க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் ஸ்கூட்டரை அப்டேட் செய்த நிறுவனம்.. பார்க்கவே பயங்கரமா இருக்கே!
பெரிய இன்ஜின் கொண்ட மேக்ஸி ஸ்கூட்டர் மாடல்களுக்கு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மவுசு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் தான். எனவே, புதிய மேக்ஸி ஸ்கூட்டர்களை வெளியிடுவதுடன், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர் மாடல்களையும் பல்வேறு மேம்பட்ட வசதிகளுடன் நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஸான்டீஸ் (Zontes) நிறுவனம் தங்களுடைய மேக்ஸி ஸ்கூட்டர் மாடல்களை மேம்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் ZT368-G ETC என்ற மேக்ஸி ஸ்கூட்டர் மாடலை விற்பனை செய்து வருகிறது இந்த சீன நிறுவனம். இதனையே தற்போது அப்டேட் செய்துள்ளது. ஸ்கூட்டர்களில் யாரும் எதிர்பார்க்காத வகையிலான பல்வேறு புதிய மற்றும் மேம்பட்ட வசதிகளைக் கொடுத்து அப்டேட் செய்துள்ளது. அது மட்டுமின்றி தினசரிப் பயன்பாட்டை இலகுவாக்கும் வகையிலான மேம்பாடுகளும் புதிய ஸ்கூட்டரில் செய்யப்பட்டுள்ளன. அவை என்னென்னவென்று பார்க்கலாம்.

முதலில் இந்த மேக்ஸி ஸ்கூட்டரின் மெக்கானிக்கல் அம்சங்கள் குறித்துப் பார்த்துவிடலாம். இந்த ஸ்கூட்டரில் 368 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொடுத்துள்ளது ஸான்டீஸ். இந்த இன்ஜினானது 7,500 rpm-ல் 38 hp பவர் மற்றும் 6,000 rpm-ல் 40 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட ஸ்கூட்டரில் மெக்கானிக்கலாக இந்த இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. இந்த இன்ஜின் லிட்டருக்கு 28.5 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுப்பதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.
இப்போது புதிய மேம்பாடுகளுக்கு வருவோம். அப்டேட் செய்யப்பட்டிருக்கும் புதிய ZT368-G ETC ஸ்கூட்டரில் பெரிய மாற்றம் என்றால் அது ரைடு-பை-வயர் தொழில்நுட்பம் தான். இதன் மூலம் திராட்டிலை முறுக்கும் போது, சென்சார்கள் மூலம் அது ECU-விற்கு சென்று, அதன் மூலமே அதற்கேற்ற வகையில் இன்ஜின் இயக்கப்படுகிறது. இது எலெக்ட்ரானிக்கலாக செயல்படும் ஒரு மேம்பட்ட அம்சமாகும். வழக்கமான ஸ்கூட்டர்களில் கேபிள் கொடுக்கப்பட்டிருக்கும். அது மெக்கானிக்கலாக செயல்படும்.

இந்த ஸ்கூட்டரை டூரிங் அல்லது அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்றதாகவே தான் ஸான்டீஸ் வடிவமைத்திருக்கிறது. எனவே நீண்ட தூரப் பயணங்களில் பயன்படுத்தும் வகையில் புதிய அப்டேட்டில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியையும் கொடுத்துள்ளது. இதுதவிர ஹீட்டட் கிரிப்கள் மற்றும் ஹீட்டட் சீட் ஆகிய அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வசதியை இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மூலமாக நாம் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, ஸ்கூட்டரின் ஹேண்டில் பாரில் இரண்டு பக்கமும் ஸ்விட்ச்கியர் லேஅவுட்டை மாற்றியமைத்திருக்கிறது. பயனாளர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இவை மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. 2026ம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட ZT368-G ETC ஸ்கூட்டரை, கிரீன், கிரே, பிளாக் மற்றும் சேண்டு என நான்கு நிறங்களில் வெளியிட்டிருக்கிறது ஸான்டீஸ்.
இந்தியாவில் ஸான்டீஸின் பைக்குகள் மட்டுமே விற்பனையில் இருக்கின்றன, ஸ்கூட்டர் இல்லை. 350 R, 350 X, GK 350, 350 T, 350 T ADV ஆகிய ஐந்து ஸான்டீஸ் பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. புதிதாக அப்டேட் செய்யப்பட்டிருக்கும் ZT368-G ETC ஸ்கூட்டரின் இந்திய வெளியீடு குறித்த தகவல்கள் இல்லை. அப்படியே வெளியானாலும் இதே 368 சிசி இன்ஜினுடன் வெளியாகாது. 350 சிசிக்கு உள்ளாக மாற்றியமைக்க வேண்டிய தேவை இருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மேக்ஸி ஸ்கூட்டர்கள் இப்போது தான் தலையெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. மாஸ் மார்க்கெட் பிரிவில் அதிகபட்சமாக 175 சிசி வரையிலான இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர்களே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. BMW நிறுவனம் மட்டுமே 350 சிசி இன்ஜின் கொண்ட மேக்ஸி ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. மேக்ஸி ஸ்கூட்டருக்கான சந்தை விரிவாகும் போது மேற்கூறிய ஸான்டீஸ் ஸ்கூட்டர் மாடலையும் இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








