125சிசி யமஹா ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கு தலையில் விழுந்த பேரிடி! கம்மியான விலைனு போனதுல இதுதான் மிச்சம்!
யமஹா மோட்டார் இந்தியா (Yamaha Motor India) நிறுவனம் தனது பிரபலமான 125சிசி ஹைபிரிட் (Hybrid) ஸ்கூட்டர்களான ஃபாசினோ 125 (Fascino 125 Fi Hybrid) மற்றும் ரே இசட்.ஆர் 125 (RayZR 125 Fi Hybrid)-இல் பழுதுகளை கண்டறிந்ததை அடுத்து விற்கப்பட்ட இந்த ஸ்கூட்டர்களை திரும்ப அழைப்பதாக (Recall) அறிவித்துள்ளது.
2024 மே 2 முதல் 2025 செப்டம்பர் 3 வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர்களின் சுமார் 3,06,635 யூனிட்கள் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையின் கீழ் வந்துள்ளன. ஸ்கூட்டர்களை வாங்கிய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து யமஹா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த ரீகால் அறிவிப்பு, ஸ்கூட்டர்களின் முன் பிரேக் காலிப்பரில் (front brake caliper) கண்டறியப்பட்டுள்ள ஒரு குறைபாட்டை சரிசெய்து கொடுப்பதற்காக ஆகும். சில இயக்க சூழ்நிலைகளில், பிரேக் காலிப்பர் திறம்பட செயல்படாமல் போகும் அபாயம் உள்ளதாக யமஹா தெரிவித்துள்ளது. இது அனைத்து ஸ்கூட்டர்களிலும் நிகழாமல் இருக்கலாம், எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்கூட்டர் இந்த ரீகால் திட்டத்தில் உள்ளதா என்பதை அறிய, யமஹா இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள 'தன்னிச்சையான ரீகால் பிரச்சாரம்' (Voluntary Recall Campaign) பக்கத்திற்குச் சென்று, தங்கள் ஸ்கூட்டரின் சேசிஸ் எண்ணை (chassis number) உள்ளிட்டு விவரங்களைப் பெறலாம். மேலும் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட யமஹா டீலரையோ அல்லது இலவச உதவி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட பாகங்களுக்கான மாற்று ஏற்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யமஹாவின் இந்த திரும்ப அழைக்கும் திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான ஸ்கூட்டர்கள் அடங்குவதால், சேவை மையத்திற்குச் செல்வதற்கு முன் சந்திப்பை (appointment) முன்பதிவு செய்வது சிறந்தது என யமஹா அறிவுறுத்தியுள்ளது. இது நேர விரயத்தைத் தவிர்க்க உதவும்.
ரீகால் செய்யப்படும் ஸ்கூட்டர்களான ரே இசட்.ஆர் 125 ஃப்யுல்-இன்ஜெக்டட் ஹைப்ரீட் மற்றும் ஃபாசினோ 125 ஃப்யுல்-இன்ஜெக்டட் ஹைப்ரீட் ஆகியவை ஒரே அடிப்படை ஹார்ட்வேர் பாகங்களை பகிர்ந்து கொள்கின்றன. இவை 125 சிசி ஏர்-கூல்டு SOHC என்ஜினைப் பயன்படுத்துகின்றன. இது 8.2 பிஎஸ் (PS) ஆற்றலையும், 10.3 என்எம் (Nm) டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது.

மேலும், இந்த என்ஜின் ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜின், ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) மூலமாக தொடர்ந்து ஆன்-போர்டு பேட்டரியை சார்ஜ் செய்கிறது. ஹைப்ரிட் அமைப்பு மேம்பட்ட பவர் அசிஸ்ட் சிஸ்டம் மூலம் செயல்படுகிறது, இது பேட்டரி ஆற்றலைப் பயன்படுத்தி சீரான அதிகப்பட்ச டார்க்கை வழங்குகிறது.
மலைப்பாதைகளில் ஏறும்போதும் அல்லது கனமான பொருட்களை ஏற்றிச் செல்லும்போதும் இந்த கூடுதல் செயல்திறன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். SMG ஆனது வாகனத்தை சத்தமில்லாமல் மற்றும் சுலபமாக ஸ்டார்ட் செய்ய உதவுகிறது. இந்த ஸ்கூட்டர்களில் முன்புறம் 12 அங்குல சக்கரங்களும், பின்புறம் 10 அங்குல சக்கரங்களும் பொருத்தப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனை செய்யப்பட்ட ஆட்டோமொபைல் வாகனங்கள் பழுதுகளின் காரணமாக உற்பத்தி செய்த நிறுவனத்தால் திரும்ப அழைக்கப்படுவது வாடிக்கையாக நடக்கக்கூடிய ஒன்றே ஆகும். இது, நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கக்கூடியதாக தெரிந்தாலும், அதேநேரம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை வழங்கக்கூடியது ஆகும். இதனாலேயே, தற்போது யமஹாவை போன்று செய்த தவறை பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications









