யமஹா இப்படி செய்வாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.. இவ்வளவு விலை உயர்த்திட்டாங்களே!
யமஹா நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஸ்கூட்டர் மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் தற்போது ரேZR 125, ஃபேஸினோ 125 மற்றும் ஏராக்ஸ் 155 ஆகிய ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது யமஹா. இதில் ரேZR மற்றும் ஏராக்ஸ் ஸ்கூட்டர் மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. ஃபேஸினோ மாடலினை விரைவில் யமஹா அப்டேட் செய்யவிருப்பதால் தற்போது விலையை உயர்த்தவில்லை எனத் தெரிகிறது.
யமஹா ரேZR 125: இந்த ஸ்கூட்டரை ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்ட்ரீட் ரேலி என இரண்டு மாடல்களாக விற்பனை செய்து வருகிறது யமஹா. ஸ்டாண்டர்டு மாடலானது டிரம், டிஸ்க் மற்றும் டிஸ்க் டீலக்ஸ் என மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வேரியன்ட்களின் விலைகளையும் சுமார் ரூ.660 வரை உயர்த்தியிருக்கிறது யமஹா.

இந்த விலை உயர்வைத் தொடர்ந்து ரேZR 125 Fi ஹைபிரிட் (ஸ்டாண்டர்டு மாடலானது) ரூ.74,960 முதல் ரூ.82,460 வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஸ்ட்ரீட் ரேலி மாடலானது ரூ.87,560 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் இனி விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த விலை உயர்வைத் தவிர்த்து ஸ்கூட்டரில் டிசைனிலோ, வசதிகளிலோ, மெக்கானிக்கலாகவோ வேறு எந்த மாற்றமும் இல்லை.
யமஹா ஏராக்ஸ் 155: ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரானது ஸ்டாண்டர்டு மற்றும் வெர்ஷன் S என இரண்டு மாடல்களாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டு மாடல்களின் விலைகளையும் ரூ.620 வரை உயர்த்தியிருக்கிறது யமஹா. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து ஸ்டாண்டர்டு மாடலானது ரூ.1,40,320 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், வெர்ஷன் S மாடலானது ரூ.1,43,320 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படவுள்ளது.

யமஹா ஃபேஸினோ 125: ஃபேஸினோ ஸ்கூட்டரின் விலையை யமஹா உயர்த்தவில்லை என்றே தெரிகிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்த ஸ்கூட்டர் அப்டேட் செய்யப்பட்டது. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஃபேஸினோ ஸ்கூட்டர் டீலர்ஷிப்களில் தென்பட்டிருக்கிறது. இதனால், விரைவிலேயே அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸினோ ஸ்கூட்டர் மாடலை யமஹா வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் தற்போது ஃபேஸினோவின் விலை உயர்த்தப்படாததும் அதன் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்ட் மாடலை யமஹா விரைவில் வெளியிடலாம் என்பதனையே காட்டுகின்றன. புதிய ஸ்கூட்டரின் விளக்குகள், பேனல்களில் ஸ்டிக்கரிங் ஆகியவற்றை யமஹா அப்டேட் செய்துள்ளது. புதிய நிறங்களிலும் புதிய ஃபேஸினோ வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், மேலும் சில வசதிகளும் கூட சேர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்கள் பெரிதாக எந்த மாற்றங்களும் இருக்காது என்றே தெரிகிறது.
தற்போதைய மாடல் விற்பனை செய்யப்படுவதை விட சற்று கூடுதல் விலையில் புதிய ஃபேஸினோ ஸ்கூட்டர் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. தற்போதைய மாடலானது ரூ.74,910 முதல் ரூ.95,200 வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேம்படுத்தப்படும் புதிய மாடலானது இதனை விட கொஞ்சம் கூடுதல் விலையில் வெளியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் விலை உயர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், சத்தமே இல்லாமல் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலைகளை உயர்த்தியுள்ளது யமஹா. ஆனால், வாடிக்கையாளர்கள் கவலைப்படும் வகையிலான அளவில் இந்த விலை உயர்வு இல்லை என்பது சற்றே ஆறுதல்.
யமஹாவைப் போலவே மற்ற நிறுவனங்களும் வரும் வாரங்களில் தாங்கள் விற்பனை செய்து வரும் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலைகளை உயர்த்தலாம். இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படுவது தான். எனவே வாடிக்கையாளர்கள் இதுகுறித்து பெரிதாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஃபேஸினோ ஸ்கூட்டரிலும் விலை உயர்வு பெரியளவில் இருக்காது என்றே நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








