சவாலான விலையில் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் அறிமுகம்!
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய பைக் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. முந்தைய ஸ்டார் சிட்டி பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் போட்டியாளர்களை எதிர்கொள்ள வந்திருக்கிறது.
தோற்றத்தில் மட்டுமல்லாது எஞ்சினிலும் மாற்றங்களுடன் வந்துள்ளது. இந்த புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கின் கூடுதல் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.
செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் படிக்கலாம்.

எஞ்சின்
முந்தைய ஸ்டார் சிட்டி பைக்கில் பொருத்தப்பட்டிருந்த அதே 109.7சிசி ஈக்கோத்ரஸ்ட் எஞ்சின்தான் இந்த புதிய மாடலிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால், கூடுதல் மைலேஜ் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதே எஞ்சின் ஜூபிடர், வீகோ ஸ்கூட்டர்களிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்
பழைய ஸ்டார் சிட்டி பைக் 8.18 எச்பி பவரையும், 8.1 என்எம் டார்க்கையும் அளிக்கும். ஆனால், புதிய மாடலின் எஞ்சின் 8.3 எச்பி பவரையும், 8.7 என்எம் டார்க்கையும் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறைவான வேகத்திலும் கூட சிறப்பான இழுவை சக்தியை வழங்கும். 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட இந்த பைக் 0- 60 கிமீ வேகத்தை 8 வினாடிகளில் கடக்கும். மணிக்கு அதிகபட்சமாக 90 கிமீ வேகத்தில் செல்லும்.

அடேங்கப்பா மைலேஜ்
இந்த புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக் 85 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

பிரேக், சஸ்பென்ஷன்
டிஸ்க் பிரேக் இல்லை. முன்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக்கும், பின்புறத்தில் 110மிமீ டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதேபோன்று, சஸ்பென்ஷன் அமைப்பை பொறுத்தவரையில், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட் கொண்ட ஷாக் அப்சார்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதர அம்சங்கள்
அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், சர்வீஸ் இண்டிகேட்டர், கிளியர் லென்ஸ் இண்டிகேட்டர் விளக்குகள், குரோம் ஹேண்டில்பார்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மஃப்ளர் கார்டு, அலாய் வீல்கள், டியூரா லைஃப் டயர்கள் உள்ளிட்ட ஆக்சஸெரீஸ்களை கொண்டுள்ளது. இந்த பைக்கின் டியூரா லைஃப் டயர்கள் 12 சதவீதம் கூடுதல் சாலை பிடிமானத்தையும், 20 சதவீதம் கூடுதல் உழைப்பையும் தரும். புதிய ஸ்டிக்கர்களும் கவர்ச்சியூட்டுகின்றன.

விலை
ரூ.44,000 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு, நீலம், கறுப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








