸின் புதிய 160 சிசி ஸ்கூட்டர்கள் இந்தாண்டு இறுதியில் அல்லது 2027ன் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவற்றை ஒட்டியே இந்த என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரின் வெளியீட்டையும் யமஹா திட்டமிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்:
மேலே கூறியது போல அதே 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் தான். இந்த இன்ஜினானது 8,000 rpm-ல் 15 hp பவர் மற்றும் 6,500 rpm-ல் 14 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் ஏற்கனவே E20 எரிபொருளுக்கு இணங்கும் வகையிலேயே பயன்பாட்டில் இருக்கிறது. எனவே என்மேக்ஸில் பயன்படுத்துவதிலும் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
எராக்ஸைப் போலவே என்மேக்ஸ் ஸ்கூட்டரும் அண்டர்போன் ஃபிரேமையே பயன்படுத்துவதால், இதிலும் ஃப்ளோர் போர்டும் பயன்படுத்தும் வகையில் ஃபிளாட்டாக இருக்காது. ஒரு கிளாஸி ஸ்கூட்டராக இது கொஞ்சம் பின்னடைவுதான். ஏராக்ஸை விட 0.5 லிட்டர் அதிகமாக 25 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜை என்மேக்ஸ் 155 ஸ்கூட்டர் கொண்டிருக்கும்.
சஸ்பென்ஷன் செட்டப் இரண்டு ஸ்கூட்டர்களிலும் ஒன்று தான். முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள். ஆனால் இந்த பின்பக்க சஸ்பென்ஷன் என்மேக்ஸில் கேஸ் சார்ஜ்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஏராக்ஸைப் போல இல்லாமல் என்மேக்ஸின் இரண்டு பக்கமும் 13 இன்ச் வீல்களை யமஹா கொடுத்திருக்கும். ஏராக்ஸில் 14 இன்ச் வீல்கள். 770 மிமீ சீட் உயரத்துடன் சற்று உயரம் குறைவானவர்களும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் என்மேக்ஸ் இருக்கும்.
ஏராக்ஸை விட 10 கிலோ அதிகமாக 135 கிலோ எடையை என்மேக்ஸ் 155 ஸ்கூட்டர் கொண்டிருக்கும். இந்த ஸ்கூட்டரில் வெளிநாடுகளில் இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்குகளுடன், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை கொடுத்துள்ளது யமஹா. இந்திய மாடலிலும் இதே அம்சம் கொடுக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் கனெட்டிவிட்டி வசதியுடன் கூடிய 4.2 இன்ச் TFT டிஸ்பிளே, கீலெஸ் இக்னிஷன், LED விளக்குகள், எரிபொருள் சிக்கனத்திற்காக ஸ்டாப்/ ஸ்டார்ட் தொழில்நுட்பம் ஆகிய வசதிகளை என்மேக்ஸ் 155 கொண்டுள்ளது. எராக்ஸில் இதில் சில அம்சங்கள் இல்லை. என்மேக்ஸில் இருக்குமா இல்லையா என்பதைப் பார்க்கலாம்.
யமஹா ஏராக்ஸ் 155 மேக்ஸி ஸ்கூட்டரானது இந்தியாவில் 1.43 லட்சம் முதல் 1.46 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. என்மேக்ஸ் 155 ஸ்கூட்டரானது இதனை விடக் கூடுதல் விலையிலேயே வெளியாகும் எனத் தெரிகிறது. கூடுதல் அம்சங்களைக் கொண்டிருக்குமா என்பதற்கு நாம் காத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மேக்ஸி ஸ்கூட்டர் வெளியாகுமா ஆகாத என தகவல்கள் மட்டுமே வெளியாகி வந்த நிலையில், தற்போது இது வெளியாகலாம் என உறுதிபடக்கூறும் வகையில் காப்புரிமை செய்துள்ளது சிறப்பான விஷயம் தான். இதன் வரவுடன் மேக்ஸி ஸ்கூட்டர் சந்தை இன்னும் சூடுபிடிக்கப்டுகிறது. அடுத்த ஆறு மாதங்களில் மூன்று புதிய 160 சிசி ஸ்கூட்டர்களின் வெளியீடு என்பது கேட்பதற்கே உற்சாகமான தகவலாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications