ஆர்எக்ஸ்100 பிராண்டில் புதிய பைக்... பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் யமஹா?
இந்திய இருசக்கர வாகன வரலாற்றில் சில பைக்குளின் பெயர்கள் காலத்தைக் கடந்து நிற்கும். அந்தப் பட்டியலில் யமாஹா ஆர்எக்ஸ்100வுக்கு தனி இடம் உண்டு. 1980 மற்றும் 90களில் இளைஞர்களின் கனவு பைக்காக இருந்த ஆர்எக்ஸ்100, உற்பத்தி நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அதன் மீதான ஆர்வம் மட்டும் இன்னும் குறையவில்லை.
இன்றும் பழைய ஆர்எக்ஸ்100 பைக்கை பார்த்தால் மனதிற்குள் ஜில்லிடும். அந்த அளவுக்கு அந்தப் பெயருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தியாவில் ஆர்எக்ஸ்100 என்பது யமஹாவின் தனித்துவமான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. யமாஹா என்றாலே வேகம், ஸ்போர்ட்டி பெர்ஃபார்மென்ஸ், இளைஞர்களுக்கான பைக் என்ற எண்ணத்தை இந்திய இளைஞர்கள் மத்தியில் உருவாக்கிய மாடல்களில் இதுவும் முக்கியமானது.

இலகுவான உடல், அதிரடியான பிக்கப், எளிமையான தோற்றம், அதற்கு ஏற்ற 2 ஸ்ட்ரோக் எஞ்சின் மற்றும் சைலென்சர் சப்தம் என அந்த காலத்திலேயே பெர்ஃபார்மென்ஸ் பைக்குக்கான தனி அடையாளத்தை பெற்றது. இந்த நிலையில், ஆர்எஸ்100 பைக்கை மீண்டும் அவ்வப்போது பேச்சுகள் எழுவதும், அந்த பெயரில் புதிய பைக்கை அறிமுகம் செய்து அதன் மதிப்பை குறைத்துவிடக்கூடாது என யமஹா தயங்குவதும் தொடர்கதையாகி விட்டது.
பழைய ஆர்எக்ஸ்100 பைக்கின் 2-ஸ்ட்ரோக் எஞ்சின் மிகப்பெரிய பலமாக இருந்த நிலையில், இன்றைய கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப நவீன 4 ஸ்ட்ரோக் எஞ்சினுடன் மீண்டும் கொண்டு வருவது நடைமுறையில் சாத்தியமில்லை. அதே நேரத்தில், ஆர்எக்ஸ்100 என்ற பெயரை ஒரு சாதாரண கம்யூட்டர் பைக்கில் ஒட்டி அறிமுகம் செய்தால் அந்தப் பெயரின் மதிப்பே பாதிக்கப்படும்.
இந்த பைக்கை ஓட்டியவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு செயல்திறன், டிசைன் மற்றும் ஒட்டுமொத்த பெர்ஃபார்மென்ஸ் இருக்க வேண்டும். இப்படி பல சவால்கள் யமஹாவுக்கு முன் உள்ளன. எனினும், இதுகுறித்து ஏற்கனவே யமஹா இந்தியாவின் முன்னாள் சேர்மன் எய்ஷின் சிஹானா ஹிந்துவுக்கு அளித்த பேட்டியின்போது இந்த பைக்கை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சாதகமான கருத்தை தெரிவித்தார்.
ஆர்எக்ஸ்100 பிராண்டை மீண்டும் கொண்டு வர யமஹாவுக்கு விருப்பம் உள்ளது. ஆனால் பழைய 2 ஸ்ட்ரோக் எஞ்சினை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில், புதிய மாடலுக்கு இந்தப் பெயரை பயன்படுத்துவதே பெரிய சவால் என அவர் குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், ஒரு சரியான புதிய மாடலுக்கு ஆர்எக்ஸ்100 பெயரை கொடுப்பது என்பது யமாஹாவின் திட்டத்தில் இருப்பதாகவும், ஆனால் அதை சாதாரண முடிவாக எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
செயல்திறன் மிக்க எஞ்சின், தனித்துவமான டிசைன் மற்றும் வலுவான ஒட்டுமொத்த பேக்கேஜ் கொண்ட பைக்காக அது இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதேநேரத்தில் இந்த புதிய ஆர்எக்ஸ்100 பைக் 2026ம் ஆண்டுக்கு பிறகு அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக சிஹானா சுட்டிக்காட்டி இருந்தார். இப்போது நாம் 2026ம் ஆண்டு காலத்தின் இறுதிப் பகுதியை சில மாதங்களில் எட்டும் நிலையில், 2026ம் ஆண்டுக்கு பின்னர் அறிமுகமாகலாம் என்று அவர் கூறி இருந்ததன் நினைவு மீண்டும் இந்த பைக் குறித்தான ஆவலை அதிகரித்துள்ளது.
இன்றைய இளம் தலைமுறை நல்ல ஸ்போர்ட்டி பைக்குகளை ஒருபுறம் தேடும் நிலையில், மறுபுறம் பழைய தலைமுறை வாடிக்கையாளர்களிடம் ரெட்ரோ பைக்குகளுக்கான உணர்வு வலுவாக உள்ளது. இதை ராயல் என்ஃபீல்டு, ஜாவா உள்ளிட்ட நிறுவனங்கள் வெற்றிகரமாக பயன்படுத்தி வருகின்றன. எனவே, யமாஹாவும் ஆர்எக்ஸ்100 பெயரை பயன்படுத்தும் நோக்கத்தில் உள்ளதாக தெரிகிறது. ஆர்எக்ஸ்100 பெயர் அதன் வர்த்தகத்திலும், பிராண்டு மதிப்பிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதமுடியும்.
Source: The Hindu


Click it and Unblock the Notifications

