நிசான் சன்னி... பாதுகாப்பு, கையாளுமையில் ஜோர்

பிற்பகல் 3.30 மணிக்கு அலுவலக பார்க்கிங் பகுதியிலிருந்து சன்னியை கிளப்பினோம். விளம்பரத்தில் வருவது போன்று பெரிய்ய்யய காராக இருப்பதால் மெதுவாக பார்க்கிங் ஏரியாவிலிருந்து வெளியேறி மெதுவாக போக்குவரத்து நெரிசலில் சொருகினோம்.
மிதமான பிற்பகல் டிராபிக்கில் சன்னியின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அம்சமாகவே கடந்து சென்றது. பெரிய கார் என்பது வெளிப்புறத்தில் மட்டும்தான். சன்னியை ஓட்டும்போது லாவகமாகவே டிராபிக் நெரிசலை கடந்து சென்றது.
நகரத்துக்கு வெளியே செல்ல 50 நிமிடங்கள் பிடித்தது. இறுதியாக பெங்களூர்-மைசூர் நைஸ் சுங்கச்சாலையை எட்டினோம். டோல் கேட்டில் கட்டணத்தை செலுத்தி விட்டு கியரை மாற்றி பரபரத்த அந்த நெடுஞ்சாலையில் சன்னியை தட்டி விட்டோம்.
ஆரம்ப வேகத்தில் சிறிது மந்தம் காட்டினாலும், மித வேகத்தில் அழகாக பறக்க துவங்கியது சன்னி. முதலில் தனியாக சென்று சன்னியை பறக்க விட்டோம். அடுத்து டிரைவ் ஸ்பார்க் டீமை சேர்ந்த 4 நண்பர்களையும் ஏற்றி சன்னியின் எஞ்சின் திறனை பரிசோதித்தோம். 100 கிமீ வேகம் வரை திக்காமல் திணறாமல் சென்றது சன்னி.
மேலும், நாம் டெஸ்ட் டிரைவ் செய்த நைஸ் நெடுஞ்சாலையில் முன்னே சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருந்த வாகனங்களை அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக கடந்து சென்றது சன்னி.
பெர்ஃபார்மென்சிஸ் பின்னுகிறது என்று கூற முடியாவிட்டாலும் ஒரு திருப்திகரமான கையாளுமை கொண்ட காராக இருக்கிறது. சன்னியின் சஸ்பென்ஷனை சோதிக்க நைஸ் சாலையிலிருந்து பக்கவாட்டில் இருந்த குண்டு குழி சாலையில் இறக்கி சோதனை செய்தோம். சஸ்பென்ஷனும் நன்றாகவே இருக்கிறது.
மேலும், டிரைவர் மற்றும் பயணிகள் பக்கம் ஏர்பேக்குகள், இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை சன்னி ஓர் முழு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார் என்ற முத்திரையை பெற வைக்கிறது.
இருளும், பனியும் இணைந்து இருக்கும் வேளை நெருங்கியதால் மறு பக்க நைஸ் நெடுஞ்சாலையில் காரை திருப்பி சீறிப்பாய்ந்து வந்து நைஸ் சாலையிலிருந்து விடை பெற்றோம். மீண்டும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குள் புகுந்து 8 மணியளவில் அலுவலகத்தை அடைந்தோம்.
தோற்றம், எஞ்சின், பாதுகாப்பு மற்றும் வசதிகள் என அனைத்திலும் மன நிறைவு தரும் காராகவும், இந்திய வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பாக இருக்க வேண்டும் என்று நிசான் விரும்பியிருப்பதை உணர முடிந்தது.
சன்னியின் எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
எக்ஸ்இ- ரூ.5.85 லட்சம்
எக்ஸ்எல்-ரூ.6.97 லட்சம்
எக்ஸ்வி-ரூ.7.78 லட்சம்
விரைவில் டீசல் மாடல் சன்னியை அறிமுகப்படுத்தவும் நிசான் திட்டமிட்டுள்ளது. சன்னியின் டீசல் மாடல் விற்பனையில் நிச்சயம் புதிய உத்வேகம் பெறும் என்பது திண்ணம்.


Click it and Unblock the Notifications








