அடுத்த மாதம் வெளியாகிறது யமஹாவின் புதிய R2 ஸ்போர்ட் பைக்?
தற்போது யமஹாவின் இந்திய லைன்-அப்பில் கொண்டாடப்படும் ஒரு பைக் என்றால் அது R15 தான். இதன் விற்பனை மிகவும் அதிகமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த பைக்கை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. பட்ஜெட் பைக் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர பெர்ஃபாமன்ஸின் முகம் என்றால் அது R15 தான். இந்த நிலையில், R15-வை விட கூடுதல் பெர்ஃபாமன்ஸ் கொண்ட R2 பைக்கை அடுத்த மாதம் இந்தியாவில் யமஹா வெளியிடலாம் எனத் தகவல்கள் கசிந்துள்ளது.
கடந்தாண்டு தான் இந்தியாவில் YZF-R2 என்ற புதிய பைக்கிற்கான பெயரை இந்தியாவில் டிரேடுமார்க் செய்தது யமஹா. இப்போது இருந்தே இந்தப் புதிய பைக் மீது வாடிக்கையாளர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. யமஹாவின் R3, R7 உள்ளிட்ட பைக்குளை இந்திய பட்ஜெட் வாடிக்கையாளர்களால் நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் R2, கண்டிப்பாக வாங்கக்கூடிய விலையில் தான் இருக்கும். இதுவும் இந்தப் புதிய 200 சிசி பைக் மீதான எதிர்பார்ப்பிற்கான முக்கியக் காரணம்.

தற்போது விற்பனையில் இருக்கும் R15 V4 பைக்கின் இன்ஜினை கொஞ்சம் மறுவடிவமைப்பு செய்து புதிய R2 பைக்கில் யமஹா பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக R15-ன் 155 சிசி இன்ஜினில், போர் அல்லது ஸ்ட்ரோக்கில் மாற்றம் செய்து 200 சிசியாக யமஹா மாற்றி வடிவமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய இன்ஜினை விட கூடுதல் பவரை வெளிப்படுத்துவதாக அது இருக்கும்.
தற்போதைய பைக்கில் 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின். இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பவர்ஃபுல்லான 150 சிசி இன்ஜின் என்றால் அது இது தான். 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 18.1 hp பவர் மற்றும் 14.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் மறுவடிவமைப்பு செய்யப்படும் புதிய 200 சிசி இன்ஜினானது 25 hp வரையிலான பவர் மற்றும் 19.2 Nm வரையிலான டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் பவருக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கூடுதல் எலெக்ட்ரானிக் அம்சங்களையும் புதிய பைக்கில் யமஹா கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
R15 பைக்கை இந்தியாவில் தற்போது 1.57 லட்சம் ரூபாய் முதல் 1.98 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது யமஹா. மேம்படுத்தப்பட்ட இன்ஜினைக் கொண்ட R2 பைக்கை இதனை விடக் கூடுதலாக 2.25 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலான விலையில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
R15-ல் இருந்து R2 பைக்கை தனித்துக் காட்ட சில டிசைன் மாற்றங்களையும் புதிய பைக்கில் யமஹா செய்திருக்கலாம். இந்தப் புதிய பைக்கானது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் கேடிஎம் RC200, பஜாஜ் RS 200 உள்ளிட்ட முழுமையான ஃபேரிங் கொண்ட 200 சிசி பைக்குகளுக்குப் போட்டியாக யமஹா விற்பனை செய்யும்.
கேடிஎம்மின் RC 200 பைக்கே புதிய யமஹா R2 பைக்கிற்கான நேரடிப் போட்டியாளராக இருக்கும். இந்த பைக்கை 2.25 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே கேடிம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. புதிய யமஹா R2 பைக்கை நீங்கள் வாங்குவீர்களா?
டிரைவ்ஸ்பார்க் கருத்து: R15 சிறப்பான பைக் என்றாலும் நாளின் இறுதியில் அதுவொரு 150 சிசி பைக் தான். எனவே R2 சிறப்பான ஒரு மேம்பாடாகவே தெரிகிறது. இரண்டு பைக்குகளையும் ஒரே நேரத்திலேயே யமஹா விற்பனை செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பைக்குகளின் விற்பனையும் ஒன்றையொன்று பாதிக்காமல் இருக்க, R2-வை நிறைய ப்ரீமியம் வசதிகளுடன் சற்று கூடுதல் விலையில் யமஹா வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2.50 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையில் வெளியிடலாம். வாடிக்கையாளர்களின் மனநிலைப்படி, இன்னும் சற்று குறைவான விலையில் வெளியிடலாம் என்றாலும், சந்தை நிலவரப்படி, தங்களுடைய இரண்டு ஸ்போர்ட்டியான பைக்குகளும் விற்பனையில் மோதிக்கொள்ளாமல் இருக்க இந்த முடிவையே யமஹா எடுக்கும் என நாங்கள் நினைக்கிறோம். யமஹா என்ன நினைக்கிறது என்பதைப் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications