டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக் வாங்கும் விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! முழு சார்ஜில் 60- 120கிமீ-க்கு ஓடும்!
செலியோ இ-மொபிலிட்டி (Zelio E-Mobility) நிறுவனம் அதன் புதிய கிரேசி (Gracy) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2026ஆம் ஆண்டை முன்னிட்டு அப்கிரேட் செய்து அறிமுகம் செய்துள்ளது. டெல்லியில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ரைடுஆசியா இவி எக்ஸ்போ 2026 (RideAsia EV Expo 2026) கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
செலியோ இ-மொபிலிட்டி நிறுவனம் கிரேசி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இளம் தலையினரையும், தினந்தோறும் குறுகிய தூர பயணங்களை மேற்கொள்ளும் பெண்களையும் டார்க்கெட் செய்து குறைவான எடையில் உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், கிரேசி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2026ஆம் ஆண்டை முன்னிட்டு அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்னோ பேர்ல் வெள்ளை, பிரைட் பிளாக், மஞ்சள், நோபிள் மெட்டல் கிரே, ஃப்ளோரெஸ்செண்ட் பச்சை மற்றும் ஹுபிஸ்கஸ் பர்பிள் என்கிற கலர் ஆப்ஷன்களில் 2026 கிரேசி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆக ரூ.59,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைவான வேகத்தில் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் சிறந்த மதிப்பாக கருதப்படும் கிரேசி ஸ்கூட்டரை வாங்கும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஹெல்மெட்டை வழங்க செலியோ இ-பொபிலிட்டி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இது குறை-வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். அதாவது, இதில் மணிக்கு 25கிமீ வேகத்திற்கு மேல் செல்ல முடியாது.
இருப்பினும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 60கிமீ-இல் இருந்து 120கிமீ தொலைவிற்கு செல்லலாம். 2026 கிரேசி ஸ்கூட்டரை ஈய அமில (Lead Acid) பேட்டரி அல்லது லித்தியம்-இரும்பு (Lithium-ion) பேட்டரி உடன் வாங்கலாம். ஈய அமில பேட்டரி ஆனது இரு விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் நிலையில், அதேபோல் லித்தியம்-இரும்பு பேட்டரியும் 60 வோல்ட்/32 ஆம்பியர் மற்றும் 72 வோல்ட்/ 32 ஆம்பியர் என இரு விதமான திறன்களில் கிடைக்கும்.
இதில் ஈய அமில பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்ப 8-இல் இருந்து 10 மணிநேரமும், லித்தியம்-இரும்பு பேட்டரிக்கு 4-இல் இருந்து 5 மணிநேரமும் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரிகள் வேறுப்பட்டாலும், அவை ஆற்றலை வழங்கும் 60/72 வோல்ட் BLDC மோட்டார் ஒன்றே ஆகும். மோட்டார் வழங்கப்பட்டாலும், 2026 கிரேசி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 50 லிட்டர்கள் கொள்ளளவில் பெரிய பூட்ஸ்பேஸ் இடவசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறை-வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே அதிக பூட்ஸ்பேஸை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், கிரேசி ஆகும். சஸ்பென்ஷனுக்கு இந்த இ-ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஹைட்ராலிக் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் சுருள்களால் ஆன சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக் பணிகளுக்கு ஸ்கூட்டரின் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், ஸ்கூட்டரின் பின் சக்கரத்தில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றுடன், ஸ்கூட்டர் திருடு போவதை எச்சரிக்கும் அலாரம், யுஎஸ்பி சார்ஜிங் வசதி, ஃபுட்ரெஸ்ட், கீலெஸ் டிரைவ், எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் உள்ளிட்டவையும் புதிய 2026 கிரேசி ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த இ-ஸ்கூட்டரின் மோட்டார், கண்ட்ரோலர் மற்றும் ஃபிரேமுக்கு செலியோ இ-மொபிலிட்டி நிறுவனம் இரண்டு வருட உத்தரவாதத்தை அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசலில் வளைந்து, வளைந்து செல்வதற்கு செலியோ இ-பொபிலிட்டியின் 2026 கிரேசி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும். அதற்கேற்ப இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், எடை குறைந்ததாகவும் உள்ளது. மேலும், ஸ்டைலான தோற்றத்தில் வடிவமைக்கப்படுவதால், இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய இளம் தலைமுறையினரை வெகுவாக கவரும் என செலியோ இ-மொபிலிட்டி மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications