இந்த ஸ்போர்ட் பைக்கின் தயாரிப்பையே மொத்தமாக நிறுத்தும் யமஹா.. காரணம் இது தான்!
உலகம் முழுவதும் யமஹா நிறுவவனம் என்றாலே அதன் R சீரிஸ் பைக்குகள் தான் ஞாபகத்திற்கு வரும். சிறிய இன்ஜின் முதல் பெரிய இன்ஜின் வரை அனைத்து வகையிலும் உலகம் முழுவதும் R சீரிஸ் பைக்குகளை யமஹா விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் R15 பைக்கின் மீது இளைஞர்களுக்கு இருக்கும் விருப்பமே தனி தான்.
அப்படியான R சீரிஸ் லைன்-அப்பில் விற்பனை செய்யப்பட்டு வரும் R6 ஸ்போர்ட் பைக் மாடலின் தயாரிப்பை விரைவில் நிறுத்தவிருப்பதாக யமஹா அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையான அமல்படுத்தப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த செய்தி தான். அந்த விதிமுறைக்கு பலியாகிறது யமஹாவின் R6 ஸ்போர்ட் பைக்.

2021ம் ஆண்டே ரோடு லீகல் R6 பைக்கின் விற்பனையை உலகம் முழுவதும் யமஹா நிறுத்திவிட்டது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் ஜப்பானில். 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யூரோ 5 (Euro 5) மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமல்படுத்தலின் காரணமாக இந்த முடிவை யமஹா எடுத்தது. 2021ம் ஆண்டிற்குப் பிறகு ட்ராக்கில் மட்டும் ஓட்டக்கூடிய பைக்காகவே இந்த 600 சிசி இன்ஜின் பைக் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது அந்த ட்ராக் பைக்கின் தயாரிப்பையும் நிறுத்த, ஒட்டுமொத்தமாக இந்த பைக்கிற்கு விடைகொடுக்கப்போகிறது யமஹா. 1999-ம் ஆண்டிலிருந்து ரைடர்களின் மனம் கவர்ந்த பைக்காக இந்த R6 2027ம் ஆண்டில் விடைபெறுகிறது. அதற்கு முன்னதாக இந்த பைக்கை விரும்பும் வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் கடைசியாக ஒரு வாய்ப்பளித்துள்ளது யமஹா.

இந்த R6 பைக்கிற்கான கடைசி கட்ட முன்பதிவு தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகிறது. ஜூலை 1ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 31ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக 'R6 ரேஸ்' பைக்கிற்கான முன்பதிவு நடைபெறுகிறது. இப்போது முன்பதிவு செய்பவர்களுக்கு 2027 பிப்ரவரியில் டெலிவரி செய்யப்படும் என யமஹா அறிவித்திருக்கிறது. அத்துடன் R6 பைக்கின் சகாப்தமும் முடிவுக்கு வருகிறது.
ஐரோப்பாவிலும் இதே ட்ராக் பைக் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கே என்ன நிலவரம் என்ற விவரங்களை யமஹா இது வரை அளிக்கவில்லை. எனினும், ஐரோப்பாவில் ஸ்டாக் இருக்கும் வரை மட்டும் இந்த R6 பைக்கை அந்நிறுவனம் விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பைக்கில் 599 சிசி, இன்லைன்-ஃபோர் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. க்விக்ஷிப்டர் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 14,500 rpm-ல் 118 hp பவர் மற்றும் 10,500 rpm-ல் 61.7 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
இது ட்ராக்கில் மட்டுமே ஓட்டும் வகையில் விற்பனை செய்யப்படும் பைக் என்பதால், இதில் முகப்பு விளக்கு, இன்டிகேட்டர்கள் மற்றும் சைடு மிரர்கள் ஆகிய ரோடு லீகல் பைக்கிற்கான அம்சங்கள் எதுவும் இருக்காது. பின்பக்க விளக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். எனவே இந்த பைக்கை வாடிக்கையாளர்கள் வாங்கினாலும், ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய சாலைகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: R சீரிஸ் லைன்-அப்பில் மிகவும் முக்கியமான பைக்காக இருந்தும் இந்த R6 பைக்கை யமஹா இந்தியாவில் வெளியிட்டதே இல்லை. ஆனால் இதனை விட மிகவும் பவர்ஃபுல்லான 1000 சிசி இன்ஜின் கொண்ட R1 பைக்கைக் கூட முன்னதாக இந்தியாவில் யமஹா விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எப்படியிருந்தாலும், இனி இந்த R6 பைக்கை கண்டிப்பாக இந்தியாவிலும் வெளியாகும் என நாம் எதிர்பார்க்க முடியாது.


Click it and Unblock the Notifications