ராயல் என்ஃபீல்டு கிட்ட கூட இப்படி ஒரு பைக் இவ்வளவு கம்மி விலையில இல்லை.. புது பைக்ல அசத்திட்டாங்க!
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்கிராம்பிளர் 350 (Scrambler 350) பைக்கை அப்டேட் செய்துள்ளது யெஸ்டி (Yezdi). இதுவும் மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாகவே செயல்பட்டு வருகிறது. இந்த கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தான் தற்போது ஜாவா, யெஸ்டி மற்றும் BSA ஆகிய மூன்று கிளாஸியான பிராண்டுகளும் உள்ளன.
இதில் BSA பிராண்டின் ஸ்கிராம்பிளர் 650 பைக் மாடலையும் இன்று தான் வெளியிடப்பட்டது. அத்துடன் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் யெஸ்டி ஸ்கிராம்பிளர் 350 பைக் மாடலும் புதிதாக அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. மெக்கானிக்கலாக, வசதிகள் ரீதியாக மற்றும் டிசைன் ரீதியாக என 360 டிகிரியிலும் இந்த பைக் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. யெஸ்டி ஸ்கிராம்பிளர் 350 பைக்கின் அப்டேட் குறித்து விரிவாக இங்கே நாம் பார்க்கலாம்.

சிறப்பான ஹேண்டிலிங்கிற்காக பைக்கின் சேஸியை ஸ்டிஃப் ஆக்கப்பட்டிருக்கிறது. இதனால் பைக்கின் உயரமும் 13 மிமீ வரை அதிகரித்து 813 மிமீ ஆக உள்ளது. மூன்று ப்ரீசெட் மோடுகளுடன் ட்ராக்ஷன் கண்ட்ரோல் வசதி அப்டேட்டில் புதிதாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரியர் வீலில் ஸ்விட்சபள் ஏபிஎஸ்ஸுடன், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி முந்தைய பைக்கில் இருந்தது போலவே புதிய பைக்கிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சஸ்பென்ஷன் செட்டப்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப்புகள் தான். இந்த சஸ்பென்ஷன் செட்டப்புகளானது முறையே 150 மிமீ டிராவல் மற்றும் 130 மிமீ டிராவலைக் கொண்டிருக்கின்றன. 200 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸுடன் இந்த சஸ்பென்ஷன் செட்டப்புகள் இணையும் போது எந்தவிதமான கடினமான பாதைகளையும் எதிர்கொள்ளும் திறனை ஸ்கிராம்பிளர் 350 பைக் பெறுகிறது.

அப்டேட்டிற்கு முந்தைய பைக்கில் இருந்த அதே 334 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் தான் புதிய பைக்கிலும் உள்ளது. ஆனால் முன்பை விட கொஞ்சமே கொஞ்சம் அதிகமாக 29.5 hp பவரையும், 30 Nm டார்க்கையும் இந்த இன்ஜின் உற்பத்தி செய்கிறது. இந்த இன்ஜினானது 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
டிசைனில் மாற்றம் தெரிவதை வெளிப்படையாகவே நாம் பார்க்க முடிகிறது. முன்னர் இந்த ஸ்கிராம்பிளர் 350 பைக்கானது சப்டிலான டிசைனைக் கொண்டிருந்த நிலையில், தற்போது கொஞ்சம் ஃபிளாஷியாக இருக்கிறது. நான்கு நிறங்களில் புதிய பைக் வெளியாகியிருக்கும் நிலையில், கருப்பு நிறத்தைத் தவிர மற்ற மூன்று நிறங்களும் டூயல் டோனில் இருக்கின்றன. பைக்கில் பக்கவாட்டில் 69 என்ற எண்களுடன் ஓவல் வடிவ பேனல் புதிதாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எரிபொருள் டேங்க் மற்றும் சைடு பேனல்களில் கிராஃபிக்ஸும் தனித்துவமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
முந்தைய பைக் மாடலில் ட்வின் எக்சாஸ்ட் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் புதிய பைக்கில் சிங்கிள் எக்சாஸ்ட் செட்டப்பே கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனைப் பயன்படுத்த ஹேண்டில்பாரின் இடதுபக்கம் 4 வே ஸ்விட்ச்கியர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வகைகளிலும் சிறப்பான மற்றும் கிளாஸியான ரக்கட்னஸை வெளிப்படுத்தும் வகையிலான பைக்காக இந்த ஸ்கிராம்பிளர் 350 இருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட புதிய யெஸ்டி ஸ்கிராம்பிளர் 350 பைக்கின் விலை ரூ.2 லட்சத்தில் தொடங்குகிறது. லெகஸி பிளாக் நிறமே இந்த குறைந்தபட்ச விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து OG யெல்லோ மற்றும் ரோக் ரெட் ஆகிய நிறங்கள் கொண்ட ஸ்கிராம்பிளர் 350 பைக் ரூ.2.06 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ரேலி ப்ளூ நிறம் ரூ.2.09 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் ஸ்கிராம்பிளர் பைக் என்றால் அது இந்த யெஸ்டி ஸ்கிராம்பிளர் 350 தான். அனைத்து வகைகளிலும் சிறப்பான மற்றும் இளைஞர்கள் வாங்குவதற்கு ஸ்டைலான ஒரு ஸ்கிராம்பிளர் பைக் மாடலாக இந்த ஸ்கிராம்பிளர் 350 இருக்கிறது. ஒரே ஒரு குறை போதுமான ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் செண்டர்கள் இல்லாதது தான்.


Click it and Unblock the Notifications